திமுக முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளருமான சேகர்பாபு ஏற்பாடு செய்திருந்த, “தீபாவளி திருநாள்” நிகழ்ச்சியை திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி ராஜாத்தி கருணாநிதி எம்.பி. பங்கேற்கவில்லை.
திமுகவின் முரசொலி நாளிதழில் நேற்று நவம்பர் 3-ந் தேதி, திமுக சென்னை கிழக்கு மாவட்டத்தின் சார்பில் “மகளிர் அணி – மகளிர் தொண்டரணி நிர்வாகிகளுக்கு தீப ஒளி திருநாளை முன்னிட்டு சிறப்பு சேர்த்தல்” நிகழ்ச்சி நடைபெறும்; சிறப்பு சேர்ப்பவர் கனிமொழி ராஜாத்தி கருணாநிதி எம்.பி” என விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது.

சமூக வலைதளங்களில் இது விமர்சனத்துக்குள்ளானது. திராவிடர் தளம் அமைப்பினர், “அமைப்பு சார்பாகவே தி.மு.க. தீபாவளியைக் கொண்டாடுவது தவறு! அறிஞர் அண்ணா, கலைஞர் காலங்களில் அமைப்பு சார்பாக தி.மு.க. தீபாவளியைக் கொண்டாடியது உண்டா? தீபாவளிகளை மறுத்த அவர்களெல்லாம் வெற்றிகளைப் பெறவில்லையா? தி.மு.க.விற்கும் – த.வெ.க. போன்ற கட்சிகளுக்கும் கொள்கை ரீதியாக பெரும் வேறுபாடு உள்ளது என நம்புபவர்களின் நம்பிக்கையை உடைப்பது நல்லதல்ல.

கடந்த 2025 ஆம் ஆண்டு தோழர் உதயநிதி அவர்களும், இந்த ஆண்டு தோழர் கனிமொழி அவர்களும் தீபாவளிக்குத் தி.மு.க.சார்பாகவே விழா நடத்தி, பரிசுகளை வழங்குவதைக் கண்டிக்கிறோம். தி.மு.க. நாத்திகர்களின் கட்சி அல்ல; அதே வேளையில் இந்து மதவாதிகளின் கட்சியும் அல்ல!” என எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.


இந்நிலையில் சென்னை வேப்பேரி, அனிதா பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள B.K.N. மஹாலில் நேற்று திட்டமிட்டபடி இந்நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனால் இதில் கனிமொழி எம்.பி. கலந்து கொள்ளவில்லை.
அதே நேரத்தில் இந்நிகழ்ச்சியில் திமுக மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மாநகராட்சி திருமதி.பிரியா, கவிஞர் ஆண்டாள் பிரிதர்ஷினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நரகாசுரன் ஆட்சியை வீழ்த்துவோம்- சேகர்பாபு
இந்த நிகழ்ச்சியில் பேசிய சேகர்பாபு, “தமிழகத்தில் இன்று நடைபெற்றுக் கொண்டிருப்பது நரகாசுரன் ஆட்சி. புராணத்தில் நரகாசுரன் தேவர்களைக் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அதேபோன்று இன்றைய ஆட்சியில் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் தமிழக மக்கள்தான். தமிழகத்தின் நரகாசுரனை எப்போது நாம் அழிக்கிறோமோ, அப்போதுதான் தமிழக மக்களுக்கு உண்மையான தீபாவளி. திமுகவின் வலிமையாகவும், இயக்கத்தின் பாதுகாப்பு அரணாகவும் திகழும் மகளிர் அணியின ருக்கு எனது தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். இதில் 1,100 திமுக மகளிர் நிர்வாகிகளுக்குப் புடவை, இனிப்பு, காரம், பட்டாசுகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
துரைமுருகன் இல்ல திருமண சர்ச்சை
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்ல திருமணம், பார்ப்பனர்கள் சமஸ்கிருத வேத மந்திரங்களை ஓதி நடத்தி வைத்தது அக்கட்சிக்குள் பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து துரைமுருகன் விலக வேண்டும் என திராவிட இயக்க ஆய்வாளர் க. திருநாவுக்கரசு உள்ளிட்டோர் வலியுறுத்தி உள்ளனர். சமூக வலைதளங்களிலும் துரைமுருகன் இல்ல திருமண நிகழ்ச்சியை திமுகவினரே கடுமையாக விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு நடத்திய ‘தீபாவளி’ நிகழ்ச்சியும் சர்ச்சையாகி இருக்கிறது.
சேகர்பாபு விளக்கம்
இது தொடர்பாக நமது மின்னம்பலத்திடம் விளக்கம் அளித்த சேகர்பாபு, “தீபாவளி பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு 6 ஆண்டுகளாக கனிமொழி தொடர்ந்து வந்துள்ளார். இந்த முறை டெல்லி நிகழ்ச்சியில் இருக்கிறார். அதனால்தான் கனிமொழியால் இந்நிகழ்ச்சிக்கு வரமுடியவில்லை” என்றார்.









