ஸ்ரீராம் திருவரங்கம்
புண்ணிய தினமாம் (28.11.2026) இன்று திருப்பரங்குன்றம் முருகப் பெருமானுக்கு கார்த்திகைத் தீபம் ஏற்றப்படப் போகிறது!
இந்தியத் திருநாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பை நிலைநாட்டும் வகையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு அமைந்துள்ளது.
பக்தியுடன் தொடர்ந்த நூற்றாண்டுகாலப் போராட்டத்திற்கு ஒரு விடிவாக, திருமுருகனின் கார்த்திகைத் தீபம் ஆனந்த நடனமிட்டு ஒளிவீசப் போகும் இன்றைய கார்த்திகை மாதத் திருநாளில்…
காணாது காணும் தீபத்தை நாம் எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பதை சங்க காலத் தமிழ்ப் புலவர் ‘கடுவன் இளவெயினனார்’ எழுதிச் சொன்ன பொன்னார்ந்த வரிகளோடு விரித்துரைக்க விழைகிறேன்.
யாஅம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமும் அல்ல;
நின்பால்
அருளும், அன்பும், அறனும், மூன்றும்
உருள் இணர்க் கடம்பின் ஒலி தாரோயே!

மேற்கண்ட சங்க காலப் பாடலின் பொருள்:
“உருண்டையான கொத்துக்களாகப் பூக்கும் கடம்ப மலர் மாலையை அணிந்த முருகப் பெருமானே! நாங்கள் உன்னிடம் யாசித்துக் கேட்பவை நிலையற்ற செல்வமாகிய பொன்னும், பொருளும், உலகியல் இன்பங்களும் அல்ல.
வேண்டி நிற்பவை உயிர்களிடத்து காட்டும் அருள் ஒன்றே!
பிறரிடத்து செலுத்தும் அன்பு ஒன்றே!
நல்வழியில் நடக்கும் அறம் ஒன்றே!
இம்மூன்று நற்பண்புகளையும் எமக்கு அருள்வாயாக!”
‘ஒலி தாரோயே’ எனும் அந்த ஈற்றுச் சொல்லுக்கு, ‘எம்மிடம் உயர்ந்த குணம் ஒளிர்ந்தோங்க செய்வாயே’ என்பதுதான் பொருளாகுமென்கிறது ‘ஒலியே தழைத்தல்’ எனும் தொல்காப்பிய சூத்திரம்!
ஈராயிரமாண்டு ஆய்ந்து அனுபவித்து வாழ்ந்து கண்டு சொன்ன மூத்தோரின் முதுமொழியை வழிதொற்றி இனி நான் வேண்டுவதெல்லாம் இவைகள்தாம்…
இன்றைய தினம் திருப்பரங்குன்றம் எங்கிலும்..

1. திருப்பரங்குன்றம் முருகனுக்கு ‘ ஹர ஹரோ ஹரா’ என்ற பக்தி முழக்கம் மட்டுமே விண்ணை முட்ட வேண்டும்!
2. அரசாங்கம், அதிகாரிகள் உட்பட எவரை நோக்கியும் எதிர் முழக்கங்களை எழுப்பாமல் இருக்க வேண்டும்.
3. கடந்த கால நினைவுகள் குறித்த ஆதங்கங்கள் பக்தர்களிடம் இருக்கலாம். நோக்கம் எவருக்கும் சவால் விடுவதன்று. சன்மார்க்கத்தை நிலைநாட்டுவதே என்பதை ஒவ்வொரு பக்தரும் உறுதியாகக் கொண்டாக வேண்டும்.
ஆம், ‘முருகு’ என்றால் ‘அன்பு’ என்கிறது தமிழ்! அன்பும் ஒற்றுமையும்தான் வருங்காலத்தை ஒளிமயமாக்கும் என்பதை சகலரும் உணர்ந்தாக வேண்டும்!
4. ரீல்ஸ் எடுக்கும் ஆவலில் எல்லை மீறுபவர்கள், ‘தர்கா’ அமைந்துள்ள பகுதியை நோக்கி நின்று எந்தவொரு முழக்கத்தையும் எழுப்பக்கூடாது. அதனை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முனைந்து தடுக்க வந்தால் அவர்களுக்கு பக்தர்கள் ஒத்துழைப்பு தந்தாக வேண்டும்.
5. திருப்பரங்குன்ற தீபப் போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தலைவர்கள் ஆளாளுக்கு குறைந்தது பத்தாயிரம் தொண்டர்களையாவது தீப தரிசனத்திற்கு திரட்டிக் கொண்டு வர முயலக் கூடும். அவ்வாறு நேர்ந்து விட்டால் அந்தப் பெருங்கூட்டத்தை அவர்களே முறையாக ஒழுங்குபடுத்த முயற்சி எடுத்தாக வேண்டும்.
6. அன்புள்ளம் படைத்த முருக பக்தர்கள் செல்லும் வழியெங்கும் இஸ்லாமிய நண்பர்களைப் பேரன்போடு அரவணைத்து, இனிப்புகள் வழங்கி, மத நல்லிணக்கமே இந்து தர்மத்தின் உயரிய கோட்பாடுகளில் ஒன்று என்பதைச் செயல்பாட்டில் நிரூபிக்க வேண்டும்.
7. வதந்திகள், ஆத்திரமூட்டும் பதிவுகள், தேவையற்ற சமூக வலைதள விவாதங்கள் ஆகியவற்றை முற்றிலும் தவிர்த்து, அமைதியையும் பொறுப்புணர்வையும் ஒவ்வொரு பக்தரும் கடைப்பிடிக்க வேண்டும்.
மேற்கண்ட அனைத்தும் இனிதே நிகழ்ந்தேற வேண்டுமென எல்லாம் வல்ல திருமுருகக் கடவுளை எளியேன் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து இறைஞ்சுகிறேன்!
அறுபடை வீடுகளில் முதற் பெரும் வீடாம் திருப்பரங்குன்றத்தின் குகைக் கோயில் அதனில் பிரணவ ஞானப் பரம்பொருளாக வீற்றிருக்கும் அந்த முருகக்கடவுள் மனங்கனிந்து அருள்பாலிப்பானாக!
எங்கெங்கும் முருகப் பெருமானின் திருநாமம் ஒலிக்கட்டும்!
மனிதநேயம் மலரட்டும்!
நல்லிணக்கம் நிலைக்கட்டும்!
தாய்த் தமிழகம் ஓங்கோங்கி உயரட்டும்!
திருப்பரங்குன்றம் முருகப் பெருமானுக்கு ஹர ஹரோ ஹரா !
பேரன்புடன்,
ஸ்ரீராம் திருவரங்கம்
எழுத்தாளர் – இயக்குநர்









