தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு அளித்த ஆதரவைத் திமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம் நேரில் வலியுறுத்த, சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மமதா பானர்ஜி உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் சென்னை வந்தடைந்தனர்.
மத்திய அரசின் புதிய தொகுதி மறுவரையறை மசோதா நாளை (நவ. 30) மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதற்கு ஆதரவளிப்பதாகத் திமுக அறிவித்த நிலையில், அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேச இந்தியா கூட்டணித் தலைவர்கள் இன்று (நவ. 29) சென்னை வந்துள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி, சுயேச்சை மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் ஆகியோர் ஒரு சிறப்பு விமானத்திலும்
மற்றொரு விமானத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் அமைப்புப் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், கர்நாடகா மாநில முதல்வர் டி.கே. சிவகுமார், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கேரளா முதல்வர் வி.டி. சதீசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி. இ.டி. முகமது பஷீர் ஆகியோரும் சென்னை வந்தனர்.


சென்னை வந்த சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, மமதா பானர்ஜி உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள், விமான நிலையத்திலிருந்து ஒரே வேனில் டிரைடென்ட் ஹோட்டலுக்குச் சென்றனர். அங்கு அவர்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னைக்குப் புறப்படும் முன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி, தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்குமாறு ஸ்டாலினிடமும் திமுகவிடமும் கேட்டுக்கொள்ள இருப்பதாகத் தெரிவித்தார். மக்களவை இடங்களை 850 ஆக உயர்த்துவது, பாஜக–ஆர்எஸ்எஸ் தங்களுக்குச் சாதகமாக நாட்டின் தேர்தல் வரைபடத்தை மாற்றியமைக்க வாய்ப்பளிக்கும் எனக் குற்றம்சாட்டினார்.
“தமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக சகோதரர் ஸ்டாலின் எப்போதும் பாறைபோல் உறுதியாக நின்றவர். நாட்டின் நலனுக்காகவும், தமிழ்நாட்டின் நலனுக்காகவும், அரசியலமைப்பைப் பாதுகாக்கவும் இந்த மசோதாவை நாம் ஒன்றாகத் தோற்கடிக்க வேண்டும்” என்று ராகுல் கூறினார்.
ராகுலின் இந்த ட்வீட்டுக்கு பதிலளித்த ஸ்டாலின், அரசியலமைப்பையும் மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாப்பதில் திமுக ஆற்றிய வரலாற்றுப் பங்கை அங்கீகரித்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்தார்.
“தமிழ்நாட்டின் நலனையும் தமிழ் மக்களின் நலனையும் முதன்மையாகக் கொண்டே ஒவ்வொரு முடிவையும் எடுத்திருக்கிறோம். இந்தப் பாதையில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். வரலாறு எங்களை எட்டப்பன்களாக அல்ல, கட்டபொம்மன்களாகவே பார்க்கும் என்று நம்புகிறேன்” என்று ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.
சென்னையில் ஸ்டாலினை சந்தித்த பிறகு, இந்தியா கூட்டணித் தலைவர்கள் மும்பைக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளனர். அங்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரைச் சந்தித்து, தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்க வேண்டாம் என வலியுறுத்த உள்ளனர்.


















