மனைவியை ‘முட்டாள்’, ‘எதற்கும் உதவாதவள்’ என்று கணவர் திட்டுவதாகக் கூறுவது மட்டுமே, சட்டப்படி கொடுமையான குற்றமாகாது என்று உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பளித்துள்ளது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த பியூஷ் நர்லாவர் என்பவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் 2021-ஆம் ஆண்டு ஜனவரி 3-ந் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு இருவரும் மகாராஷ்டிராவின் சந்திரபூரில் வசித்து வந்தனர். பின்னர் 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ந் தேதி கனடாவின் டொராண்டோ நகருக்குச் சென்றனர்.
அங்கு 2023-ஆம் ஆண்டு ஜூன் 11-ந் தேதி, அவர்கள் வசித்து வந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் 22-வது மாடியில் இருந்து குதித்து அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், “நான் வாழ்க்கையில் தோற்றுவிட்டேன். ஓராண்டுக்கும் மேலாக வேலை தேடியும் கிடைக்கவில்லை. என்னை முட்டாளாகவும் எதற்கும் உதவாதவளாகவும் உணர்கிறேன். இந்த உணர்வுடன் வாழ விரும்பவில்லை. அதனால் இந்த முடிவை எடுக்கிறேன்” என எழுதியிருந்தார்.
மேலும் தனது உடல் உறுப்புகளைத் தேவைப்படுபவர்களுக்கு தானமாக வழங்க வேண்டும் என்றும், கனடாவிலேயே தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்றும் அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.
தந்தை அளித்த வரதட்சணைப் புகார்
ஆனால், தனது மகளின் மரணத்துக்குக் கணவரும் அவரது குடும்பத்தினருமே காரணம் என்று அந்தப் பெண்ணின் தந்தை குற்றம்சாட்டினார். திருமணத்துக்கு முன்பே 19 சவரன் நகைகள் கேட்டதாகவும், திருமணத்துக்குப் பிறகு ‘தலை தீபாவளி’யின்போது தங்க மோதிரம், வளையல் உள்ளிட்டவற்றைக் கேட்டதாகவும் புகார் அளித்தார். 2022-ல் மேலும் சுமார் 4 சவரன் தங்க நகைகள் கேட்டதாகவும், தனது மகளை கணவர் அடித்துத் துன்புறுத்தியதாகவும் குற்றம்சாட்டினார்.
குறிப்பாக, கனடாவில் வேலை கிடைக்காததைக் காரணம் காட்டி, மகளை அடிக்கடி ‘முட்டாள்’, ‘எதற்கும் உதவாதவள்’ (stupid and useless) என்று கணவர் திட்டியதாகவும் தெரிவித்தார். இதையடுத்து 2023 ஜூன் 30-ந் தேதி மகாராஷ்டிராவின் சதாரா காவல் நிலையத்தில் கணவர், அவரது பெற்றோர் மற்றும் சகோதரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 304B (வரதட்சணை மரணம்), 498A (கணவர் அல்லது அவரது உறவினர்களால் கொடுமைப்படுத்துதல்), 323 (காயம் ஏற்படுத்துதல்), 504 (அமைதியைக் குலைக்கும் நோக்கில் அவமதித்தல்) உள்ளிட்ட பிரிவுகளிலும் வரதட்சணைத் தடுப்புச் சட்டத்தின் கீழும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
கனடா போலீஸ் விசாரணை
இதற்கிடையே, கனடாவில் நடைபெற்ற விசாரணையில் அந்தப் பெண்ணின் மரணத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை. 2023- ஆம் ஆண்டு அக்டோபரில் வெளியான மரண விசாரணை அறிக்கையில், உயரத்திலிருந்து விழுந்ததால் ஏற்பட்ட பலத்த காயங்களே மரணத்துக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.
2024-ஆம் ஆண்டு ஜனவரியில் டொராண்டோ போலீசார் விசாரணையை முடித்து அறிக்கை அளித்தனர். தற்கொலைக் கடிதத்தில் இருந்த கையெழுத்து அந்தப் பெண்ணுடையதுதான் என்பதும் உறுதி செய்யப்பட்டது.
அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்ட நேரத்தில் கணவர் வீட்டில் இல்லை என்பது கண்காணிப்பு கேமரா பதிவுகளிலும் தெரியவந்தது. வீட்டில் சண்டை நடந்ததற்கான தடயங்களும் கிடைக்கவில்லை. இதையடுத்து தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி பியூஷ் நர்லாவர் மும்பை உயர்நீதிமன்றத்தின் அவுரங்காபாத் அமர்வை அணுகினார்.
உயர்நீதிமன்றம் அவரது பெற்றோர் மற்றும் சகோதரி மீதான வழக்கை ரத்து செய்தது. ஆனால், கணவர் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டியவை என்று கூறி, அவருக்கு நிவாரணம் வழங்க மறுத்தது. இதனை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
உச்சநீதிமன்றம் கூறியது என்ன?
இந்த வழக்கை நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. கணவர் தரப்பில், மனைவியின் தற்கொலைக்கும் வரதட்சணைக் குற்றச்சாட்டுகளுக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் இல்லை என்று வாதிடப்பட்டது. தற்கொலைக் கடிதத்திலும் கணவர் அல்லது அவரது குடும்பத்தினர் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கு எதிராக மகாராஷ்டிர அரசு தரப்பிலும் பெண்ணின் தந்தை தரப்பிலும் வாதிடப்பட்டது. வரதட்சணை கேட்டு அந்தப் பெண் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாகவும், வழக்கு விசாரணையைத் தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் ஆவணங்களையும் பரிசீலித்த உச்சநீதிமன்றம், திருமணத்தின்போது வழங்கப்பட்ட 19 சவரன் நகைகள் கணவருக்கு மட்டுமல்லாமல் மணமகளுக்கும் சேர்த்து வழங்கப்பட்டதாக புகார்தாரரே கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டியது.
திருமணத்தின்போதும் பண்டிகைகளின்போதும் குடும்பத்தினர் தங்களது விருப்பத்தின் பேரில் நகைகள், ஆடைகள் உள்ளிட்டவற்றைப் பரிசாக வழங்குவது வழக்கம். அத்தகைய பரிசுகள் வரதட்சணையாகக் கேட்டு வாங்கப்பட்டவை என்பதற்கு ஆதாரம் இருக்க வேண்டும். இந்த வழக்கில் ’தலை’ தீபாவளியின்போது வழங்கப்பட்ட நகைகள் வரதட்சணைக்காக தரப்பட்டன என்பது நிரூபிக்கப்படவில்லை.
அதேபோல, பெண்ணின் சகோதரர், கணவருக்கு அனுப்பிய ரூ.1 லட்சமும் வரதட்சணை என்று கூறுவதற்குப் போதிய ஆதாரம் இல்லை. அந்தப் பணப் பரிமாற்றம், கனடாவில் இருந்து இந்தியாவுக்கு மனைவி பயணம் செய்வதற்கான விமான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்ட காலத்தில் நடந்துள்ளது. ஒரு பணப் பரிமாற்றத்தை மட்டும் தனியாக எடுத்துக்கொண்டு அதை வரதட்சணை என்று முடிவு செய்ய முடியாது.
‘முட்டாள்’, ‘எதற்கும் உதவாதவள்’ என்று திட்டுவது கொடுமையா?
இந்த வழக்கில் நீதிபதிகள் தெரிவித்த முக்கியமான கருத்து இதுதான். மனைவியை ‘முட்டாள்’, ‘எதற்கும் உதவாதவள்’ என்று கணவர் அழைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை ஆரம்ப நிலையில் உண்மையென எடுத்துக்கொண்டாலும், அது மட்டுமே சட்டப்படி கொடுமை அல்லது ”குற்றவியல் மிரட்டல்” என்ற குற்றமாகாது.
அதிகபட்சமாக அது கணவரின் கோபமான குணத்தைக் காட்டலாம். ஆனால், அந்த வார்த்தைகளையே மனைவியின் தற்கொலைக்குக் காரணமான கடுமையான குற்றமாகக் கருத முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.(The allegation that the appellant used to call the deceased ‘stupid’ and ‘useless’, even if accepted prima facie, cannot to any extent qualify as an offence of cruelty or criminal intimidation)
கணவர் சிறிய விஷயங்களுக்குக்கூட கோபப்பட்டுத் திட்டுவார் என்ற குற்றச்சாட்டுக்கும் போதிய ஆதாரங்கள் இல்லை. கணவன் அல்லது மனைவியின் கோபமான குணத்தை மட்டும் வைத்து, குற்றவியல் மிரட்டல் அல்லது கடுமையான காயம் ஏற்படுத்திய குற்றத்துடன் ஒப்பிட முடியாது. அதற்கான ஆதாரங்கள் இல்லாதபோது, மனைவியின் தற்கொலைக்குக் கணவரைக் குற்றவாளியாக்க முடியாது. (A temperamental issue of a spouse cannot be equated with the offence of criminal intimidation or grievous hurt)
மேலும், ஒருவர் கொடுமைப்படுத்தப்பட்டதாகக் கூறும்போது, என்ன நடந்தது, எப்போது நடந்தது, யார் என்ன செய்தார்கள் என்பதற்கான குறிப்பிட்ட விவரங்கள் அவசியம். பொதுவாகக் கொடுமைப்படுத்தினார் என்று கூறுவது மட்டும் குற்றவழக்கைத் தொடரப் போதாது. (The term ‘cruelty’ cannot be established without specific instances of commission or omission.)
தந்தையின் துயரம்
மகளை இழந்த குடும்பத்தின் வேதனையையும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் பதிவு செய்துள்ளது. மகளை இழந்த குடும்பத்தினரின் துயரத்தைப் புரிந்துகொள்கிறோம். ஆனால், அந்தப் பெண்ணைத் தற்கொலைக்குத் தள்ளும் வகையில் கணவரோ அவரது குடும்பத்தினரோ என்ன செய்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் இல்லாமல், அவர்களை அந்த மரணத்துக்கு காரணமானவர்கள் என கூறிவிட முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
(We understand the plight and pain of the family members of the deceased who have gone through the tragedy of losing their daughter)
”திருமண வாழ்க்கை தொடர்பான குற்றவழக்குகளை நீதிமன்றங்கள் மிகுந்த கவனத்துடன் அணுக வேண்டும். உண்மையான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில், போதிய ஆதாரங்கள் இல்லாத வழக்குகள் தொடர்வதால் நீதிமன்ற நடைமுறை தவறாகப் பயன்படுத்தப்படுவதையும் தடுக்க வேண்டும்” என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த வழக்கில் மனைவியின் தற்கொலைக்கும் கணவர் மீது சுமத்தப்பட்ட வரதட்சணைக் கொடுமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கும் தொடர்பு இருப்பது நிரூபிக்கப்படவில்லை. இதையடுத்து, கணவர் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்த மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்த உச்சநீதிமன்றம், அவர் மீதான முதல் தகவல் அறிக்கையையும் அதனடிப்படையில் தொடரப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகளையும் ரத்து செய்து நவம்பர் 2-ந் தேதி தீர்ப்பளித்தது.









