திமுகவுக்கு தி.க., தி.வி.க. வேண்டுகோள்!

By Mathi

|

Published on 28 Nov 2026, 4:32 PM

DMK-DK-DVK

மத்திய பாஜக கூட்டணி அரசின் புதிய தொகுதி மறுவரையறை மசோதாவை நிபந்தனைகளுடன் ஆதரிப்பதாக திமுக அறிவித்துள்ள முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகமும் திராவிடர் விடுதலைக் கழகமும் வேண்டுகோள் விடுத்துள்ளன.

இது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கை: 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கு முன் திட்டமிட்டே கொண்டு வந்த தொகுதி மறுவரையறை சட்டத் திருத்தத்தை நிறைவேற்றவிடாமல், மாநிலங்களின் – குறிப்பாக தென் மாநிலங்களின் உரிமையைப் பறித்து, குரலற்றவர்களாக்கும் சூழ்ச்சி வியூகம் அமைத்ததைத் தோற்கடித்தப் பெருமை தி.மு.க.வின் வரலாற்றுப் பெருமையாகி, இந்தியா முழுவதும் பரவி, வரலாறு படைத்தது.

ADVERTISEMENT

தற்போது ஏதோ ‘தி.மு.க. அந்த நிலைப்பாட்டிலிருந்து மாறி, புதிய சில மாய்மால ஜாலத் திட்டங்கள் – சதவிகித கணக்குக் காட்டி வஞ்சிக்கும், தேன் கலந்த விஷ உருண்டையை ஏற்றுவிட்டது; சமரசம் செய்துகொண்டது’ என்ற பரவலானப் பிரச்சாரம், ஊடகம், சமூக வலைதளங்கள், தி.மு.க.வை அழிக்க விரும்பும் அரசியல் கட்சிகளிடையே வெகுவேகமாகப் பரவி வருவது குறித்து, தாய்க்கழகமான திராவிடர் கழகம் பெரிதும் கவலை கொள்கிறது!

அது உண்மையாக இருக்காது; உண்மையாக இருக்கக் கூடாது என்பதை உரிமையுடன் நம்புகிறோம்.

ADVERTISEMENT

எனவே, தி.மு.க. தலைமைக்கு, அதன் காவல் அரணான திராவிடர் கழகம் விடுக்கும் உரிமை வேண்டுகோள்!

அருள்கூர்ந்து, கடந்த காலத்தில், அதன் நிலைப்பாட்டினை – எவ்வளவு வாக்குறுதிகளை பி.ஜே.பி., அமித்ஷாக்கள் தந்தாலும், அதனை நம்பி, சதவிகித கணக்குத் தேனை உண்மையென நம்பி, வாக்காளர்களுக்கு இந்த கட்டத்தில், என்ன விளக்கம், சமாதானம் சொன்னாலும், மக்கள் மன்றத்தில் தி.மு.க.விற்குக் கெட்ட பெயரும், தீராப் பழியும் தான் ஏற்படும் என்பது திராவிடர் கழகத்தின் கருத்து மட்டுமல்ல; அதன் பாதுகாப்பில் அக்கறை கொண்ட பல பெருமக்கள் – அறிவுசார் பிரமுகர்கள் நம்மிடம் இடையறாது கடந்த இரண்டு நாள்களாகத் தொடர்பு கொண்டு, வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு அவல் கொடுத்த கதையாகி விடக் கூடாது; அப்படி ஒரு நிலை வரக்கூடாது என்பதை தி.மு.க.விடம் வற்புறுத்திக் கூறுங்கள் என்றும் அன்புக் கட்டளையிட்டார்கள்.

ADVERTISEMENT

எனவே, முந்தைய சட்டமன்றத் தீர்மானம், தொகுதி மறுவரையறைபற்றி 25 ஆண்டுகளுக்கு தற்போதைய முறையே தொடரும் என்பதில் உறுதியுடன் இருக்கவேண்டும்.

கருநாடகா, ஆந்திரா, கேரளா எல்லாம் என்ன நிலைப்பாடோ அதுதான் நமது நிலைப்பாடாக இருக்க வேண்டும். தென்மாநிலங்களை பாதிக்கும் வகையில், எந்த முயற்சிக்கும் இடந்தரக்கூடாது. இந்திய அளவில் நமது குரல் நசுக்கப்படக் கூடாது.

அதிக இடங்கள், விகிதாச்சாரக் கணக்கு என்ற பா.ஜ.க. பொறியில் (Trap) தி.மு.க. சிக்கிவிட்டால், அது தி.மு.க.வை வீழ்த்திடத் துடிக்கும் இன, அரசியல் எதிரிகளுக்குச் சரியான வாய்ப்புத் தந்ததாக ஆகிவிடக் கூடும்.

தமிழ்நாட்டில் உள்ள சூழ்நிலையில், வெண்ணெய் திரண்டு வரும்போது, தாழியை உடைத்தது போல் ஆகிவிடும் என்ற பெருங்கவலையால், இதனை அவசர வேண்டுகோளாக, உரிமை விழைவாக தி.மு.க.வுக்கு விடுக்கிறோம். உறவோடும், உரிமையோடும் இதனைச் சுட்டுவது நமது கசப்பான கடமையாகும். சிந்திக்கவும், சிந்திக்கவும்! சறுக்கல் பெரிய விபத்தாகிவிடக் கூடும் என்பதே நமது கவலை! இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

ஆச்சரியமும் வருத்தமும்..

திராவிடர் விடுதலை கழகப் பொதுச்செயலாளர் விடுதலை க. ராசேந்திரன் வெளியிட்ட அறிக்கை: தொகுதி மறு வரையறை மசோதாவை நாடாளுமன்றத்தில் ஆதரிக்கப் போவதாக திமுக முடிவு எடுத்திருக்கிறது என்ற செய்தி நமக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் வருத்தத்தையும் உருவாக்குகிறது.

இந்திய அரசியல் களத்திலேயே மாநில சுயாட்சி என்ற அரசியல் முழக்கத்தை உயர்த்தி பிடித்து மாநில சுயாட்சி கோட்பாட்டின் அரசியல் முகமாக விளங்கும் ஒரே கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் தான் என்ற பெருமையோடு நிமிர்ந்து நிற்கிறது. அந்தப் பெருமைமிகு அடையாளத்தில் கரும்புள்ளிகள் விழுவதை அனுமதிக்க் கூடாது

50 விழுக்காடு இடங்களை உயர்த்துவதின் வழியாக தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறைந்துவிடாமல் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்றும் இது திமுகவின் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி என்றும் நாம் பெரிதும் மதிக்கும் மு க ஸ்டாலின் அவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்

இது குறித்து மு க ஸ்டாலின், 17- 4-2026 அன்று” டைம்ஸ் ஆப் இந்தியா” நாளிதழில் எழுதிய கட்டுரையில் அவரே இதில் அடங்கியுள்ள ஆபத்துகளை இவ்வாறு சுட்டிக்காட்டி இருக்கிறார்

“ஒவ்வொரு மாநிலமும் தற்போது பெற்றுள்ள பிரதிநிதித்துவத்தை இழக்கக்கூடாது என்ற அடிப்படையில் மக்களவையின் அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கையை 550 இல் இருந்து 850 ஆக உயர்த்தும் ஆலோசனைகள் பிரச்சனைக்கு உரியது. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அதிகாரம் என்பது உறுப்பினர்களின் முழுமையான எண்ணிக்கையில் மட்டும் இல்லை ;மொத்த அவை உறுப்பினர்களில் ஒரு மாநிலம் பெற்றிருக்கும் ஒப்பிட்டு பங்கிலும் உள்ளது”என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார். ஒப்பிட்டு பங்கு என்பது நாடாளுமன்றத்தில் மொத்த உறுப்பினர்களின் உள்ள சதவீதம். அதோடு”தமிழ்நாட்டின் இடங்கள் 39 இல் இருந்து 49 ஆக அதிகரித்தாலும் அதன் ஒப்பிட்டு பங்கு 7.18 சதவீதத்திலிருந்து 5.78 ஆக குறையும் “என்று சுட்டி காட்டியதோடு தென் மாநிலங்கள் ஒப்பீட்டுப் பங்கு கணிசமாக குறைவதோடு வட மாநிலங்களின் ஒப்பிட்டு பங்கு மிக அதிகரிக்கிறது என்பதையும் புள்ளிவிவரங்களோடு அந்த கட்டுரையில் எடுத்துக் காட்டி இருக்கிறார்.

850 உறுப்பினர்களாக விரிவு படுத்தப்பட்டால் பீகாரில் ஒப்பீட்டு பங்கு 7.37இலிருந்து 9.32 ஆகவும், உபியில் 14.73இலிருந்து 16.86 ஆக அதிகரிக்கும்”என்ற ஆபத்தையும் சுட்டி காட்டி இருக்கிறார். ஆக இடங்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக அதிகரித்தாலும் அதன் வழியாக தென் மாநிலங்கள் நாடாளுமன்றத்தில் முற்றாக புறக்கணிக்கப்படும்.

உ.பி மற்றும் பீகார் மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களே முழுமையான அதிகாரத்தோடு இந்தியாவின் அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்வார்கள்.. இதுதான் மு க ஸ்டாலின் அவர்கள் விடுத்த அபாய எச்சரிக்கை. இந்த ஆபத்துக்கு தமிழ்நாடு செவி சாய்க்க போகிறதா என்பதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வி. அதே கட்டுரையில் உறுப்பினர்கள் எண்ணிக்கை 850 ஆக உயரும்போது உருவாகும் சிக்கல்களையும் பட்டியலிட்டுள்ளார்.

  • நடைமுறையில் நிர்வகிக்க முடியாத அளவுக்கு பெரிதாகிவிடும்
  • அர்த்தமுள்ள விவாதம் குறையும்
  • நாடாளுமன்ற குழுக்களின் செயல் திறன் பலவீனமடையும்
  • கட்சிகளின் கொறடா உத்தரவுகள் மீது சார்ந்து இருப்பது அதிகரிக்கும்
  • நிர்வாகத்தின் கட்டுப்பாடு அதிகரிக்கும்
  • உலக அனுபவமும் உறுப்பினர்கள் எண்ணிக்கையின் கட்டுப்பாட்டையே ஆதரிக்கிறது; அமெரிக்க பிரதிநிதிகள் அவை 1929 முதல் 435 உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையிலே உள்ளது என்று விரிவாக ஏராளமான செய்திகளுடன் அந்த கட்டுரையை எழுதியிருந்தார்

நீதிபதி குரியன் ஜோசப் குழுவின் பரிந்துரையும் இதே கருத்துகளையே அழுத்தமாக வலியுறுத்துகிறது. இப்போது திமுக எடுத்துள்ள முடிவு இந்த கருத்துகளுக்கு முற்றிலும் முரண்பட்டு இருக்கிறது.

அசாம் மற்றும் காஷ்மீர் மாநிலங்களில் தொகுதி மறு வரை ஆணையம் இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவம் குறைக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் தொகுதிகளை சூழ்ச்சிகரமாக மறுவரை செய்தது இஸ்லாமியர்கள் பெரும்பகுதியாக உள்ள தொகுதிகள் ரிசர்வ் தொகுதிகளாக மாற்றப்பட்டன. இது குறித்த விரிவான ஆய்வுகள் ஏற்கனவே வெளிவந்திருக்கின்றன. தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தான் தொகுதி மறு வரை ஆணையமும் வருகிறது; இந்த ஆணையத்தின் முடிவை எதிர்த்து நீதிமன்றம் செல்லும் உரிமை சட்டப்படி தடைபடுத்தப்பட்டுள்ளது. எனவே இஸ்லாமியர்களுக்கு ஏதேனும் ஆபத்து என்றால் அதை அனுமதிக்க மாட்டோம் என்று கூறுவது நடைமுறையில் செயல்படுத்த இயலாத ஒன்று.

இந்தப் பின்னணியில் இந்த முடிவு குறித்து திமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறோம். மாநில சுயாட்சி சமூக நீதி மதச்சார்பின்மை என்ற கொள்கை அடையாளங்களோடு ஐந்தாண்டு காலம் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர் மு க ஸ்டாலின். அந்த அடையாளத்திற்கும் பெருமைக்கும் களங்கம் நேர்ந்துவிடக் கூடாது என்ற கவலையோடு இதை சுட்டிக் காட்டுவது நமது கடமை. இவ்வாறு விடுதலை ராசேந்திரன் தெரிவித்துள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel