அனில் அம்பானியின் குழுமத்துக்குச் சொந்தமான மேலும் ரூ.510 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி இருப்பதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் / ரிலையன்ஸ் கமர்ஷியல் ஃபைனான்ஸ் லிமிடெட் தொடர்பான வங்கி மோசடி வழக்கு (ரூ.263.05 கோடி) மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் தொடர்பான வங்கி மோசடி வழக்கு (ரூ.247.12 கோடி) ஆகியவற்றில், விமானங்கள், வங்கிக் கணக்கு இருப்புத் தொகைகள், நிரந்தர வைப்புத்தொகைகள், அசையாச் சொத்துகள், பெற வேண்டிய தொகைகள் மற்றும் முதலீடுகள் உள்ளிட்ட பல்வேறு சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (RCOM) வழக்கில், முடக்கப்பட்ட சொத்துகளில்
- 2 வாடகை விமானங்கள்
- 6 நிலப்பகுதிகள்
- மகாராஷ்டிராவில் உள்ள ஓர் அலுவலக வளாகம் ஆகியவை அடங்கும்.
ரிலையன்ஸ் கமர்ஷியல் ஃபைனான்ஸ் / ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் (RCFL/RHFL) வழக்கில்
- தமிழ்நாட்டில் உள்ள 2 காற்றாலைகள்
- வங்கிக் கணக்கு இருப்புத் தொகைகள்
- நிரந்தர வைப்புத்தொகைகள் மற்றும் முதலீடுகள்
- பெற வேண்டிய தொகைகள் முடக்கப்பட்டுள்ளன.
ரூ.23,100 கோடி சொத்து முடக்கம், பறிமுதல்
மேற்கண்ட சொத்து முடக்க நடவடிக்கைகளையும் சேர்த்து, பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA) மற்றும் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (FEMA) ஆகியவற்றின் விதிகளின்கீழ் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்திற்கு எதிராக விசாரிக்கப்பட்டு வரும் பல்வேறு வழக்குகளில், அமலாக்கத்துறை இன்றுவரை மொத்தமாக சுமார் ரூ.23,100 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியுள்ளது / பறிமுதல் செய்துள்ளது.
விசாரணையும் பறிமுதலும் ஏன்?
டெல்லி சிபிஐ, டெல்லி பொருளாதாரக் குற்றப்பிரிவு (EOW) மற்றும் மும்பை பொருளாதாரக் குற்றப்பிரிவு ஆகியவற்றால் பதிவு செய்யப்பட்ட பல முதல் தகவல் அறிக்கைகளின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை தொடங்கப்பட்டது. அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் 2 வழக்குகளையும் அமலாக்கத்துறை விசாரித்துள்ளது. விசாரணைக்கு உட்பட்ட நிறுவனங்களில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட், ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட், ரிலையன்ஸ் கமர்ஷியல் ஃபைனான்ஸ் லிமிடெட், ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட், ரிலையன்ஸ் பவர் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் கேபிடல் லிமிடெட் ஆகியவை அடங்கும்.
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் தொடர்பாக அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட பொதுமக்களின் நிதியை முறைகேடாக வெளியேற்றுதல், நிறுவனச் சொத்துகளைத் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக மோசடியான முறையில் பாதுகாத்து வைத்துக்கொள்ள திவால் மற்றும் கடன் தீர்வுச் சட்டத்தை (IBC) தவறாகப் பயன்படுத்துதல், இந்தியாவிலிருந்து பொதுமக்களின் நிதியை வெளிநாடுகளில் உள்ள வரிப் புகலிடங்களுக்குத் திருப்பிவிடுதல் உள்ளிட்ட செயல்களில் அந்தக் குழுமம் ஈடுபட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதில் பெரும்பகுதி, நிறுவனங்களை முன்னின்று நடத்துபவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் தனிப்பட்ட நலனுக்காகப் பயன்படுத்தப்பட்டது.
10 பேர் இதுவரை கைது
இந்த வழக்குகளில் அமலாக்கத்துறை 10 நபர்களைக் கைது செய்துள்ளது. மேலும், 2002-ஆம் ஆண்டு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 6 குற்றப்புகார் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளது. அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் விதிகளின்கீழ் மேலும் ஒரு புகார் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அமலாக்கத்துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








