”வெளிநாட்டிலோ, பல டெஸ்ட் போட்டிகளிலோ யார் வேண்டுமென்றாலும் ஜெயிக்க முடியும், ஆனால் அவை தோனி வென்ற 3 ஐசிசி கோப்பைகளுக்கு ஒருபோதும் ஈடாகாது” என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் 17வது தொடரில் விளையாடி வரும் 10 அணிகளில் இதுவரை தோல்வியையே சந்திக்காத அணிகளாக ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மட்டுமே உள்ளன. இதனால் இரு அணிகளும் முறையே முதல் இரண்டு இடத்தில் உள்ளன.
அதே நேரத்தில் விளையாடிய 4 போட்டிகளில் 2ல் வென்று 4வது இடத்தில் உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சொந்த மைதானமான சேப்பாக்கில் விளையாடிய 2 போட்டிகளிலும் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில் மூன்று போட்டிகளிலும் தொடர் வெற்றியை பெற்றுள்ள ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா அணி, இன்று (ஏப்ரல் 8) சேப்பாக்கில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணியை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில் போட்டிக்கு முன்னதாக கேகேஆர் ஆலோசகரான கவுதம் கம்பீர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
வெற்றிகரமான கேப்டன் என்றால் தோனி தான்!
அப்போது அவர், சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனியை வெகுவாக பாராட்டி பேசியது பலருக்கும் ஆச்சரியம் அளித்துள்ளது.
அவர், “நான் வெற்றிபெற விரும்புகிறேன். அதில் மிகத் தெளிவாக இருக்கிறேன். களத்தில் இரு அணிகளுக்கு இடையே நண்பர்கள், பரஸ்பர மரியாதை, எல்லாம் உண்டு, ஆனால் மைதானத்தில் இருக்கும்போது நான் வெற்றிபெறவே நினைப்பேன். ஒவ்வொரு முறை போட்டி முடிந்த பிறகும் நான் வெற்றிபெறும் அணியின் டிரஸ்ஸிங் அறைக்கே செல்ல விரும்புவேன்” என்று கம்பீர் பேசினார்.
மேலும், “இந்தியாவுக்கு கிடைத்த மிக வெற்றிகரமான கேப்டன் என்றால் எம்.எஸ் தோனி தான். அவரைப்போல் மூன்று ஐ.சி.சி கோப்பைகளை வென்றவர்கள் யாரும் கிடையாது. வெளிநாட்டு தொடர்களையோ, பல டெஸ்ட் தொடர்களையோ யார் வேண்டுமென்றாலும் ஜெயிக்கலாம். ஆனால் அவை எதுவும் மூன்று ஐசிசி கோப்பைகளை விட பெரியது கிடையாது.
ஒரு ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டாலும்…
மைதானத்தில் இருக்கும்போது, கணித்து விளையாடும் தோனியின் அபார கிரிக்கெட் திறமையை எப்போதும் ரசித்திருக்கிறேன். அவர் மிக திறமையானவர். சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டு எதிரணியை கட்டுப்படுத்தத் தெரிந்தவர், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அழகாக பேட்டிங் செய்ய தெரிந்தவர்.
கடைசிவரை விடாமுயற்சியுடன் போராடும் அவரது குணம் எனக்கு பிடிக்கும். 6 அல்லது 7வது பேட்ஸ்மேனாக களமிறங்கும் தோனி ஒரு ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டாலும், அதனை அவரால் முடிக்க முடியும்” என்று தோனியை வெகுவாக பாராட்டி பேசினார்.
தொடர்ந்து, “சிஎஸ்கே அணி வீரர்கள் அனைவருக்கும் சவால் விடக்கூடிய பந்துவீச்சு தாக்குதல் கேகேஆர் அணியிடம் உள்ளது. எனவே, தோனியை விட இந்த போட்டியில் நான் திட்டமிட்டபடி கேகேஆர் அணியை வழிநடத்துவேன். உண்மையில் தோனியை வெல்ல ஒவ்வொரு விஷயத்திலும் அவரை விட சிறந்தவராக இருக்க வேண்டும். ஆனால் அதற்கு அவர் விட்டுக்கொடுக்க மாட்டார் என்று தெரியும். அதிலும் சென்னை மைதானத்தில் அவர் கடைசி வரை சண்டை செய்வார் என்பதே உண்மை” என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
விக்ரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு… இடைத்தேர்தல் எப்போது?