- ராஜன் குறை
ஒன்றிய அமைச்சரவை நேற்று முன்மொழிந்துள்ள புதிய தொகுதி மறுசீரமைப்பு அரசமைப்பு சட்ட தீர்மானத்திற்கு தி.மு.க இன்று ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது. உடனே இது மாபெரும் ஆபத்து என்ற பெரும் கூச்சல்கள் எழுகின்றன. தி.மு.க பாஜக-வுடன் இணைந்துவிட்டது, நாட்டின் எதிர்காலத்தையே காவு கொடுத்துவிட்டது என அபத்தமான குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. உடனே தி.மு.க எதிர் மனோவியல் கொண்டவர்கள் ஒத்தூதத் தொடங்கி விட்டார்கள்.
இது பற்றி புரியாதவர்களுக்கு முக்கிய அம்சங்களை விளக்க விரும்புகிறேன்.
- தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியது அரசியலமைப்பு சட்டம் விதித்துள்ள கடமையாகும். குடும்பக்கட்டுப்பாடு அறிமுகம் செய்யப்பட்டு, தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் சிறப்பாக நடைமுறைப் படுத்தியதால் ஏற்பட்ட மாற்றத்தை கணக்கில் கொண்டு 1976, 2001 ஆகிய ஆண்டுகளில் அரசமைப்பு சட்ட திருத்தம் மூலம் இந்த கடமை ஒத்திவைக்கப் பட்டது.
- அரசமைப்பு சட்டம் இந்திய மக்கள் என்பதை ஒற்றை அடையாளமாகத்தான் கருதுகிறது. ஒரு மாநிலத்தின் மக்கள் என்பதை தனி அடையாளமாக அங்கீகரிக்கவில்லை. அதனால் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் அந்தந்த மாநிலங்களின் மக்கள் தொகைக்கு ஏற்பத்தான் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்கும்.
- ஒன்றிய அரசில் ஆட்சி செய்யும், பல மாநிலங்களில் ஆட்சி செய்யும் இன்றைய நிலையில் வலுவான கட்சியாக விளங்கும் பாஜக நாடாளுமன்ற தொகுதிகளை அதே எண்ணிக்கையில் நீடிப்பதை ஏற்க மறுக்கிறது. அதனால் தொகுதி மறுசீரமைப்பை மீண்டும் 25 ஆண்டுகள் ஒத்திவைக்கும் தீர்மானத்தை இயற்றாது.
- ஒருவேளை 2029 தேர்தலில் பாஜக ஆட்சியை பறிகொடுத்தால் கூட, எதிர்கட்சிகளுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருந்தால்தான் மீண்டும் 25 ஆண்டுகள் மறுசீரமைப்பை ஒத்திவைக்கும் சட்ட திருத்தத்தை நிறைவேற்ற முடியும். இதற்கான சாத்தியம் மிக, மிகக் குறைவு.
- அப்படி நிறைவேற்ற இயலவில்லை என்றால் மக்கள் தொகைக்கு ஏற்ப மறுசீரமைப்பு நடப்பதைத் தடுக்க முடியாது. ஏனெனில் அரசமைப்பு சட்டம் விதித்துள்ள கடமை. அப்போது தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களின் நலன்கள் கடுமையாக பாதிக்கப்படும்.
- அதற்கு மாற்றாக இப்போது பாஜக இப்போது மாநிலங்களின் பிரதிநிதித்துவ விகிதாசாரம் மாறாமல் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரித்து அடுத்த 25 ஆண்டுகளுக்கு நிலைப்படுத்த முன்வருகிறது. இதுதான் “நியாயமான மறுசீரமைப்பு” என்ற Fair Delimitation.
- தி.மு.க-வின் நிலைபாடு என்றுமே நியாயமான மறுசீரமைப்பு இல்லை என்றால் இல்லை மறுசீரமைப்பு என்பதுதான். If no Fair Delimitation, then No Delimitation. இந்த நிலைபாட்டைத் திரித்து முதலில் இல்லை மறுசீரமைப்பு என்று சொல்லிவிட்டு இப்போது நியாயமான மறுசீரமைப்பு என்று சொல்வதாக எதிரிகள் கயிறு திரிக்கிறார்கள்.
- இப்போது நியாயமான மறுசீரமைப்பை பாஜகவே செய்ய ஏற்றுக்கொள்வதால், அதனை ஆதரிப்பதன் மூலம் மாநில விகிதாசாரத்தைக் காப்பதுதான் மாநிலங்களின் நலனைக் காப்பதாகும். இதன் மூலம் “மாநில மக்கள்” என்ற தனி அடையாளத்திற்கு அரசமைப்பு சட்ட அங்கீகாரம் மறைமுகமாகக் கிடைக்கிறது.
- மாநில நலன்களைக் காக்க நாடாளுமன்ற மாநில பிரதிநிதித்துவ விகிதாசாரத்தைக் காக்க வேண்டும் என்ற புதிய கருத்தாக்கத்திற்கு அங்கீகாரம் கிடைப்பது மாநில சுயாட்சிக்கான பயணத்தில் முக்கியமான படிக்கல்லாகும்.
- மேலும் மக்கள் தொகை பெருக்கம் உள்ளபடியே அதிக பிரதிநிதித்துவத்தைக் கோருகிறது. அப்போதுதான் பெண்கள், சிறுபான்மையினர், தலித் பழங்குடியனர் பிரதிநிதித்துவங்களையும் அதிகரிக்க முடியும் என்பதும் புறக்கணிக்கத்தக்க கருத்தல்ல.
- பாஜக அரசு தொகுதி மறுசீரமைப்பு செய்தால் ஜெர்ரிமாண்டரிங் செய்துவிடுவார்கள் என்று கூறப்படுகிறது. அதாவது அவர்கள் வெற்றிபெறுவதற்கு வசதியாக தொகுதிகளின் எல்லைகளை வகுப்பார்கள் என்பது கருத்து. இது எப்போதுமே நடக்கக் கூடியதுதான். ஆனால் தேர்தல் முடிவுகளை இது முற்றிலும் மாற்றிவிடும் என்ற அளவு பதறுவது, இந்துக்களின் வாக்குகளை பிற கட்சிகள் பெற முடியாது என்று மறைமுகமாக ஒப்புக்கொள்வது. ஆரோக்கியமான அரசியல் அல்ல.
- இந்திய தேர்தல் நடைமுறைகள் மின்னணு வாக்குப்பதிவை, வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் என பல நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டுள்ளது. அவையெல்லாம் தொகுதி மறுசீரமைப்பை விட பல மடங்கு தீவிரமான பிரச்சினைகள். அவற்றைக் குறித்த பொதுக்கருத்தை உருவாக்குவதும். போராடுவதும்தான் மிகவும் அவசியம். எப்படியாவது தி.மு.க-வை தனிமைப்படுத்தி பாஜகவுடன் இணைத்துவிட்டு, விஜய் என்ற டிரோஜன் குதிரையில் சவாரி செய்வது முற்போக்கானது என்று காங்கிரஸ் நினைக்கலாம். அனைவரும் அதையே செய்வது நல்லதல்ல.









