மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, மக்களவையில் நாளை (நவ. 30) கொண்டுவர இருக்கும் தொகுதி மறுவரையறைக்கான புதிய அரசியலமைப்புத் திருத்த மசோதா விவகாரத்தில் இந்தியா கூட்டணிக் கட்சிகள் பிளவுபட்டிருப்பது காங்கிரஸை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மக்களவையிலும் மாநில சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் 106-வது அரசியலமைப்புத் திருத்தத்தை நாடாளுமன்றம் 2023-ல் நிறைவேற்றியது. அந்தச் சட்டத்தின்படி, சட்டம் அமலுக்கு வந்த பின் நடத்தப்படும் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் விவரங்கள் வெளியாகி, அதன் அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்ட பிறகே மகளிர் இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும்.
இதனால் 2029 மக்களவைத் தேர்தலிலேயே மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் நோக்கில், அந்த நடைமுறையை மாற்றுவதற்கான அரசியலமைப்புத் திருத்தத்தையும் தொகுதி மறுவரையறை மசோதாவையும் கடந்த ஏப்ரலில் மத்திய அரசு கொண்டுவந்தது.
அப்போது, காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் மத்திய அரசின் மசோதாவை எதிர்த்தன. புதிய மக்கள்தொகைக் கணக்கின் அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையே மக்களவைத் தொகுதிகளைப் பகிர்ந்தால், தமிழகத்தின் பிரதிநிதித்துவ விகிதம் குறையும் என்று அப்போது முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் எதிர்ப்புத் தெரிவித்தார். நாமக்கல்லில் நடந்த பிரசாரத்தில் இந்த மசோதா நகலையும் அவர் எரித்தார்.
மக்களவையில் ஏப். 17-ந் தேதி நடந்த வாக்கெடுப்பில் அரசியலமைப்புத் திருத்தத்துக்கு ஆதரவாக 298 வாக்குகளும், எதிராக 230 வாக்குகளும் பதிவாகின. வாக்களித்த 528 பேரில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவைப் பெற 352 வாக்குகள் தேவைப்பட்டன. மத்திய அரசுக்கு 54 வாக்குகள் குறைந்ததால் திருத்த மசோதா தோல்வியடைந்தது.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ், திமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு விஜய் தலைமையிலான தவெக அரசில் இணைந்தது. காங்கிரஸின் இந்த துரோகத்தால் 22 மக்களவை எம்.பி.க்களைக் கொண்ட திமுக, இந்தியா கூட்டணியிலிருந்து விலகியது.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் ஆட்சியை இழந்த இந்தியா கூட்டணி கட்சியான மமதா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸிலிருந்து 20 மக்களவை எம்.பி.க்கள் அதிருப்தி கோஷ்டியாக பிரிந்தனர். திரிபுராவை சேர்ந்த என்சிபிஐ என்ற அதிகம் அறியப்படாத கட்சியில் ஒட்டுமொத்தமாக இணைந்து பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே சிவசேனாவின் 9 மக்களவை எம்.பி.க்களில் 6 பேர் ஏக்நாத் ஷிண்டே அணிக்குச் சென்றனர்.
கடந்த ஏப்ரலுக்குப் பிறகு இந்தியா கூட்டணி கட்சிகளிடையே ஏற்பட்ட இந்த மாற்றங்களுக்கு இடையில்தான் மத்திய அரசு மீண்டும் இந்த புதிய திருத்த மசோதாவை கொண்டு வருகிறது.
தற்போதைய 132-வது அரசியலமைப்புத் திருத்த மசோதா, ஒவ்வொரு மாநிலத்துக்கும் யூனியன் பிரதேசத்துக்கும் தற்போது ஒதுக்கப்பட்டுள்ள மக்களவை இடங்களை 50% உயர்த்த வகை செய்கிறது. மாநில சட்டமன்றங்களின் இடங்களும் 50% உயரும். மாநிலங்களுக்கு இடையே தற்போது உள்ள பிரதிநிதித்துவ விகிதம் 2051 வரை பாதுகாக்கப்படும்.
பாஜகவுக்கு திமுக ஆதரவு
இதனை திமுக ஆதரிக்கிறது. தாங்கள் முன்வைத்த 2 கோரிக்கைகளுமே இடம் பெற்றிருப்பதால் இப்புதிய மசோதாவை ஆதரிக்கிறோம் என திமுக அறிவித்துள்ளது. அதே கையோடு டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி தலைமையில் அக்கட்சியின் எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, ஆ. ராசா, தயாநிதி, வில்சன் உள்ளிட்டோர் நேற்று சந்தித்து பேசினர்.
இந்தியா கூட்டணி கூட்டம்
டெல்லியில் நேற்று இந்த சம்பவம் நடைபெற்ற அதே நாளில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் கூடிய இந்தியா கூட்டணியின் 11 கட்சிகள் மசோதாவை எதிர்ப்பது என முடிவு செய்தன. தற்போதுள்ள 543 மக்களவை இடங்களுக்குள்ளேயே மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பது அவற்றின் கோரிக்கை.
பாஜகவுக்கு சரத்பவாரின் என்சிபி ஆதரவு
இதில் புதிய திருப்பமாக, கார்கே கூட்டிய இந்தியா கூட்டணி கூட்டத்தில் 8 மக்களவை எம்.பி.க்களைக் கொண்ட சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி பங்கேற்கவில்லை. சரத்பவார் கட்சி, இந்த புதிய மசோதாவை ஆதரிப்பதுடன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற உள்ளதாக, “ஸ்டாலினிடம் பேசிய அமித்ஷா” என்ற தலைப்பில் நமது மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் நேற்று நாம் பதிவு செய்துள்ளோம்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா நிலை என்ன?
கார்கே கூட்டத்தில் பங்கேற்ற ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் தனது இறுதி முடிவை இன்னும் அறிவிக்கவில்லை. நேற்று தனது கட்சி எம்.பி.க்களுடன் ஆலோசித்த ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், புதிய மசோதாவைப் படித்த பிறகு முடிவெடுக்க உள்ளார். ஜார்க்கண்டில் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட மக்களவைத் தொகுதிகளும் அதே விகிதத்தில் அதிகரிக்குமா என்பதை அக்கட்சி கவனிக்கிறது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு மக்களவையில் 3 எம்.பி.க்கள் உள்ளனர்.
சமாஜ்வாதி கட்சி?
மேலும் இந்தியா கூட்டணியின் நேற்றைய கூட்டத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியின் ராம்ஜி லால் சுமன் பங்கேற்றார். உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் காங்கிரஸுடன் சமாஜ்வாதி கட்சி கூட்டணியில் உள்ளது. மத்திய அரசின் மசோதாவை எதிர்ப்பதாக சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது. அதே நேரத்தில் மக்களவையில் புதிய மசோதா மீதான வாக்கெடுப்பில் சமாஜ்வாதி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்யலாம் என்ற பேச்சும் எழுந்தது. அதை மறுத்த சமாஜ்வாதி வட்டாரங்கள், மசோதாவுக்கு எதிராக வாக்களிப்போம் என்று தெரிவித்துள்ளன.
தற்போதைய நிலையில் மக்களவையில் பலம்
மக்களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆதரவு பலம் 320 எம்.பி.க்கள்.
- பாஜக – 241
- தெலுங்கு தேசம் – 16
- ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா – 13
- ஐக்கிய ஜனதா தளம் – 12
- லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ்) – 5
- என்சிபிஐ (திரிணாமுல் அதிருப்தி அணி) – 20
- சிரோமணி அகாலி தளம் – 1
- பிற கூட்டணிக் கட்சிகள் – 12
இன்னும் எத்தனை வாக்குகள் தேவை?
மக்களவையில் தற்போது 540 எம்.பி.க்கள் உள்ளனர். 540 பேரும் வாக்களித்தால் அரசியலமைப்புத் திருத்த மசோதா நிறைவேற 360 வாக்குகள் தேவை.
திமுக – 22
தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) – 8
கூடுதலாகக் கிடைக்கும் வாக்குகள் – 30
ஆளும் தரப்பின் மொத்த ஆதரவு – 350
இன்னும் தேவை – 10 வாக்குகள்
சமாஜ்வாதி கட்சி வெளிநடப்பு செய்தால்?
சமாஜ்வாதியின் 37 எம்.பி.க்களும் வெளிநடப்பு செய்து, மற்ற அனைவரும் வாக்களித்தால், வாக்களிப்போர் எண்ணிக்கை 503 ஆகக் குறையும். அப்போது மசோதா நிறைவேற 336 வாக்குகள் தேவை. அந்தச் சூழலில், பாஜக கூட்டணியின் 320 வாக்குகளுடன் திமுகவின் 22 வாக்குகள் சேர்ந்தாலே 342 வாக்குகள் கிடைக்கும். மசோதாவும் மக்களவையில் நிறைவேறும்.
சமாஜ்வாதி வெளிநடப்பு செய்யாவிட்டால்?
ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் புதிய மசோதாவை ஆதரிக்கிறது. அக்கட்சியின் 4 வாக்குகளும் சேர்ந்தால் ஆளும் தரப்பின் ஆதரவு 354 ஆகும். 540 பேரும் வாக்களித்தால் இன்னும் 6 வாக்குகள் தேவை.
ஹேமந்த் சோரன் ஆதரவு தெரிவித்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் 3 எம்.பி.க்களும் ஆதரவாக வாக்களித்தால், அந்த எண்ணிக்கை 357 ஆக உயரும். அப்போதும் 3 வாக்குகள் குறையும். அதே 357 ஆதரவு வாக்குகள் பதிவாகி, வாக்களிப்போர் எண்ணிக்கை 535 அல்லது அதற்குக் குறைவாக இருந்தால், சமாஜ்வாதி எதிர்த்து வாக்களித்தாலும் மசோதா மக்களவையில் நிறைவேறும்.
தற்போதைய நிலையில் மக்களவையில் எப்படியும் புதிய மசோதாவை நிறைவேற்றிதான் ஆக வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது மத்திய அரசு. அதுவும் 22 எம்.பிக்களைக் கொண்ட திமுக, 8 எம்.பிக்களைக் கொண்ட சரத்பவார் கட்சி ஆகியவற்றின் ஆதரவு கிடைக்கும் மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மிகப் பெரிய அரசியல் நெருக்கடி உருவாகும்.
இன்னொரு பக்கம், மாநிலங்களில் அமைச்சரவைப் பதவிகளுக்காகக் கூட்டணிக் கட்சிகளின் முதுகில் குத்திவிட்டுப் போகும் காங்கிரஸ், அதற்கான விலையைத் தேசிய அளவில் கொடுக்கப் போகிறது. தமிழகத்தில் அமைச்சரவையில் இடம் பிடிக்க திமுகவுடனான உறவை முறித்தது காங்கிரஸ். இன்று அந்தத் திமுகவின் 22 வாக்குகளும் மக்களவையில் பாஜகவுக்குக் கிடைக்க இருக்கின்றன. இந்தியா கூட்டணிக்குள் இருக்கும் சரத் பவார் அணியையும் மசோதா எதிர்ப்பில் தன்னுடன் நிறுத்த காங்கிரஸால் முடியவில்லை. இந்த முறை மசோதாவை பாஜக நிறைவேற்றிவிட்டால் காங்கிரஸ் கட்சிக்கு தேசிய அளவில் மிகப் பெரும் பின்னடைவுதான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்









