இந்தியாவுக்கு மீண்டும் பெருமை சேர்த்த தங்கமகன் நீரஜ் சோப்ரா
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா உலக ஈட்டி எறிதல் தரவரிசை பட்டியலில் முதன்முறையாக முதல் இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில், ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று சாதனை படைத்தார்.
அதுதான், ஒலிம்பிக் தடகளப் போட்டியில் இந்தியா வென்ற முதல் தங்கப்பதக்கம் ஆகும். இதனால், அவர் ’இந்தியாவின் தங்க மகன்’ என்று மக்களால் கொண்டாடப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பரில், சூரிச்சில் நடந்த டயமண்ட் லீக் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ’முதல் இந்தியர்’ என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றார்.
அதன்பின்னர் கடந்த 5ஆம் தேதியன்று தோஹாவில் நடந்த மதிப்புமிக்க டயமண்ட் லீக் தொடரின் முதல் லெக்கில் 88.67 மீ தூரம் ஈட்டி எறிந்து தங்கம் வென்று சாதனை படைத்தார்.
இந்நிலையில் உலக தடகள அமைப்பு நேற்று இரவு (மே 22) ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டிக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 1455 புள்ளிகளுடன் முதன்முறையாக உலகின் நம்பர் ஒன் வீரராக உருவெடுத்துள்ளார் நீரஜ் சோப்ரா.
ஈட்டி எறிதலில் தற்போதைய உலக சாம்பியனான கிரெனடா நாட்டின் ஆண்டர்சன் பீட்டர்ஸை (1433) விட 22 புள்ளிகள் அதிகம் பெற்று சோப்ரா முதலிடத்தைப் பிடித்த்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற செக் குடியரசின் ஜக்குப் வாட்லெஜ் 1416 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி உலகத் தரவரிசையில் இரண்டாம் இடத்திற்கு 25 வயதான சோப்ரா முன்னேறிய நிலையில், 9 மாத இடைவெளியில் தற்போது முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இதன்மூலம் தடகள போட்டிக்கான உலக தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வீரர் என்ற மகத்தான சாதனையை நீரஜ் சோப்ரா படைத்துள்ளார்.
நீரஜ் அடுத்ததாக ஜூன் 4ஆம் தேதி நெதர்லாந்தின் ஹெஞ்சலோவில் நடக்கும் ஃபேன்னி பிளாங்கர்ஸ்-கோயன் கேம்ஸ் மற்றும் ஜூன் 13ஆம் தேதி பின்லாந்தில் துர்குவில் நடக்கும் பாவோ நூர்மி கேம்ஸ் ஆகியவற்றில் விளையாட உள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
தோஹா டைமண்ட் லீக்: தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
டாஸ்மாக் சரக்கில் சயனைடு: கொலையா? தற்கொலையா?
கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு: ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!