மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர்.
நாளை மறுதினம் நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் கூடுகிறது. அப்போது தொகுதி மறு வரையறை மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.
இந்த மசோதாவுக்கு திமுகவும் இன்று ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டுக்கு திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையிலான அக்கட்சி எம்பிக்கள் சென்றதாக தகவல்கள் வருகின்றன.
தொகுதி மறு வரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த சந்திப்பை தொடர்ந்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி.கனிமொழி, ”இன்று காலை, எங்கள் தலைவர் மு.க. ஸ்டாலின் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டியிருந்தார். அதில், தொகுதி மறுவரையறை மசோதா (Delimitation Bill) குறித்த எங்கள் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்கப்பட்டது; அந்த மசோதாவை ஆதரிப்பது என்று தீர்மானிக்கப்பட்டு, அது குறித்த அறிக்கையும் வெளியிடப்பட்டது. எனவே, எங்கள் நிலைப்பாட்டை உள்துறை அமைச்சரிடமும் அரசாங்கத்திடமும் தெரிவிப்பதற்காக நாங்கள் வந்தோம்.
அரசாங்கம் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப்போவதாகக் கூறியபோது, அது 1971-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அமைய வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம். அதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டனர்; மேலும், இந்த எண்ணிக்கை அடுத்த 25 ஆண்டுகளுக்கு மாற்றமின்றி அப்படியே நீடிக்கும் என்பதையும் ஏற்றுக்கொண்டனர். எனவே, தற்போது தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 39-லிருந்து 59-ஆக உயரும்… இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நடைமுறைப்படுத்தப்படும்” என்று கூறினார்.









