‘சகோதரர்’ ஸ்டாலின்… ‘பாறை போல உறுதியாக இருப்பார்’.. சென்னை வரும் முன் ராகுல் காந்தி ட்வீட்!

By Kavi

|

Published on 29 Nov 2026, 12:02 PM

தமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக சகோதரர் ஸ்டாலின் எப்போதும் பாறை போல உறுதியாக இருப்பார் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மத்திய பாஜக அரசு கொண்டுவர உள்ள தொகுதி மறு வரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளது. இது இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான ஸ்டாலினை சந்திக்க சென்னை வருகின்றனர்.

ADVERTISEMENT

இதுகுறித்து மின்னம்பலத்தில் முதன் முதலில் திடீர் பரபரப்பு.. ஸ்டாலினை சந்திக்க சோனியா, கார்கே, மமதா, ரேவந்த் ரெட்டி, அபிஷேக் பானர்ஜி சிறப்பு விமானத்தில் இன்று சென்னை வருகை? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் சென்னை வரும் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT

அதில், “தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அரசியலமைப்புத் திருத்த மசோதாக்களை எதிர்க்குமாறு முன்னாள் முதல்வர் ஸ்டாலினையும் தி.மு.க-வையும் கேட்டுக்கொள்வதற்காக, இந்தியா கூட்டணியின் மூத்த தலைவர்களும் நானும் சென்னைக்குச் செல்கிறோம்.

தொகுதிகளின் எண்ணிக்கையை 850 ஆக அதிகரிப்பது இந்தியாவில் ஜனநாயகத்தை முடிவுக்குக் கொண்டுவந்துவிடும். இது இந்தியாவின் ஒட்டுமொத்தத் தேர்தல் வரைபடத்தையும் தங்களுக்குச் சாதகமாக மாற்றி அமைக்க பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு எல்லையற்ற அதிகாரத்தை வழங்கிவிடும்.

ADVERTISEMENT

தமிழர் விரோத சக்திகளுக்கு எதிராகச் சகோதரர் ஸ்டாலின் எப்போதும் பாறை போல உறுதியாக நின்றிருக்கிறார். தேச நலனுக்காகவும், தமிழ்நாட்டின் நலனுக்காகவும், அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கவும் நாம் ஒன்றிணைந்து இந்த மசோதாவைத் தோற்கடிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்னதாக, திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது, முன்னாள் முதல்வர் ஸ்டாலினை தனது சகோதரர் என்று ராகுல் காந்தி அடிக்கடி சொல்வார். இந்திய அரசியல்வாதிகளில் வேறு எந்த தலைவரையும் நான் அண்ணன் என்று சொன்னதில்லை என்றும் கூறியிருந்தார்.

பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கும் சகோதரர் என்றே குறிப்பிடுவார். அதேபோல முன்னாள் முதல்வர் ஸ்டாலினும் ராகுல் காந்தியை தனது அன்பு சகோதரர் என்று கூறுவார்.

ஆனால் 2026 தேர்தல் சமயத்தில் இருந்து இந்த வார்த்தையை ராகுல் காந்தி பயன்படுத்தவில்லை. அதேபோன்று ஸ்டாலினும் சகோதரர் வார்த்தையை தவிர்த்து விட்டார்.

தேர்தலுக்குப் பின்னர் தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் சென்றுவிட்டது.

நேற்று கூட டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, நாடாளுமன்றத் தொகுதிகளை மறுவரையறை செய்ய பாஜக கொண்டுவரத் திட்டமிட்டுள்ள சட்டத்தை ஆதரிக்கும் எவரும் தமிழ்நாட்டுக்குப் மிகப்பெரிய துரோகத்தைச் செய்கிறார்கள். அவர்களை 21-ஆம் நூற்றாண்டின் எட்டப்பர்கள் என்றே வரலாறு பதிவு செய்யும் என்று குறிப்பிட்டிருந்தார்

இந்த நிலையில் தொகுதி மறு வரையறைக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம் என்று வலியுறுத்தவரும் நிலையில் ராகுல் காந்தி மீண்டும் சகோதரர் ஸ்டாலின் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel