எல்லிஸ் பெர்ரி புதிய சாதனை: பிளே-ஆஃப்க்கு முன்னேறிய RCB!

Published On:

| By Selvam

WPL 2024 RCB into playoff

2024 மகளிர் பிரீமியர் லீக் தொடரின் பிளே-ஆஃப் சுற்றுக்கு ஏற்கனவே டெல்லி மற்றும் மும்பை அணிகள் தகுதி பெற்றுருந்தது. இந்நிலையில், அந்த சுற்றுக்கு முன்னேற, தனது கடைசி லீக் போட்டியில் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் மும்பை அணியை எதிர்கொண்டது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

இப்போட்டியில், முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 2024 மகளிர் பிரீமியர் லீக் தொடரில், இப்போட்டி நடைபெறும் டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில், இதற்கு முன்பு நடைபெற்ற 7 போட்டிகளில், முதலில் பந்துவீசிய அணி 1 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், ஆர்.சி.பி மகளிர் அணியின் இந்த டாஸ் தேர்வு ரசிகர்களை திகைப்பில் ஆழ்த்தியது.

WPL 2024 RCB into playoff

இதை தொடர்ந்து, மும்பை அணிக்காக துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஹேலி மேத்யூஸ் மற்றும் சஜனா ஒரு நல்ல துவக்கத்தையே வழங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 43 ரன்கள் சேர்த்தபோது, ஹேலி மேத்யூஸ் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதை தொடர்ந்து சஜனா பொறுப்பாக விளையாடி ரன் சேர்த்துக்கொண்டிருக்க, யாரும் எதிர்பார்க்காத பந்துவீச்சை வெளிப்படுத்தினார், ஆர்.சி.பி-யின் எல்லிஸ் பெர்ரி. இவரின் பந்துவீச்சில் முதலில் சஜனா ஆட்டமிழக்க, அடுத்து வந்தவர்கள் மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்து ஃபெவிலியன் திரும்பினர்.

65-2 என இருந்த மும்பை அணியின் ஸ்கோர்-கார்டு நொடிப்பொழுதில் 82-7 என மாறியது. அனைத்து பாராட்டுகளும் எல்லிஸ் பெர்ரிக்கே. 4 பவுல்டு, 2 எல்.பி.டபுள்யூ என மொத்தம் 6 விக்கெட்களை கைப்பற்றிய எல்லிஸ் பெர்ரி, WPL வரலாற்றில் 6 விக்கெட்களை கைப்பற்றிய முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.

இதன் காரணமாக, மும்பை அணி 113 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

114 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணி, துவக்கத்தில் சற்று தடுமாற்றத்தை சந்தித்தது. துவக்க ஆட்டக்காரர்கள் ஸ்மிருதி மந்தனா, சோஃபி மோலினியூக்ஸ், பின் வந்த சோஃபி டிவைன் என மூவரும் சொற்ப ரன்களுக்கு வெளியேறினர்.

ஆனால், அடுத்து ஜோடி சேர்ந்த எல்லிஸ் பெர்ரி – ரிச்சா கோஷ் இணை, தேவையான வேகத்தில் பொறுமையாக அணியின் எண்ணிக்கையை உயர்த்தியது. இந்த ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் 15வது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டிய பெங்களூரு, 3வது அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

தனது சிறப்பான ஆட்டத்தால் பெங்களூரு அணிக்கு வெற்றியை உறுதி செய்த எல்லிஸ் பெர்ரி, இப்போட்டிக்கான ‘ஆட்ட நாயகி’ விருதை வென்றார்.

இந்த போட்டியின் முடிவில், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் டெல்லி அணியும், 2வது இடத்தில் மும்பை அணியும், 3வது இடத்தில் பெங்களூரு அணியும் உள்ளது.

மிக சிறப்பான ரன்-ரேட் உடன் டெல்லி அணி முதலிடத்தில் இருக்கும் நிலையில், இந்த தொடரின் தனது கடைசி லீக் போட்டியில் கிட்டத்தட்ட 120 ரன்கள் அல்லது 90 பந்துகள் வித்தியாசத்தில் தோற்றால் ஒழிய, டெல்லி அணி முதலிடத்திலேயே தொடரும்.

இதன் காரணமாக, வரும் மார்ச் 15 அன்று நடைபெறவுள்ள எலிமினேட்டர் போட்டியில், மீண்டும் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அப்போட்டியில், வெற்றிபெரும் அணி வரும் மார்ச் 17 அன்று டெல்லி அணியுடன் இறுதிப்போட்டியில் மோதும். 2023 WPL தொடரின் இறுதிப்போட்டியில், டெல்லி மற்றும் மும்பை அணிகள் மோதிக்கொண்டது என்பதும், அப்போட்டியில் மும்பை அணி வாகை சூடியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: தினமும் சிறிது ரெட் ஒயின் குடிப்பது ஆரோக்கியமானதா?

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா : தஞ்சாவூர் அசோகா அல்வா

Suriya : மீண்டும் ஷூட்டிங் செல்லும் ‘கங்குவா’ படக்குழு?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel