ஸ்டாலினை சந்திக்க 3 சிறப்பு விமானங்கள்… 3 முதல்வர்கள், காங்கிரஸ், திரிணாமுல், முஸ்லிம் லீக், சிபிஎம் அகில இந்திய தலைவர்கள் சென்னைக்கு ‘படையெடுப்பு’!

By Mathi

|

Published on 29 Nov 2026, 11:42 AM

Delimitation-Stalin-India Bloc leaders Chennai

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு அளித்த ஆதரவைத் திமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்த, இந்தியா கூட்டணித் தலைவர்கள் சென்னைக்குப் புறப்பட்டுள்ளனர். சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மமதா பானர்ஜி உள்ளிட்டோர் ஒரு சிறப்பு விமானத்திலும், ராகுல் காந்தி மற்றும் 3 மாநில முதல்வர்கள் மற்றொரு சிறப்பு விமானத்திலும் டெல்லியிலிருந்து புறப்பட்டுள்ளனர். சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தனி விமானத்தில் சென்னை வருகிறார்.

மத்திய அரசின் புதிய தொகுதி மறுவரையறை மசோதா நாளை (நவ. 30) மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மசோதாவை ஆதரிப்பதாகத் திமுக அறிவித்த நிலையில், அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலினைச் சந்திக்க இந்தியா கூட்டணித் தலைவர்கள் இன்று (நவ. 29) சென்னை வருகின்றனர்.

ADVERTISEMENT

கார்கே, சோனியா, மமதா ஒரே விமானத்தில்

முதல் சிறப்பு விமானத்தின் பயணிகள் பட்டியலில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முன்னாள் முதல்வருமான மமதா பானர்ஜி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ராஷ்ட்ரீய ஜனதா தளம் மக்களவை எம்.பி.க்கள் சுதாகர் சிங், அபய் குமார் சின்ஹா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி, சமாஜ்வாதி கட்சியின் மக்களவை எம்.பி. ராஜீவ் ராய் ஆகியோரும் அந்த விமானப் பட்டியலில் உள்ளனர்.

ADVERTISEMENT

சமாஜ்வாதி கட்சியின் ஆதரவுடன் தேர்வான சுயேச்சை மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல், காங்கிரஸ் தலைவர் அலுவலகத்துடன் இணைக்கப்பட்ட அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் பிரணவ் ஜா ஆகியோரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மாடில்டா, குமாரா ஆகியோரின் பெயர்களும் பட்டியலில் உள்ளன.

ராகுலுடன் 3 காங்கிரஸ் முதல்வர்கள்

இரண்டாவது சிறப்பு விமானத்தின் பயணிகள் பட்டியலில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் அமைப்புப் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ADVERTISEMENT

காங்கிரஸ் ஆளும் 3 மாநிலங்களின் முதல்வர்களான கர்நாடகா மாநில முதல்வர் டி.கே. சிவகுமார், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கேரளா முதல்வர் வி.டி. சதீசன் ஆகியோரும் ராகுல் காந்தியுடன் வருகின்றனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மக்களவை எம்.பி. இ.டி. முகமது பஷீர், ராகுல் காந்தியின் உதவியாளர் கௌஷல் வித்யார்த்தி ஆகியோரின் பெயர்களும் இந்த விமானப் பட்டியலில் உள்ளன.

தனி விமானத்தில் அகிலேஷ்

உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் மூன்றாவது சிறப்பு விமானத்தில் தனியாக சென்னை வருகிறார்.

டெல்லியிலிருந்து புறப்பட்ட 2 விமானங்களின் பயணிகள் பட்டியலில் தனிப் பாதுகாப்பு அதிகாரிகளைத் தவிர 19 பேர் இடம்பெற்றுள்ளனர். அகிலேஷ் யாதவையும் சேர்த்து மொத்தம் 20 பேர் சென்னை வருகின்றனர்.

சென்னைக்குப் பிறகு மும்பை பயணம்

சென்னையில் ஸ்டாலினை சந்தித்த பிறகு, இந்தியா கூட்டணித் தலைவர்கள் மும்பைக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளனர். அங்கு தேசியவாத காங்கிரஸ் (சரத் சந்திர பவார்) தலைவர் சரத் பவாரை நேரில் சந்தித்து, தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்க வேண்டாம் என வலியுறுத்த உள்ளனர்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel