அமெரிக்கா ஆளுநர் தேர்தல்: கோடீஸ்வர விவேக் ராமசாமியை தோற்கடித்த எமி ஆக்டன் யார்? ‘மேஜிக்’ நிகழ்ந்தது எப்படி?

By Mathi

|

Published on 4 Nov 2026, 3:57 PM

அமெரிக்காவின் ஓஹியோ மாகாண ஆளுநர் தேர்தலில் டிரம்ப் ஆதரவு பெற்ற இந்திய வம்சாளி கோடீஸ்வரரான விவேக் ராமசாமியைத் தோற்கடித்துள்ளார் பெண் மருத்துவர் எமி ஆக்டன். பெரும் பணபலத்தையும் அரசியல் செல்வாக்கையும் மீறி அவர் வென்றது எப்படி?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முழு ஆதரவு, துணை அதிபர் ஜே.டி. வேன்ஸின் ஆதரவு, தேர்தல் பிரசாரத்துக்காகச் சொந்தப் பணத்திலிருந்து சுமார் ரூ.390 கோடி கடன்.. இத்தனைக்கும் மேலாகப் பெரும் தொழிலதிபர்களின் ஆதரவும் இருந்தது.

ADVERTISEMENT

ஆனாலும் அமெரிக்காவின் ஓஹியோ மாகாண ஆளுநர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கோடீஸ்வரத் தொழிலதிபர் விவேக் ராமசாமி தோல்வியடைந்துள்ளார்.

அவரைத் தோற்கடித்திருப்பவர் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 60 வயது பெண் மருத்துவர் எமி ஆக்டன். சிறுவயதில் வறுமையைச் சந்தித்தவர். தங்குவதற்கு வீடின்றி, ஒரு குளிர்காலத்தில் கூடாரத்தில் வாழ்ந்தவர். பின்னர் மருத்துவராக உயர்ந்து, ஓஹியோ மாகாணத்தின் சுகாதாரத்துறை இயக்குநராகப் பணியாற்றியவர். இப்போது அமெரிக்க அரசியலில் பெரும் செல்வாக்கு பெற்றுள்ள டிரம்ப்பின் ஆதரவுடன் களமிறங்கிய விவேக் ராமசாமியைத் தோற்கடித்து, ஓஹியோ மாகாணத்தின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் ஆளுநர் என்ற வரலாற்றையும் படைத்திருக்கிறார் எமி ஆக்டன்.

ADVERTISEMENT

நவம்பர் 3-ந் தேதி நடைபெற்ற இந்தத் தேர்தலில் எமி ஆக்டனின் வெற்றி, ஓஹியோ மாகாணத்தில் கடந்த 20 ஆண்டுகளாக ஆளுநர் தேர்தலில் வெற்றி பெற முடியாமல் இருந்த ஜனநாயகக் கட்சிக்கும் முக்கியமான அரசியல் திருப்பமாக அமைந்துள்ளது.

ஆனால் இந்த வெற்றி எப்படி சாத்தியமானது? பல கோடி டாலர்கள் செலவிடப்பட்ட விவேக் ராமசாமியின் பிரசாரத்தையும், டிரம்ப் உள்ளிட்ட தலைவர்களின் ஆதரவையும் தாண்டி எமி ஆக்டன் வெற்றி பெற்றதற்குப் பின்னால் என்ன நடந்தது?

ADVERTISEMENT

ரூ.390 கோடி சொந்தப் பணம்

விவேக் ராமசாமி அமெரிக்காவில் மருந்து மற்றும் உயிரித் தொழில்நுட்ப நிறுவனங்கள் மூலம் பெரும் செல்வத்தை ஈட்டிய தொழிலதிபர். 2024 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சியின் வேட்பாளர் போட்டியில் களமிறங்கிய அவர், பின்னர் டிரம்ப்புக்கு ஆதரவு தெரிவித்தார். அதன்பிறகு டிரம்ப் ஆதரவாளர்கள் மத்தியில் முக்கியமான அரசியல் முகமாக வளர்ந்தார்.

இந்தப் பின்னணியில்தான் ஓஹியோ ஆளுநர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டார்.

தேர்தல் நிதி விவரங்களின்படி, விவேக் ராமசாமி தனது பிரசாரத்துக்குச் சொந்தப் பணத்திலிருந்து 4.13 கோடி அமெரிக்க டாலர் கடனாக வழங்கியிருந்தார். இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.390 கோடி. இது அவர் பிரசாரத்துக்குக் கொடுத்த கடன் தொகை.

அக்டோபர் இறுதியில் வெளியான தேர்தல் நிதி அறிக்கையின்படி, விவேக் ராமசாமியின் பிரசாரம் 5.11 கோடி டாலர் செலவிட்டிருந்தது. அதே காலத்துக்கான அறிக்கையில் எமி ஆக்டனின் பிரசாரச் செலவு 2.62 கோடி டாலராக இருந்தது.

இவை வேட்பாளர்களின் நேரடிப் பிரசாரக் கணக்குகள். அவர்களுக்கு ஆதரவாக வெளி அமைப்புகள் செய்த செலவுகள் தனியானவை.

விவேக் ராமசாமிக்கு ஆதரவான அரசியல் அமைப்புகளுக்கும் பெரும் நிதி கிடைத்தது. தொழிலதிபர் எலான் மஸ்க் மட்டும் ராமசாமிக்கு ஆதரவான அரசியல் குழுவுக்கு குறைந்தது 50 லட்சம் டாலர் வழங்கியதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இத்தனை நிதி ஆதரவு இருந்தும் தேர்தல் முடிவு அவருக்குச் சாதகமாக அமையவில்லை.

கூடாரத்தில் வாழ்ந்த சிறுமி எப்படி மருத்துவரானார்?

எமி ஆக்டனின் வாழ்க்கைப் பின்னணி, விவேக் ராமசாமியின் வாழ்க்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.

ஓஹியோவில் வளர்ந்த எமி ஆக்டன், சிறுவயதில் குடும்ப வறுமை, பாதுகாப்பற்ற சூழல், வீடற்ற நிலை ஆகியவற்றைச் சந்தித்தவர். ஒரு குளிர்காலத்தில் கூடாரத்தில் தங்கியிருந்த அனுபவமும் அவருக்கு உண்டு. குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட துன்புறுத்தல்களையும் அவர் பொதுவெளியில் பேசியிருக்கிறார்.

இந்தச் சூழலிலிருந்து கல்வி கற்று மருத்துவரானார். பொதுச் சுகாதாரத்துறையில் பணியாற்றிய அவர், ஓஹியோ மாகாணத்தின் சுகாதாரத்துறை இயக்குநராக உயர்ந்தார். அந்த சிறுவயது அனுபவங்களையே தனது அரசியல் பிரசாரத்தில் முக்கியமான அடையாளமாக மாற்றினார்.

வீட்டு வாடகை, குடும்பச் செலவுகள், மருத்துவ வசதி, குழந்தைகளின் எதிர்காலம் ஆகியவற்றைப் பற்றிப் பேசும்போது, அவை வெறும் தேர்தல் வாக்குறுதிகளாக மட்டுமல்லாமல், தனது வாழ்க்கையில் சந்தித்த பிரச்சினைகளாகவும் அவர் முன்வைத்தார். இதுதான் எமி ஆக்டனின் பிரசாரத்துக்கு ஒரு தனித்துவத்தைக் கொடுத்தது.

கொரோனா காலத்தில் கிடைத்த அறிமுகம்

எமி ஆக்டன் இதற்கு முன்பு எந்தத் தேர்தலிலும் வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதியாக இருந்ததில்லை. ஆனால் ஓஹியோ மக்களுக்கு அவர் முற்றிலும் அறிமுகமில்லாதவரும் அல்ல.

கொரோனா பெருந்தொற்றின் தொடக்கக் காலத்தில் ஓஹியோ மாகாண சுகாதாரத்துறை இயக்குநராக இருந்தார். அப்போது குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஆளுநர் மைக் டிவைனுடன் இணைந்து பொது சுகாதார நடவடிக்கைகளை விளக்கினார். கொரோனா தொற்றுப் பரவல், பள்ளிகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகள், பொதுமக்கள் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் அவரது முகமும் குரலும் ஓஹியோ மக்களுக்குப் பரிச்சயமானது.

அதே நேரத்தில், கொரோனா காலக் கட்டுப்பாடுகள் கடுமையாக இருந்ததாகக் குடியரசுக் கட்சியினர் அவரை விமர்சித்தனர். பள்ளிகள் மற்றும் தொழில்கள் பாதிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினர்.

அதாவது எமி ஆக்டனின் சுகாதாரத்துறை அனுபவம் அவருக்கு ஆதரவையும் எதிர்ப்பையும் ஒருசேர உருவாக்கியிருந்தது.

ஆனால் தேர்தல் பிரசாரத்தில் அந்த அனுபவத்தை, அரசுப் பொறுப்பில் இருந்தபோது நெருக்கடியைச் சமாளித்த அனுபவமாக அவர் முன்வைத்தார்.

வருமான வரியா? குடும்ப செலவா?

இந்தத் தேர்தலில் இரு வேட்பாளர்களுக்கும் இடையே பொருளாதாரக் கொள்கைகளில் முக்கியமான வேறுபாடு இருந்தது.

விவேக் ராமசாமி ஓஹியோ மாகாணத்தின் தனிநபர் வருமான வரியை ரத்து செய்வதை முக்கியமான வாக்குறுதியாக முன்வைத்தார். வருமான வரியை நீக்குவதன் மூலம் முதலீடுகளை ஈர்க்கலாம், தொழில் வளர்ச்சியை அதிகரிக்கலாம், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கலாம் என்பது அவரது வாதம்.

ஆனால் வருமான வரியை ரத்து செய்வதால் அரசின் வருவாயில் ஏற்படும் இழப்பை எப்படி ஈடுசெய்வது, பொது சேவைகளுக்கான நிதி எங்கிருந்து வரும் என்ற கேள்விகளும் எழுந்தன.

மறுபுறம் எமி ஆக்டன், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மையப்படுத்தினார். குழந்தைகளை வளர்க்கும் குடும்பங்களுக்கான வரிச் சலுகைகள், சொத்து வரிச் சுமை, மருத்துவச் செலவு, பொதுக் கல்வி, அன்றாடப் பொருட்களின் விலை ஆகியவை அவரது பிரசாரத்தில் முக்கிய இடம் பெற்றன.

ஒருபுறம் வருமான வரியை நீக்கி முதலீடுகளையும் பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிப்பது; மறுபுறம் குடும்பங்களின் அன்றாடச் செலவையும் வரிச் சுமையையும் குறைப்பது என்கிற இந்த இரண்டு பொருளாதார அணுகுமுறைகளுக்கு இடையிலான வேறுபாடும் தேர்தலில் வெளிப்பட்டது.

வருமான வரி ரத்து என்பது அதிக வருமானம் பெறுவோருக்கு அதிகமான நேரடிப் பலனை வழங்கக்கூடும். அதே நேரத்தில், வரி குறைப்பால் முதலீடுகளும் வேலைவாய்ப்புகளும் பெருகும் என்பது ராமசாமி தரப்பின் வாதமாக இருந்தது.

எமி ஆக்டனோ, பொருளாதார வளர்ச்சியைப் பற்றிய பெரிய வாக்குறுதிகளுடன் சேர்த்து, ஒரு குடும்பம் மாதந்தோறும் சந்திக்கும் செலவுகளுக்குத் தீர்வு காண்பதையே முன்னிலைப்படுத்தினார்.

விவேக் ராமசாமியின் பெரும் செல்வத்தையும் எமி ஆக்டனின் சிறுவயது வறுமையையும் ஒப்பிட்டுப் பேசிய ஜனநாயகக் கட்சியினர், சாதாரண மக்களின் பொருளாதார சிரமங்களை யார் நன்கு புரிந்துகொள்வார்கள் என்ற கேள்வியையும் எழுப்பினர்.

ஆனால் இந்தக் கொள்கை வேறுபாடு மட்டுமே தேர்தல் முடிவைத் தீர்மானித்தது என்று சொல்ல முடியாது. பிரசாரத்தின் இறுதிக் கட்டத்தில் நடந்த மற்றொரு சம்பவமும் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

எமி ஆக்டனின் தாயை வைத்து வெளியான விளம்பரம்

தேர்தல் பிரசாரத்தின் இறுதி வாரங்களில் விவேக் ராமசாமி தரப்பு வெளியிட்ட ஒரு விளம்பரம் பெரும் எதிர்ப்பைச் சந்தித்தது. அந்த விளம்பரத்தில் எமி ஆக்டனிடமிருந்து பல ஆண்டுகளாகப் பிரிந்து வாழும் அவரது தாய் டோனா ஆர்தர் இடம்பெற்றிருந்தார். அவர் தனது மகள் உண்மையைப் பேசுவதில்லை என்று குற்றம்சாட்டியதுடன், எமி ஆக்டனுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த விளம்பரம் ஏன் இவ்வளவு சர்ச்சையானது?

எமி ஆக்டன் சிறுவயதில் தனது வளர்ப்பு தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாகக் கூறியிருந்தார். அந்த வழக்கில் வளர்ப்பு தந்தை மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவர் நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்ளாமல் தலைமறைவானார்.

இந்தச் சம்பவங்களுக்குப் பின்னர் எமி ஆக்டனின் தாய் தனது குழந்தைகளைப் பாதுகாக்கிற உரிமையை இழந்திருந்தார். எமி ஆக்டனுக்கும் அவரது தாய்க்கும் இடையே சுமார் 50 ஆண்டுகளாக நெருக்கமான உறவு இல்லை.

இப்படிப்பட்ட பின்னணியைக் கொண்ட குடும்ப உறவைத் தேர்தல் விளம்பரத்தில் பயன்படுத்தியதற்கு ஜனநாயகக் கட்சியினர் மட்டுமல்லாமல் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

குறிப்பாக ஓஹியோவின் குடியரசுக் கட்சி ஆளுநர் மைக் டிவைன், அந்த விளம்பரத்தைத் திரும்பப் பெறுமாறு விவேக் ராமசாமி தரப்பைக் கேட்டுக்கொண்டார். இருப்பினும் விவேக் ராமசாமி, தனது தரப்பை நியாயப்படுத்தினார். அதிபர் டிரம்ப்பும் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸும் அந்த விளம்பரத்தை ஆதரித்தே பேசினர். இறுதியில் தேர்தலுக்கு முன்பாக விளம்பரம் நிறுத்தப்பட்டது.

இந்தச் சர்ச்சை எமி ஆக்டனின் பிரசாரத்துக்கு அனுதாபத்தையும் ஆதரவையும் உருவாக்கியதாக அமெரிக்க ஊடகங்கள் விவரிக்கின்றன.

டிரம்ப் ஆதரவு ஏன் கைகொடுக்கவில்லை?

ஓஹியோ மாகாணம் அமெரிக்க அதிபர் தேர்தலில் முக்கியமான அரசியல் வரலாற்றைக் கொண்டது. ஒருகாலத்தில் குடியரசுக் கட்சியும் ஜனநாயகக் கட்சியும் கடுமையாகப் போட்டியிட்ட மாகாணமாக இருந்த ஓஹியோ, அண்மைக்கால அதிபர் தேர்தல்களில் குடியரசுக் கட்சிக்குச் சாதகமாக மாறியிருந்த களம் இது.

2016, 2020, 2024 ஆண்டுகளில் நடைபெற்ற 3 அதிபர் தேர்தல்களிலும் ஓஹியோவில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றிருந்தார். அப்படிப்பட்ட மாகாணத்தில்தான் டிரம்ப்பின் ஆதரவு பெற்ற விவேக் ராமசாமி ஆளுநர் தேர்தலில் தோல்வியடைந்திருக்கிறார்.

டிரம்ப் தனது ஆதரவை அறிவித்ததோடு நின்றுவிடவில்லை. தேர்தலின் இறுதிக் கட்டத்தில் ஓஹியோவுக்குச் சென்று குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்காகப் பிரசாரமும் மேற்கொண்டார். ஆனால் டிரம்ப் ஒரு அதிபர் தேர்தலில் பெற்ற ஆதரவு, அதே கட்சியின் ஆளுநர் வேட்பாளருக்கு அப்படியே கிடைக்கவில்லை.

ஜே.டி. வேன்ஸின் சொந்த மாகாணத்திலேயே தோல்வி

டிரம்ப்பைவிட இந்தத் தேர்தல் முடிவில் இன்னொரு முக்கியமான அரசியல் அம்சம் இருக்கிறது. அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்தவர். அங்கிருந்துதான் அமெரிக்க செனட் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விவேக் ராமசாமியும் ஜே.டி. வேன்ஸும் யேல் சட்டக் கல்லூரியில் படித்தவர்கள். இருவருக்கும் ஏற்கெனவே அறிமுகம் இருந்தது. இந்தத் தேர்தலில் வேன்ஸ் தனது சொந்த மாகாணத்துக்கே வந்து விவேக் ராமசாமிக்காகப் பிரசாரம் செய்தார்.

அதுமட்டுமல்லாமல், எமி ஆக்டனின் தாய் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய விளம்பரத்தையும் அவர் ஆதரித்தார். இத்தனைக்கும் பிறகும் விவேக் ராமசாமி வெற்றி பெறவில்லை.

மேலும், ஜே.டி. வேன்ஸ் முன்பு வகித்த செனட் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் ஜான் ஹஸ்டெடும் தோல்வியடைந்தார். இதனால் ஓஹியோ தேர்தல் முடிவு, ஒரு ஆளுநர் வேட்பாளரின் தனிப்பட்ட தோல்வி என்ற எல்லையைத் தாண்டி, டிரம்ப்–வேன்ஸ் அரசியல் கூட்டணிக்கான முக்கியமான தேர்தல் பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது.

வெற்றி பெற்றாலும் சவால்கள் காத்திருக்கின்றன..

எமி ஆக்டனின் வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தேர்தலில் வெற்றி பெறுவதும், தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும் வெவ்வேறானவை.

ஓஹியோ மாகாண சட்டமன்றத்தில் குடியரசுக் கட்சியின் செல்வாக்கு தொடர்கிறது. இதனால் குழந்தைகளுக்கான வரிச் சலுகைகள், சொத்து வரி மாற்றங்கள், மருத்துவ வசதிகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட வாக்குறுதிகளைச் செயல்படுத்தும்போது எமி ஆக்டன் சட்டமன்றத்தில் அரசியல் எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கலாம்.

அவரது வெற்றி உரையிலும் அரசியலில் ஏற்பட்டுள்ள கடுமையான மோதல்களைக் குறைத்து, அனைவருக்குமான ஆளுநராகச் செயல்படுவேன் என்று உறுதியளித்தார். சிறுவயதில் வீடின்றி வாழ்ந்த தன்னால் மருத்துவராக உயர்ந்து, இப்போது ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்படுவதை ஒருகாலத்தில் நினைத்துக்கூடப் பார்த்திருக்க முடியாது என்றும் அவர் உருக்கமாகப் பேசினார்.

கூடாரத்தில் வாழ்ந்த சிறுமி, கோடீஸ்வரத் தொழிலதிபரைத் தோற்கடித்து ஆளுநராக உயர்ந்திருக்கிறார். ஓஹியோ தேர்தலில் நிகழ்ந்திருக்கும் இந்த ‘மேஜிக்’, ஒரு தனிநபரின் வாழ்க்கைக் கதையைத் தாண்டி, அமெரிக்க அரசியலில் பணம், அதிகாரம், மக்களின் அன்றாட வாழ்க்கை ஆகியவற்றுக்கு இடையே நடக்கும் போட்டியையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel