வைஃபை ஆன் செய்ததும், “முடிகிற கதையினை தொடர்ந்திட மனம் இங்கு… துடிக்குதே துடிக்குதே…” என ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னங்க ப்ரோ.. ‘சின்னதம்பி’ பாட்டோடு இறங்கிட்டீங்க? எந்த ’தம்பி’யை பத்தி சொல்ல போறீங்க ப்ரோ?
வீட்டுல விசேஷம் போல.. பாட்டு போட்டிருந்தாங்க.. இப்ப நாம சொல்ல போறதும் வீட்டு விசேஷமும் அதுல நடந்த அரசியல் சமாச்சாரமும்தான்..
டெல்லியில காங்கிரஸ் கட்சி தலைமையில் இந்தியா கூட்டணி தொடர்ச்சியாக போராட்டங்கள், பேரணி நடத்திகிட்டு இருக்குது.. அண்மையில கூட ராம்லீலா மைதானத்துல மிக பிரம்மாண்ட பேரணி நடந்துச்சு.. இதுல லட்சக்கணக்கான பேர் கலந்து கிட்டாங்க.. தமிழ்நாட்டுல இருந்து விசிக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளை சேர்ந்தவங்களும் பங்கேற்றாங்க.. ஆனால் தமிழ்நாட்டுல இந்தியா கூட்டணியில இருக்கிறதா சொல்ற விஜய்யின் ஆளும் தவெக டெல்லி போராட்டங்களில் கலந்துக்கிறதே இல்லை..
இதை பத்தி காங்கிரஸ் மூத்த தலைவர்கள்கிட்ட பேசுனப்ப, “மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு எதிராக தொடர்ந்து இந்தியா கூட்டணி போராட்டம் நடத்துது..

தமிழக தலைவர்களும் பிரஸ்மீட்ல பேசும் போது தவெகவுக்கு அழைப்பு விடுக்கிறாங்க.. சென்னை சத்தியமூர்த்தி பவனில நடந்த ஒரு கூட்டத்துக்கும் எஸ்.ஐ.ஆர்-க்கு எதிரான ஒரு போராட்டத்துக்கும்தான் தவெகவில் இருந்து வந்தாங்க.. ஆனால் டெல்லி போராட்டங்களுக்கு பொதுவாக அவங்க வருவது இல்லை. இது எங்களுக்கு வருத்தம்தான்.. இந்த மாதிரி நாடு தழுவிய அளவில பாஜகவுக்கு எதிரான போராட்டம் நடத்துறப்ப இந்தியா கூட்டணியில திமுக இருந்திருந்தா இன்னும் வெயிட்டா இருந்திருக்கும் அப்படிங்கிறது எங்க எல்லாருக்குமே இருக்கிற கருத்துதான்.. அதனால இந்தியா கூட்டணியில திமுகவும் இடம் பெறனும்னுதான் நாங்க அழைப்பு விடுத்துகிட்டே இருக்கிறோம்”னு சொல்றாங்க..
இந்த சூழ்நிலையில சன் டிவி கலாநிதி மாறன், மகள் காவ்யா திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக டெல்லியில முக்கிய தலைவர்களுக்கும் அழைப்பிதழ் கொடுத்தார். காவ்யா மாறனுக்கும் இசையமைப்பாளர் அனிருத்துக்கும் திருமணம் கிரீஸில் நவம்பர் 11-ந் தேதி நடக்குது.. நவம்பர் 21-ந் தேதி சென்னை ஐடிசி ஹோட்டலில் பிரம்மாண்ட திருமண வரவேற்பு நடக்க இருக்குது..

டெல்லிக்கு போன கலாநிதி மாறன் குடும்பம், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் என பலருக்கும் இன்விடேஷன் கொடுத்தாங்க..
இதுல சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு அழைப்பிதழ் கொடுக்கிறப்ப பல அரசியல் விஷயங்கள் பேசப்பட்டதுன்னு சொன்னாங்க..
இதை பத்தி நாம விசாரிச்சப்ப, “கலாநிதி மாறனும் அவரது மனைவி காவேரி கலாநிதி மாறனும் சோனியா காந்தியை சந்திச்சாங்க.. அப்ப பிரியங்கா காந்தியும் கூட இருந்தாங்க..
கலாநிதியிடம், மாறன் குடும்பத்தினரை பற்றி நலம் விசாரிச்சுட்டு கலைஞர் குடும்பத்தில ஸ்டாலின் உள்ளிட்ட எல்லாரையும் பற்றி விசாரிச்சாங்க சோனியா காந்தி. அப்ப, “திமுக கூட்டணியில இருந்து காங்கிரஸ் விலகியதிலும் தவெக ஆட்சிக்கு ஆதரவு தந்ததிலும் எங்களுக்கு உடன்பாடு இல்லை. .நானும் பிரியங்காவும் அப்பவே இதுக்கு எதிர்ப்பு தெரிவித்தோம்.. இதை நீங்க கண்டிப்பா ஸ்டாலினிடம் சொல்லுங்க”ன்னு சொன்னார் சோனியா காந்தி..
கலாநிதியும், “நீங்க சொன்னதை மாமாவிடம் (ஸ்டாலினிடம்) சொல்கிறேன்”ன்னு சொன்னார்.

இதுக்கு பிறகு ராகுல் காந்திக்கு கலாநிதி மாறனும் காவேரி கலாநிதி மாறனும் அழைப்பிதழ் கொடுத்தாங்க.. அங்கேயும் இதே அரசியல்தான் பேசப்பட்டது.
கலாநிதி மாறனிடம், “அன்னைக்கு இருந்த சூழ்நிலைக்கு ஆட்சியில பங்கு அப்படிங்கிறது எல்லாம் பேசப்பட்டதால நாங்க திமுக கூட்டணியில இருந்து விலகி தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தந்தோம்.. கம்யூனிஸ்டு கட்சிகள், விசிக எல்லாம் அப்படி ஒரு முடிவு எடுத்ததால காங்கிரஸும் எடுக்க வேண்டிய நிலைமை இருந்தது. இன்னைக்கு சூழ்நிலை வேற மாதிரி இருக்கு..
இப்ப நாங்க பாஜகவை எதிர்த்து போராடிகிட்டு இருக்கிறோம்.. திமுகவும் பாஜகவை எதிர்க்குதுதானே.. அதனால இந்தியா கூட்டணியில திமுகவும் இணையனும்னுதான் நாங்க எதிர்பார்க்கிறோம்.. இதை “லீடர்” ஸ்டாலின்கிட்ட சொல்லுங்க.. அம்மாவும் (சோனியா) இதை பத்தி உங்ககிட்ட பேசியிருப்பாங்களே”ன்னு ராகுல் காந்தி சொன்னார்.. கலாநிதி மாறனும் எல்லாத்தையும் கேட்டுட்டு, “ஆமா.. அம்மாவும் சொன்னாங்க.. நிச்சயமாக நீங்க சொன்னதை மாமாவிடம் (ஸ்டாலின்) சொல்றேன்”ன்னு சொன்னார்”ன்னு ஷேர் செஞ்சாங்க ப்ரோ.

ஓஹோ.. டெல்லி மெசேஜ் எல்லாம் ஸ்டாலினுக்கும் போயிருக்குமே ப்ரோ?
ஆமாங்க ப்ரோ.. டெல்லியில சோனியா காந்தி, ராகுல் காந்தி சொல்லி அனுப்பின எல்லா விஷயங்களையும் ஸ்டாலின்கிட்ட கலாநிதி மாறன் சொல்லிட்டாராம்..
இதை பத்தி ஸ்டாலினுக்கு நெருக்கமான சர்க்கிளில் விசாரிச்சப்ப, “டெல்லியில சோனியாவும் ராகுல் காந்தியும் என்ன சொல்லிவிட்டாங்க அப்படிங்கிறதை கலாநிதி மாறன் முழுமையாக ஸ்டாலின்கிட்ட சொல்லிட்டார்.. ஆனா ஸ்டாலின் இதை பெருசா கண்டுக்கலை.. அதே நேரத்துல ஸ்டாலின் வேற ஒரு கணக்கு போடுகிறார்..
இந்தியா கூட்டணியில இருந்து தவெக தொடர்ந்து விலகி நிற்கிறது காங்கிரஸ் தலைவர்களுக்கு ரொம்பவே நெருடலாதான் இருக்குது.. பாஜகவுடன் தவெக ஒரு நல்ல புரிதலில் இருக்கிறதாலதான் இந்தியா கூட்டணிக்குள்ள தவெக வரமாட்டேங்குதுன்னு காங்கிரஸ் உறுதியா நம்புது.. அதனால் தவெக ஆட்சிக்கான ஆதரவை பத்தி சீக்கிரமே டெல்லி காங்கிரஸ் மேலிடம் முடிவெடுக்க சான்ஸ் இருக்குன்னு நினைக்கிறா ஸ்டாலின்.
இதை எல்லாம் மனசுல வெச்சுகிட்டுதான், “தவெக ஆட்சி விரைவில் கவிழ்ந்துடும்” அப்படின்னு ஸ்டாலின் பேசுகிறார்”ன்னு சொல்றாங்க ப்ரோ.
இந்த தகவல் எல்லாம் சிஎம் விஜய்-க்கு கிலியை ஏற்படுத்தி இருக்குதுன்னு சொல்றாங்க ப்ரோன்னு டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.









