உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று பாகிஸ்தானை எதிர்கொண்ட ஜிம்பாவே அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றுள்ளது.
குரூப் 2 ல் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் – ஜிம்பாவே அணிகளுக்கு எதிரான ஆட்டம் ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் இன்று (அக்டோபர் 27) நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
பாகிஸ்தானுக்கு எளிய இலக்கு!
அதன்படி முதலில் களமிறங்கிய ஜிம்பாவே அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 31 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் முகமது வாசிம் ஜூனியர் 4 விக்கெட்டுகளையும், சதாப் கான் 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
இதனையடுத்து 129 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி பாகிஸ்தான் பேட்டிங்கை தொடங்கியது.
சொதப்பிய முன்னணி வீரர்கள்!
எனினும் ஆரம்பமே அதிர்ச்சியாக பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் பாபர் அசாம் 4 ரன்னிலும், ரிஸ்வான் 14 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
பின்னர் களமிறங்கிய மசூத் ஒருபுறம் நிதானமாக ஆடினாலும், மறுபுறம் இப்திகார்(5), சதாப் கான்(17), ஹைதர் அலி(0) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
அவர்களை தொடர்ந்து நன்றாக விளையாடி வந்த மசூத் 44 ரன்களில் பரிதாபமாக வெளியேறினார்.
அதனை தொடர்ந்து வாசிம் ஜூனியர் மற்றும் நவாஷ் இருவரும் பாகிஸ்தான் அணியை கரை சேர்க்க போராடினார்.
கடைசி ஒவரில் பதற்றம்!
இதனால் கடைசி 6 பந்துகளில் 11 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.
முதல் 3 பந்துகளில் ஒரு பவுண்டரி உட்பட 8 ரன்கள் எடுக்கப்பட்ட நிலையில், 5வது பந்தில் நவாஸ் 22 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இதனால் கடைசி 1 பந்தில் 3 ரன்கள் எடுக்க வேண்டும் என்பதால் பாகிஸ்தான் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு தொற்றி கொண்டது.
பலத்த நெருக்கடிக்கு இடையே களம் கண்ட ஷாகின் அப்ரிடி லாங்க் ஆன் திசையில் பந்தை தட்டி விட்டு, ஆட்டத்தை டை செய்யும் நோக்கோடு 2வது ரன்னுக்கு ஓடி வந்தார்.
ஆனால் துரிதமாக செயல்பட்ட ஜிம்பாவே அணியின் விக்கெட் கீப்பர் சக்காப்வா அப்ரிடியை ரன் அவுட் செய்தார்.
பின் தங்கியுள்ள பாகிஸ்தான்!
இதன்மூலம் ஜிம்பாவே அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. மேலும் 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கும் முன்னேறியது.
அதே வேளையில் நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஆடிய 2 ஆட்டங்களில் தோல்வியை தழுவிய பாகிஸ்தான் அணி புள்ளிபட்டியலில் ஒரு புள்ளிகளை கூட பெறாமல் பின் தங்கியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
பத்திரிக்கையாளர்கள் குரங்குகளா? அண்ணாமலைக்கு குவியும் கண்டனங்கள்!
98 போல மீண்டும் ஆக்கிவிடாதீர்கள்: போலீஸிடம் கண் கலங்கிய ஜமாத் புள்ளிகள்!