டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினிடம் பேசிய அமித்ஷா.. அதிர்ச்சியில் ராகுல்.. திமுக எம்.பிக்களின் காரசார விவாதம்.. பாஜகவை ஆதரிக்கும் முடிவின் பின்னணி என்ன?

By Minnambalam Desk

|

Published on 28 Nov 2026, 3:51 PM

Amit Shah-MK Stalin- Rahul Gandhi

வைஃபை ஆன் செய்ததும், “உனக்கென உனக்கென பிறந்தேனே…”ன்னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னங்க ப்ரோ.. யாரோ யாரையோ தேடுவது போல இருக்குதே?

நாடாளுமன்றம் சிறப்பு கூட்டத்தை கூட்டிருச்சு பாஜக.. அதுவும் தொகுதி மறுவரையறை மசோதாவை மறுபடியும் கொண்டு வருது.. அப்ப ஆதரவை தேடித்தானே பாஜக போகனும்..

ADVERTISEMENT

நம்ம தமிழ்நாட்டிலும் திருப்பரங்குன்றம் தீபம் ஒரு பக்கம், கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. கைது ஒரு பக்கம்னு அலையடிச்சுகிட்டு இருக்கிற நேரத்துல திமுக, பாஜகவின் புதிய தொகுதி மறுவரையறை திருத்த மசோதாவை ஆதரிப்போம்னு அதிரடியாக அறிவிச்சுருக்கு..

“நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால், தமிழகத்தின் தற்போதைய 7.18% பிரதிநிதித்துவம் எந்தச் சூழ்நிலையிலும் குறையக் கூடாது; 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட மாநிலங்களுக்கிடையேயான தற்போதைய நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாச்சாரத்தை மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கனும்”.. இதுதான் திமுக தொடர்ந்து வலியுறுத்துகிற கோரிக்கை. இந்த 2 டிமாண்டும் இப்ப பாஜக கொண்டு வந்திருக்கிற புதிய மசோதாவில இருக்குது.. அதனால பாஜக மசோதாவை ஆதரிக்கிறோம்னு திமுக அறிவிச்சிருக்கு..

ADVERTISEMENT

ஏங்க ப்ரோ.. பாஜகவோட மசோதாவை திமுக ஆதரிக்குது அப்படிங்கிறது சட்டென ஒரு வரியில கிராஸ் பண்ணிட்டு போக முடியாதுல்ல..

புரியுதுங்க ப்ரோ.. திமுக இந்த முடிவை எடுக்கிறது பின்னணியில இருக்கிற மூவ்ஸ் பத்திதானே கேட்கிறீங்க.. விலாவாரியாகவே சொல்றேன்.. இதை பத்தி நாம ஸ்டாலினுக்கு நெருக்கமான சீனியர் திமுக லீடர்ஸ்கிட்ட பேசுனப்ப, “பாஜக இப்படி ஒரு மசோதாவை கொண்டு வரப் போகுதுன்னு கடந்த சில மாதமாகவே பேச்சு இருக்குது.. இந்த மசோதாவை திமுகவும் ஆதரிக்க சான்ஸ் இருக்குன்னு பரவலாக பேசிகிட்டு இருந்தாங்க..

ADVERTISEMENT

இதனால கல்யாண பத்திரிகை கொடுக்கப்போன கலாநிதி மாறன்கிட்ட சோனியா காந்தி, “திமுக கூட்டணியை விட்டு போனதுல எனக்கோ, பிரியங்காவுக்கோ கொஞ்சமும் விருப்பம் இல்லை.. இதை உங்க தலைவர்கிட்ட (ஸ்டாலினிடம்) சொல்லிடுங்க”ன்னு சொன்னாங்க.. அதே மாதிரி ராகுல் காந்தியும், “அன்னைக்கு இருக்கிற சூழ்நிலையில அப்படி ஒரு முடிவை நாங்க எடுக்க வேண்டியதா இருந்துச்சு.. அரசியல் சூழ்நிலைகள் நிச்சயம் மாறும்தானே.. பாஜகவை கடுமையாக எதிர்க்கனும்.. திமுகவை இந்தியா கூட்டணிக்கு திரும்ப வரச் சொல்லுங்க… உங்க லீடர்கிட்ட (ஸ்டாலினிடம்) நான் சொன்னேன்னு சொல்லுங்க”ன்னு கலாநிதியிடம் சொல்லி அனுப்பி இருந்தார்.

இதோட நிற்கலையே காங்கிரஸ்.. எங்க கட்சி சீனியர் எம்.பி.க்களை போனில பிடிச்சு, “பாஜக கொண்டு வரப் போகிற மசோதாவை ஆதரிக்கிற முடிவை அவசரப்பட்டு எடுத்துடாதீங்க” ன்னு பேசுனாங்க.. காங்கிரஸ் சீனியர் லீடர்ஸ் சிலர், ஸ்டாலின்கிட்ட பேசவும் முயற்சியும் செஞ்சாங்க..

காங்கிரஸ் இப்படி மூவ் செய்யும் போது பாஜகவும் தன் பங்குக்கு செய்யும் இல்லைங்களா? கனிமொழிகிட்ட அமித்ஷா பேசினார்.. அப்ப, “நீங்க வைக்கிறது 2 டிமாண்ட்ஸ்தான்.. அதை நாங்க புதுசா கொண்டு வர மசோதாவில சேர்த்துடுறோம்.. அதனால மசோதா வரும் போது திமுக எம்.பி.க்கள் ஆதரிக்கனும்”னு கனிமொழியிடம் அமித்ஷா கேட்டுகிட்டார்.. கனிமொழியோ, “எங்க தலைவர்கிட்ட நீங்க சொல்றதை சொல்றேன்.. தலைவர்தான் முடிவு எடுக்கனும்”னு சொல்லிட்டாங்க.. இந்த தகவலையும் ஸ்டாலின்கிட்ட கனிமொழி ஷேர் செஞ்சாங்க..

அமித்ஷா அதோட நிற்கிறவாரா என்ன? ஸ்டாலினையும் தொடர்பு கொண்டு பேசினார்.. அப்ப, “நீங்க சொல்கிறபடியான 2 விஷயங்களையும் புதிய மசோதாவில சேர்த்துவிடுகிறோம்.. திமுக எம்.பி.க்கள் 22 பேரின் ஆதரவும் தேவை”ன்னு கேட்டுகிட்டார்..

அதோட ஸ்டாலினிடம் அமித்ஷா பேசும் போது, “சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் எங்களோட கூட்டணிக்கு வர்றாங்க.. கேபினட்டில சரத்பவார் மகள் சுப்ரியா சுலே ஜாயின் பண்ண போறாங்க.. அதனால திமுகவும் கேபினட்டில இணையனும் பிரதமர் மோடி ரொம்பவே விரும்புகிறார்… திமுகவும் மத்திய அமைச்சரவையில இணையனும்”ன்னும் கேட்டுகிட்டார்..

ஆனால் ஸ்டாலினோ, “மசோதா பத்தி நீங்க சொன்னதை நாங்க டிஸ்கஷன் செய்யறோம்.. மற்றபடி மத்திய அமைச்சரவையில சேருகிற விருப்பம் எல்லாம் எங்களுக்கு எதுவும் இல்லை”ன்னு அமித்ஷாகிட்ட சட்டுன்னு மறுப்பும் சொல்லிட்டார். ஸ்டாலினிடம் அமித்ஷா பேசிய தகவல் கிடைத்ததும் ராகுல் காந்திக்கு ரொம்பவே அதிர்ச்சி.

இதுக்கு பிறகு நேற்று மத்திய அமைச்சரவை கூடி, தொகுதி வரையறைக்கான புதிய அரசியல் சாசன திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் கொடுத்துச்சு…

அதேநேரத்துல சென்னையில ஸ்டாலின் தலைமையில நேத்து ஒரு சீரியஸ் டிஸ்கஷனும் நடந்தது. அதுல துரைமுருகன், டிஆர் பாலு, கனிமொழி, திருச்சி சிவா, ஆ.ராசா, தயாநிதி மாறன், என்.ஆர். இளங்கோ எல்லாம் கலந்துகிட்டாங்க.. அந்த கூட்டத்துல, மத்திய அரசின் புதிய மசோதாவில என்னவெல்லாம் இருக்குதுன்னு சட்ட ரீதியான விஷயங்களை என்.ஆர். இளங்கோ விவரிச்சாரு.

அந்த டிஸ்கஷனில திருச்சி சிவா பேசுறப்ப, “50 வருஷமா மாநில சுயாட்சி பத்தி பேசிகிட்டு இருக்கேன்.. நாம மாநில சுயாட்சியை பேசுற கட்சி.. நாம கொள்கையை விட்டுடக் கூடாது.. அதுவும் பாஜக கொண்டு வருகிற மசோதாவை நாம ஆதரிக்கக் கூடாது”ன்னு ஆரம்பிச்சு தொகுதி மறுவரையறை விஷயத்துல, காங்கிரஸ் நிலைப்பாடு என்னவோ அதை ஆதரிச்சு பேசினார்..

அப்ப கனிமொழி, “மகளிர் இடஒதுக்கீடு பத்தி நாம எத்தனை வருஷமா பேசிகிட்டு இருக்கிறோம்.. இப்ப நாம சொன்ன டிமாண்ட்ஸை பாஜக ஏத்துகிட்டு மசோதாவிலேயும் சேர்த்துட்டாங்க.. அப்ப அதை ஆதரிக்கனும்தானே.. காங்கிரஸ் கட்சி என்ன செய்யனும்னு சொன்னதே நாமதானே”ன்னு குரலை உயர்த்திப் பேச எல்லாருமே அவரையே உன்னிப்பா கவனிச்சாங்க..

ஆ.ராசா பேசும் போது, “நாம மாநில சுயாட்சி பேசுகிற கட்சிதான்.. நம்ம கொள்கைதான் மாநில சுயாட்சி.. யாரும் இல்லைன்னும் சொல்லலையே.. யாரும் கைவிடவும் செய்யலையே.. நாம என்ன சொன்னோமோ நாம எந்த கோரிக்கையை முன்வைச்சோமோ அதை பாஜக ஏத்துகிட்டு இருக்காங்க”ன்னு அழுத்தமா சுட்டிக்காட்டினார்..

அத்துடன், “நாம இன்னைக்கு இருக்கிற கிரவுண்ட் ரியாலிட்டி என்னா அப்படிங்கிறதையும் பார்க்கனும்.. நாமதான் இடஒதுக்கீட்டுக்கு போராடினோம்.. பிசி எம்பிசி மக்களுக்காக நாம போராட்டம் நடத்துனோம்.. அன்னைக்கு காலேஜ் அதிகமாக இல்லை.. அதனால இடஒதுக்கீடு வேல்யூவாக இருந்தது.. அரசாங்க வேலை வாய்ப்பும் அன்னைக்கு முக்கியமா இருந்தது. அதனால இடஒதுக்கீடு ஏன் தேவை அப்படிங்கிற புரிதல் இருந்தது..

ஆனா இன்னைக்கு எங்க திரும்பினாலும் காலேஜ்.. சீட் ஈஸியா வாங்கிடுறாங்க.. அரசாங்க வேலை பத்தின கவலை இன்னைக்கு இல்லாம போகுது.. அதனால இடஒதுக்கீடு பத்தியோ அதுக்காக போராடுற நம்மை பத்தியோ இப்ப யாரும் நினைச்சு பார்க்கிறது இல்லை.. அதே மாதிரி காலம் காலமாக நாம மைனாரிட்டிக்காக நிற்கிறோம்.. இன்னைக்கும் என்னைக்கும் நிப்போம்.. ஆனால் அந்த மைனாரிட்டி வோட்டர்ஸ் நம்மை எப்படி சப்போர்ட் பண்றாங்கன்னு ரிசல்ட்ஸ் பார்க்கும் போது தெரியுது.. அதனால காலத்துக்கு ஏத்தமாதிரி நாமும் சில முடிவுகளை எடுக்கனுமே தவிர இன்னும் 50, 60 வருஷதுக்கு முன்னாடி மாதிரி இருந்துடவும் கூடாது” அப்படிங்கிற வாய்ஸும் அந்த டிஸ்கஷனில வந்தது..

இந்த காரசார விவாதங்களுக்கு நடுவே குறுகிட்ட ஸ்டாலின், “பாஜககிட்ட போய் நாம இதை செய்யுங்கன்னு கேட்கலை.. நாம முன்வைச்ச கோரிக்கைகளை அவங்களா ஏத்துகிட்டாங்க.. அவங்களா இறங்கி வந்து இதை எல்லாம் செஞ்சிருக்கிறோம்னு சொல்றாங்க.. நாம ஒன்னும் பாஜகவோட கூட்டணியும் வைக்கலை.. மத்திய அமைச்சரவையிலும் சேரலையே.. இந்த ஒரு மசோதாவை ஆதரிக்கலாம் அப்படிங்கிறதுதானே..”ன்னு சொல்லி அந்த டிஸ்கஷனை முடிச்சு வெச்சார்..

அதுக்கு பிறகுதான் நேத்து ட்விட்டரில, “தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்துல திமுகவின் கோரிக்கை என்ன? நிலைப்பாடு என்ன”ன்னு திட்டவட்டமான போஸ்ட் போட்டார் ஸ்டாலின்.

இந்த போஸ்ட் போட்ட கொஞ்ச நேரத்துல- அதாவது புதிய திருத்த மசோதாவை அதிகாரப்பூர்வமாக டெல்லி வெளியிடுறதுக்கு முன்னாடி நேற்று மாலையிலேயே ஸ்டாலினுக்கு ஒரு நகலை டெல்லியில இருந்து அனுப்பி வெச்சுட்டாங்க… அந்த நகல் கிடைச்சதும் என்.ஆர்.இளங்கோவை வைத்து கொண்டு, திமுக முன்வைச்ச கோரிக்கைகளை எல்லாம் புதிய திருத்த மசோதாவில் சரியா சேர்த்திருக்காங்களான்னு கிராஸ் செக் செஞ்சு கன்பார்ம் பண்ணிகிட்டாரு ஸ்டாலின்..

இதுக்கு பிறகுதான் இன்னைக்கு அண்ணா அறிவாலயத்தில திமுக எம்.பி.க்கள் கூட்டத்தை ஸ்டாலின் கூட்டினார்.. அதுல பேசும்போது, “உணர்ச்சி வசப்படாமல், தொலைநோக்குப் பார்வையுடன் தொகுதி மறுவரையறை பிரச்னையை நாம அணுகியுள்ளோம். தொகுதி மறுவரையறை மசோதா திரும்ப கொண்டு வரப்படும் போது தி.மு.க. என்ன நிலைப்பாடு எடுக்கும் என்று தான் கடந்த சில மாதங்களாக இந்தியா முழுக்க பேசப்பட்டு வந்தது. அதற்கான தெளிவான பதிலை நேற்று நாம் கொடுத்துள்ளோம். நமக்கு மசோதாவின் நகல் கிடைத்துவிட்டது. அதில் நாம் முன்வைத்த இரண்டு முக்கியமான கோரிக்கைகளுமே இடம்பெற்றுள்ளது. இது நம்முடைய 3 ஆண்டு தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. நம்மை பொறுத்தவரை, நாம் முன்வைத்த இரண்டு கோரிக்கைகளிலும் நாம் தற்போது வரை உறுதியாக உள்ளோம். தமிழ்நாட்டின் நலன் பறிபோக கூடாது, அதில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். நம்முடைய கடமைய நாம செய்துள்ளோம். இதை எல்லோரிடமும் எடுத்துச் சொல்லுங்கள். நாடாளுமன்ற கூட்ட தொடரில் நம் நிலைப்பாட்டை ஓங்கிச் சொல்லுங்கள். கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படையாக சொல்வதில் தயக்கம் கூடாது”ன்னு சொல்லிட்டு, “எப்போது வாள் எடுக்க வேண்டும், எப்போது கேடயம் எடுக்க வேண்டும் என்பதை சரியாகத் தீர்மானிக்க வேண்டும் என தலைவர் கலைஞர் சொல்லியிருக்கிறார். அதன்படி நடந்துகொள்ளுங்கள்”ன்னு அட்வைஸும் செஞ்சி பேசுனார்..

இந்த கூட்டத்துக்கு பிறகுதான் ஆ.ராசா, பிரஸ்மீட்ல, “தொகுதி மறுவரையறை மசோதாவை நிபந்தனைகளுடன் ஆதரிக்கிறோம்”னு அறிவிச்சார்”னு ஷேர் செஞ்சாங்க ப்ரோ…

திமுகவோட இந்த முடிவை ‘ஜீரணிக்க முடியாம’ காங்கிரஸ் ரொம்பவே டென்ஷனில் இருக்குது.. ஆனா, “காங்கிரஸ் நம்ம முதுகில் குத்திட்டு போனது.. ஆனா இன்னைக்கு நாம முன்வைச்ச டிமாண்ட்ஸை பாஜக ஏத்துகிட்டதால மசோதாவை நாம ஆதரிக்கிறோம்.. காங்கிரஸுக்கு நல்லாதான் ரிவீட் அடிச்சிருக்கிறார் நம்ம தலைவர்”ன்னு திமுகவினர் ஸ்டாலினை பாராட்டுறாங்க..

அதேநேரம் திமுகவை எதிர்ப்பவர்கள், “பாஜக- ஆர்.எஸ்.எஸ்.- பிடியில் திமுக சிக்கியிருச்சு”ன்னு ஆரம்பிச்சு ஸ்டாலினையும் திமுகவையும் கடுமையாகவும் விமர்சிக்கிறாங்கன்னு டைப் செய்தபடியே சென்ட் பட்டனைதட்டிவிட்டு ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam Desk

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel