டி20 உலகக் கோப்பையில் இருந்தும் ஜடேஜா விலகல்?
முழங்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ஆசிய கோப்பையிலிருந்து ஜடேஜா விலகியுள்ளார். இந்நிலையில் டி20 உலகக்கோப்பையிலும் அவரால் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்ற தகவலால் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்படும் ரவீந்திர ஜடேஜா இந்திய அணியின் சிறந்த ஆல்ரவுண்டராக கருதப்படுகிறார்.
ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளுக்கு எதிராக அட்டகாசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்தார். அப்போது அவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதில் மாற்று வீரராக ஆல்ரவுண்டரான அக்சர் படேலை பிசிசிஐ நேற்று அறிவித்தது.
தொடர்ந்து ஜடேஜாவுக்கு மேற்கொண்ட மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் காயத்தின் அளவு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் அவர் முழங்கால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளார். அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் காயத்தில் இருந்து மீண்டு வர மூன்று முதல் ஆறு மாதங்கள் ஆகும் என தெரியவந்துள்ளது.
உலகக்கோப்பை தொடரில் வாய்ப்பில்லை!
இதனால் ஜடேஜா அடுத்த மாதம் 16ம் தேதி ஆஸ்திரேலியாவில் துவங்க உள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடமாட்டார் என தெரியவந்துள்ளது.
இந்திய அணியில் அனுபவமிக்க மற்றும் சிறந்த ஆல்ரவுண்டரான ஜடேஜா டி20 உலகக்கோப்பையில் விளையாட முடியாத நிலை இந்திய அணிக்கு நிச்சயம் பின்னடைவை ஏற்படுத்தும்.
கடந்த மே மாதம் நடைபெற்ற ஐபில் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஜடேஜா காயம் காரணமாக விலகியது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அவர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து விரைவில் சர்வதேச போட்டிகளில் விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
ஆசிய கோப்பை : ஹாங்காங்கை பந்தாடிய கோலி, சூர்ய குமார்!