தொகுதி மறுவரையறையில் தமிழகத்தின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதம் குறையக் கூடாது என 2024-ஆம் ஆண்டு முதல் திமுக முன்னெடுத்து வந்த போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றிதான் மத்திய அரசின் புதிய தொகுதி மறுவரையறை மசோதா என திமுக தலைவரான முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது: கடந்த ஏப்ரல் மாதம் எந்தக் காரணங்களுக்காக Delimitation சட்டமுன்வரைவை எதிர்த்தோமோ, அந்த இரண்டு கோரிக்கைகளும் எழுத்துப்பூர்வமாகப் புதிய சட்டமுன்வரைவில் சேர்க்கப்பட்டுள்ளன. இது, 2024-ஆம் ஆண்டுமுதல் தி.மு.கழகம் மேற்கொண்ட தொடர் போராட்டங்களுக்கான வெற்றி! தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் அனைத்துக்குமான வெற்றி!
1971 மக்கள்தொகையின் அடிப்படையிலேயே அனைத்து மாநிலங்களுக்கும் 50% தொகுதிகள் உயர்வு எனும் இந்த Delimitation Bill-ஐத் தவறவிட்டால் என்ன நடக்கும் என உணர்ச்சிவயப்படாமல் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அதையெல்லாம் தீர ஆராய்ந்துதான், நடைமுறைக்குச் சாத்தியமானதில் நமக்குச் சாதகமான இந்த வடிவிலேயே Delimitation நடந்திடத் தி.மு.கழகம் ஆதரவளிக்கும் என்ற நிலைப்பாடு இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.














