உச்ச நீதிமன்ற உத்தரவுபடி திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்பட்டது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்காவுக்கு அருகிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த நவம்பர் 20ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் தீபம் ஏற்றப்படாததால் இன்று (நவம்பர் 28) கட்டாயம் ஏற்றியே ஆக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இதையொட்டி திருப்பரங்குன்றம் மலை முழுவதும் சிஆர்பிஎப் பாதுகாப்புக்குள் கொண்டு வரப்பட்டது.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, ஓய்வுபெற்ற நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், வி. பார்த்திபன் ஆகியோர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தனர்.
தொடர்ந்து, திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் சென்ற அவர்கள், கோயில் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். கோயில் ஸ்தானிகர்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
தீபத்தூணைச் சுற்றி சாரம் அமைக்கப்பட்டு, தீபம் ஏற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நெய், திரி உள்ளிட்ட பொருட்களும் மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டன.
ஓய்வுபெற்ற நீதிபதி எஸ். வைத்தியநாதன், இன்று மாலை 5 மணியளவில் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படும் என்று தெரிவித்திருந்தார்.
எனவே மாலை 3.30 மணிக்கே ஓய்வு பெற்ற நீதிபதிகள் மலை ஏறத்தொடங்கினர். 5 மணிக்கு முன்னதாகவே அந்த தூண் பகுதிக்கு சென்றதால், அங்கு அமர்ந்து தீபம் ஏற்றுவதற்கான பணிகளை பார்வையிட்டனர். அவர்களுடன் மாவட்ட ஆட்சியரும் நிஷாந்த் கிருஷ்ணாவும் சென்றுள்ளார்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியர் மலை ஏற இந்து முன்னணியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் ஓய்வுபெற்ற நீதிபதி எஸ். வைத்தியநாதன், கலெக்டர் வந்தே ஆக வேண்டும். அவர் தான் ரிப்போர்ட் செய்ய வேண்டும் என்று கூறினார்.

ஓய்வுபெற்ற நீதிபதிகள், அதிகாரிகளுடன் வழிகாட்டு குழுக்களால் அனுமதிக்கப்பட்ட 50 பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்கள் மலையில் கட்டப்பட்டிருந்த சாரத்தில் ஏறி, களி மண் பூசி அதற்கு மேல் வைக்கப்பட்டிருந்த தீப சட்டியை வழிபட்டனர். இந்நிலையில் ஒருவர் சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் செய்ததை போலை சைகையும் செய்து காட்டினார்.

இந்நிலையில் அனைத்து பணிகளும் முடிவடைந்து, உச்ச நீதிமன்ற உத்தரவுபடி இன்று (நவம்பர் 28, 2026) சர்ச்சைக்குரிய அந்த தூணில் தீபம் ஏற்றப்பட்டது.

தூணில் வைக்கப்பட்டிருந்த தீப சட்டிக்கு அர்ச்சகர்கள் ஆரத்தி காட்டி, தீபாராதனையை ஓய்வு பெற்ற நீதிபதிகளிடம் வழங்கினர். தொடர்ந்து அவர்கள் தீபம் ஏற்றினர்.









