10 கிராம் தங்கம் ரூ.2.38 லட்சத்தை எட்டுமா? 6 மாசத்தில் விலை இருமடங்கு? பொருளாதார நிபுணரின் கணிப்பு… கவனிக்க வேண்டிய பின்னணி!

By Minnambalam Desk

|

Published on 28 Nov 2026, 11:21 PM

தங்கத்தின் விலை சமீபத்தில் ஏறி இறங்கிவரும் நிலையில், அடுத்த ஆறு மாதங்களில் சர்வதேசச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 8,000 டாலரைத் தொடலாம் என்ற கணிப்பு முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்திய மதிப்பில் 10 கிராம் தங்கம் சுமார் ரூ.2.38 லட்சத்தை எட்டலாம் என்கிறது இந்தக் கணக்கு. இதைச் சொல்பவர் பொருளாதார நிபுணரும் நிதி ஆய்வாளருமான அலாஸ்டர் மெக்லியோட் (Alasdair Macleod). தங்கத்தின் மதிப்பு கூடுவதைவிட, அமெரிக்க டாலரின் வாங்கும் சக்தி குறைவதுதான் இந்த உயர்வுக்கு முக்கியக் காரணமாக இருக்கும் என்பது அவரது வாதம்.

தங்கம் ஏறுகிறதா, டாலர் இறங்குகிறதா?

ADVERTISEMENT

MINING.COM இணையதளத்தின் ‘Top of Mine’ நிகழ்ச்சியில் பேசிய மெக்லியோட், இப்போது ஒரு அவுன்ஸ் தங்கம் சுமார் 3,580 டாலர் என்ற நிலையில் இருப்பதாகச் சொன்னார். அடுத்த ஆறு மாதங்களில் அது 8,000 டாலரைத் தொடலாம் என்பது அவரது கணிப்பு. இதை இந்திய மதிப்பில் கணக்கிட்டால் 10 கிராம் தங்கம் சுமார் ரூ.2.38 லட்சம். இப்போதைய விலையோடு ஒப்பிட்டால் இது மிகப்பெரிய உயர்வு. டாலரின் மதிப்பு சரிந்தால், அதே அளவு தங்கத்தை வாங்க அதிக டாலர் வேண்டியிருக்கும் என்பதே அவரது வாதம்.

வட்டி விகிதம் மட்டும் காரணம் இல்லை

ADVERTISEMENT

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தினால் தங்கம் விலை குறையலாம் என்று சந்தை பொதுவாகக் கணிக்கிறது. தங்கம் வட்டி வருமானம் தருவதில்லை. வங்கி டெபாசிட், கடன்பத்திரங்கள் அதிக வருமானம் தந்தால் முதலீட்டாளர்கள் அவற்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

ஆனால், தங்கத்தை வெறும் வட்டி விகிதத்தை வைத்தே மதிப்பிடுவது தவறு என்கிறார் மெக்லியோட். பணத்தின் வாங்கும் சக்தி, டாலர் மீதான நம்பிக்கை, உலக நிதி நிலைத்தன்மை ஆகியவற்றையும் பார்க்க வேண்டும் என்பது அவர் கருத்து.

ADVERTISEMENT

அமெரிக்கக் கடன் சந்தையில் ஆபத்து?

அமெரிக்கப் பங்குச்சந்தை சரிந்தால், முதலீட்டாளர்கள் பணப்புழக்கத் தேவைக்காகத் தங்களிடம் இருக்கும் சொத்துகளை விற்க வேண்டியிருக்கும். அப்போது தங்கம் உள்ளிட்ட பல முதலீடுகளிலும் தற்காலிக விற்பனை அழுத்தம் வரலாம். ஆனாலும் மெக்லியோட் பார்வையில் பெரிய ஆபத்து தங்கத்தில் இல்லை, கடன் சந்தையில்தான் இருக்கிறது. கடன் சார்ந்த முதலீடுகளைக் குறைத்து, நேரடியாகத் தங்கத்தை வைத்திருப்பது பற்றி முதலீட்டாளர்கள் யோசிக்கலாம் என்கிறார் அவர். இது அவரது தனிப்பட்ட முதலீட்டுப் பார்வை மட்டுமே.

இந்தியாவில் உண்மையிலேயே ரூ.2.38 லட்சமாகுமா?

ஒரு அவுன்ஸ் தங்கம் 8,000 டாலரை எட்டினால், இப்போதைய மாற்று விகிதத்தில் 10 கிராமுக்கு ரூ.2.38 லட்சம் என்பது தோராயமான கணக்கு மட்டுமே. இதில் இறக்குமதி வரி, ஜிஎஸ்டி, நகைகளுக்கான செய்கூலி எதுவும் சேர்க்கப்படவில்லை. டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பும் மாறலாம். ரூபாய் வலுப்பெற்றால், இந்தியாவில் தங்கம் விலை இந்தக் கணக்கைவிடக் குறைவாகவும் இருக்கலாம். அதனால் ரூ.2.38 லட்சம் என்பது ஒரு நிபுணர் முன்வைத்த சாத்தியம் மட்டுமே, உறுதியான விலை இலக்கு இல்லை.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam Desk

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel