தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பிரதிநிதிகளை டிசம்பர் 4-ந் தேதிக்குள் முதல்வர் விஜய் சந்திக்க வேண்டும்; அப்படி சந்திக்காவிட்டால் டிசம்பர் 4-ந் தேதி உச்சகட்ட போராட்டத்தை அறிவிப்போம் என்று அரசு ஊழியர் சங்க தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வி. சோமசுந்தரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலப் பேரவை திண்டுக்கல்லில் கூடியது. ஏற்கெனவே இருந்த மாநிலத் தலைவர் பதவி உயர்வு பெற்றுச் சென்றதால், தற்போது அண்ணா குபேரன், மாநிலத் தலைவராக மாநிலப் பேரவை தேர்வு செய்திருக்கிறது என்ற செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஊழியர்களிடையே பிரசாரம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலப் பேரவை செப்டம்பர் மாதம் 26-ஆம் தேதி கூடி, 45 தீர்மானங்களை நிறைவேற்றியது. அந்தத் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காக அறைகூவல் தீர்மானத்தையும் மாநிலப் பேரவை நிறைவேற்றியிருக்கிறது. அதன்படி, அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி அனைத்து வட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டத்தையும், அக்டோபர் மாதம் 28-ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஒருநாள் தர்ணா போராட்டத்தையும் நடத்த முடிவு செய்தோம். அடுத்ததாக, இந்த மாதம் நவம்பர் 16-ஆம் தேதி முதல் நவம்பர் 27-ஆம் தேதி வரை ஒவ்வொரு அலுவலகத்திலும் இருக்கிற ஊழியர்களை நேரில் சந்தித்துப் பிரச்சாரம் நடத்துவது என்று முடிவு செய்திருக்கிறோம்.
தீர்மானங்களை கொடுக்க முடியவில்லை..
இந்த அறைகூவல் தீர்மானத்தின் அடிப்படையில் இறுதிக்கட்டமாக, வருகிற டிசம்பர் மாதம் 4-ஆம் தேதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைச் சந்தித்து எங்களுடைய 45 அம்சக் கோரிக்கைகளை நேரில் கொடுக்க இருக்கிறோம். இதுவரை எங்களுடைய தீர்மானங்களையும் கோரிக்கைகளையும் கொடுப்பதற்காகத் தலைமைச் செயலாளர் அவர்களுக்கும், மதிப்பிற்குரிய நிதித்துறைச் செயலாளர் அவர்களுக்கும் நாங்கள் மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறோம். ஆனால் இதுவரைக்கும் சந்திப்பதற்கான நேரம் கிடைக்கவில்லை. முதலமைச்சரைச் சந்திக்க முடியாது என்பது இயல்புதான். ஆனால் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட எந்த ஓர் உயர் அதிகாரியையும், முதலமைச்சரின் செயலாளரையோ, நிதித்துறைச் செயலாளரையோ, துறைவாரிச் சங்கங்கள் அந்தந்தத் துறைகளின் தலைமை அதிகாரிகளையோ சந்திப்பதில் இந்த ஆட்சியாளர்களிடம் பெரிய தேக்கம் இருக்கிறது என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

காலமுறை ஊதியத்தில்..
தொகுப்பூதியம், மதிப்பூதியம், காலமுறை ஊதியமற்ற பணி நியமனங்கள், அவுட்சோர்சிங், ஒப்பந்த முறை ஆகிய பணி நியமனங்களை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அந்த முறைகளில் நியமிக்கப்பட்டிருக்கிற அத்தனை அரசு ஊழியர்களையும், குறிப்பாகச் சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஊராட்சிச் செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள், வருவாய் கிராம ஊழியர்கள், தொழிற்பயிற்சி நிலையங்களில் இருக்கிற PPP, COE உள்ளிட்ட திட்டங்களில் பணிபுரியும் ஊழியர்களையும் காலமுறை ஊதியத்தில் அமர்த்த வேண்டும்.
டிசம்பர் 4 வரை கெடு
அரசு அலுவலகங்களில் லட்சக்கணக்கான காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. சுமார் 90 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் படித்துவிட்டு வேலைவாய்ப்பின்றி, அத்தக்கூலிக்கு அமர்த்து, துரத்து என்ற பணி நிலைகளில், கிக் தொழிலாளர்களாக, ரேபிடோ போன்ற நிறுவனங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். போதிய ஊதியமின்றி இருக்கிறார்கள். அவர்களைக் கொண்டு அந்தக் காலிப் பணியிடங்களில் நியமனங்களைச் செய்ய வேண்டும். அந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தித்தான் நாங்கள் அறைகூவல் தீர்மானம் உள்ளிட்ட முடிவுகளை எடுத்திருக்கிறோம்.
தமிழ்நாடு முதலமைச்சர் வருகிற டிசம்பர் மாதம் 4-ஆம் தேதி எங்களைச் சந்திக்க மறுத்தால், அன்றைய தினம் இதே இடத்தில் அவசர மாநிலச் செயற்குழுவைக் கூட்டி உச்சகட்டப் போராட்டத்தை அறிவிப்போம். உச்சகட்டப் போராட்டத்தை அறிவிப்போம். இன்றைக்கு எங்களுடைய கோரிக்கைகளைக் கொடுப்பதற்கே எங்களால் முடியவில்லை என்று சொன்னால், எங்களுடைய கோரிக்கைகள் எப்படி நிறைவேறும்?
எங்களுடைய வாழ்வாதாரக் கோரிக்கைகள் பல ஆண்டுகாலமாக நிலுவையில் இருக்கிற கோரிக்கைகள். அந்தக் கோரிக்கைகளைக் கொடுப்பதற்கு ஐஏஎஸ் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்று சொன்னால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரைச் சந்திப்பதுதான் சரியாக இருக்கும். அப்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எங்களை உரிய மரியாதையோடு அழைத்துப் பேசி, எங்கள் பிரச்சினைகளுக்கும் கோரிக்கைகளுக்கும் தீர்வு காண வேண்டும். இல்லை என்று சொன்னால், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் டிசம்பர் 4-ஆம் தேதி உச்சகட்டப் போராட்டத்தை அறிவிக்கும்.
இளைஞர்களுக்கு செய்யக் கூடிய கைமாறா?
அடுத்ததாக OMCL. உங்களுக்கு எல்லோருக்கும் தெரியும். இன்றைக்கு வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை எடுக்கக்கூடிய Overseas Manpower Corporation Limited என்ற OMCL நிறுவனம், இப்போது அரசாங்கத்திற்கும் ஆட்களை எடுக்கிறது. இன்றைக்குப் பக்கா அரசு ஊழியர்களாக இருக்கக்கூடிய ஜூனியர் அசிஸ்டெண்ட், அசிஸ்டெண்ட், டெஸ்க் அசிஸ்டெண்ட், சூப்பிரண்டெண்ட், மசால்ஜி, வாட்ச்மேன், டிரைவர் உள்ளிட்ட அத்தனை பணியிடங்களுக்கும் OMCL மூலமாகப் பணி நியமனம் செய்வோம் என்று தமிழ்நாடு அரசே நேரடியாக அரசிதழில் வெளியிடுகிறது என்று சொன்னால், பெரும்பகுதி இளைஞர்களால் வாக்களிக்கப்பட்டு ஆட்சிக்கு வந்திருக்கிற இந்தத் தவெக அரசு, அந்த இளைஞர்களுக்குச் செய்யக்கூடிய கைமாறா இது என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கேட்கிறது.
தமிழ்நாடு அரசுக்கு கண்டனம்
சுமார் 90 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு இருக்கிறார்கள். அவர்களைக் கொண்டு காலமுறை ஊதியத்தில், உரிய மரியாதையோடு, கௌரவமான சமூக அந்தஸ்துடன் ஓர் அரசுப் பணியைக் கொடுப்பதற்கு மாறாக, OMCL என்ற நிறுவனம் மூலமாக அவுட்சோர்சிங் முறையில், அத்தக்கூலி முறையில் பணி நியமனம் செய்வதைத் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
இளைஞர்களுக்கு பேரதிர்ச்சி
ஏற்கெனவே தொகுப்பூதியம், மதிப்பூதியம், தினக்கூலி, அவுட்சோர்சிங் ஆகியவற்றை எதிர்த்துக் கொண்டிருக்கிற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்திற்கு இது ஒரு பேரதிர்ச்சி. எங்களுக்கு மட்டுமல்ல. இந்த ஆட்சி வர வேண்டும் என்று வாக்களித்த இளைஞர்களுக்கும் பேரதிர்ச்சி. எதிர்காலச் சமூகத்திற்குப் பேரதிர்ச்சி. மாணவர்களுக்குப் பேரதிர்ச்சி. உடனடியாகத் தமிழ்நாடு அரசு அந்த அரசிதழ் அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும்.
தவெக ஆட்சியை ஏன் கொண்டு வந்தோம்?
இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கக்கூடிய இளைஞர்கள், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைக் கொடுக்காமல், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் பெரிய பெரிய பன்னாட்டுப் பகாசுர நிறுவனங்களுக்காகவுமா இவர்களை ஆட்சிக்குக் கொண்டு வந்தோம்? இந்த ஆட்சியாளர்கள் எடுக்கிற ஒவ்வொரு நடவடிக்கையும் தவறாக இருக்கிறது.
அரசு ஊழியர்கள் திருடர்களா?
குறிப்பாக, இன்றைக்குப் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் என்ன சொல்கிறார்? நீங்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகத் தீர்மானங்களோ, கோஷங்களோ, கூட்டங்களோ நடத்தக்கூடாது. அலுவல் சாராத கூட்டங்களில் நீங்கள் கலந்துகொள்ளக்கூடாது. அப்படிக் கலந்துகொண்டால் உங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம். 1973-ஆம் ஆண்டு சட்டத்தின் 12-ஆம் விதிப்படி நடவடிக்கை எடுப்போம் என்று சொல்கிறார். இவை ஏற்கெனவே இருந்து வந்த விதிமுறைகள்தான். அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகள்தான்.
ஆனால் இப்போது இதை மீண்டும் கொண்டுவருவதற்குக் காரணம் என்ன? இப்போது இது மேலே வருவதற்குக் காரணம் என்ன? ஒருபக்கம் அரசு ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக ஊழல்வாதிகள், லஞ்சவாதிகள், திருடர்கள் என்ற பிம்பத்தை மக்கள் மத்தியில் உருவாக்குவதற்கான ஏற்பாட்டை இந்த ஆட்சியாளர்கள் இதுவரை இல்லாத அளவுக்கு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஊழலுக்குத் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் என்றைக்கும் துணைபோகாது. ஊழலை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஊழலுக்கு நாங்கள் ஆதரவு தரமாட்டோம். லஞ்சத்தை நாங்கள் ஆதரிக்கமாட்டோம். ஆனால் அப்பாவி அரசு ஊழியர்களோ, அப்பாவி அரசு ஆசிரியர்களோ இந்த லஞ்ச வேட்டையில் பாதிக்கப்படக்கூடாது என்பதுதான் எங்களுடைய நோக்கம்.
அப்பாவிகள் பாதிக்கப்பட கூடாது
தமிழ்நாடு அரசு ஊழலை ஒழிப்பதற்காக எடுக்கிற நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் 100 சதவிகிதம் அல்ல, 200 சதவிகிதம் வரவேற்கிறது. ஆனால் அப்பாவிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
சத்துணவு ஊழியர்கள்
அதேபோல, இன்றைக்கு ஏராளமான காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. தொகுப்பூதியத்தில் இருக்கிற ஊழியர்களைக் கொண்டு அவற்றை நிரப்ப வேண்டும் என்று சொல்கிற அதே நேரத்தில், சத்துணவு ஊழியர்களைக் காலமுறை ஊதியத்தில் அமர்த்தி, காலைச் சிற்றுண்டித் திட்டத்தில் அவர்களைப் பயன்படுத்தலாம்.
இந்தச் சத்துணவு ஊழியர்கள்தான் 45 ஆண்டுகாலமாக ஐஏஎஸ் அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகள், பல்வேறு உயர்நிலை அலுவலர்கள், கல்விமான்கள் உருவாவதற்குக் காரணமாக இருந்தவர்கள். சத்துணவு வழங்கிய ஊழியர்கள். அந்தச் சத்துணவு ஊழியர்களைக் கொண்டு காலைச் சிற்றுண்டித் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தினால், அந்தத் திட்டம் மிகச் சிறப்பாக இருக்கும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கருதுகிறது.
கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு நெருக்கடி
அதேபோல, இன்றைக்குக் கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம். தமிழ்நாடு அரசுக் கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் தங்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடுகிறபோது, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் ஒரு சுற்றறிக்கை மூலம் சுமார் 2,500 பேருக்கு மேல் 17(ஏ) விதியின் கீழ் காரணம் கேட்கும் குறிப்பாணை கொடுத்து, அந்த ஊழியர்களை அச்சுறுத்துகிற போக்கு நடந்திருக்கிறது. இதைத் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. போராடுகிற சங்கத்தின் நிர்வாகிகளை அழைத்துப் பேசி, உட்கார வைத்து, உங்களுடைய கோரிக்கைகள் பத்து என்றால், இதில் இரண்டை நிறைவேற்றுகிறோம், ஐந்தை நிறைவேற்றுகிறோம், மற்றவற்றைப் பிறகு நிறைவேற்றுகிறோம் என்று சொல்லலாம். அதை விட்டுவிட்டு நீங்கள் போராடினால் 17(ஏ) என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
மனு கொடுக்கக் கூடாது என்பதா?
அதேபோல, இன்றைக்கு வேலைவாய்ப்புத் துறையில், வேலைவாய்ப்புத்துறை இயக்குநரால் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்படுகிறது. நீங்கள் மக்கள் பிரதிநிதிகளிடம், அதாவது எம்எல்ஏ, எம்பி, அமைச்சர், முதலமைச்சர் ஆகியோரிடம் மனு கொடுக்கக்கூடாது என்று சொன்னால் எப்படி? உயர் அதிகாரியிடம் போய் மனு கொடுக்கிறார்கள். அங்கே அது அப்படியே கிடப்பில் கிடக்கிறது. அங்கே நிறைவேறவில்லை என்று சொன்னால், மக்கள் பிரதிநிதிகளிடம் மனு கொடுப்பதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் அப்படிக் கொடுக்கக்கூடாது என்று ஒரு கடிதம் வருகிறது. இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
அக்டோபர் மாதம் சம்பளமே வரலை..
இன்னொரு விஷயத்தை உங்களுக்குச் சொல்கிறேன். பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கு அக்டோபர் மாதச் சம்பளம் இதுவரைக்கும் வழங்கப்படவில்லை. அந்தச் சங்கம் போராடிக் கொண்டிருக்கிறது. பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கு தீபாவளி வந்திருக்கிறது. வருகிற 8-ஆம் தேதி தீபாவளி. இந்தச் சம்பளத்தைக் கொண்டுதான் அவர்கள் துணிமணிகள் எடுக்க வேண்டும். தீபாவளிக்கான செலவுகளைச் செய்ய வேண்டும்.
அரசு ஊழியர்கள் என்றால் எல்லோரும் கோடீஸ்வரர்கள், பணக்காரர்கள் என்று நினைக்காதீர்கள். அப்பாவிகள், அன்றாடக் கூலிகளைப் போல வாழ்க்கை நடத்துகிறவர்களும் அரசு ஊழியர்களாக இருக்கிறார்கள். இந்தச் சம்பளத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்தக்கூடிய அரசு ஊழியர்களுக்கு அக்டோபர் மாத ஊதியம் வரவில்லை.
நான் உங்களிடமே இந்தக் கேள்வியை முன்வைக்கிறேன் . நீங்கள் எல்லோரும் படித்த பட்டதாரிகள், முற்போக்குவாதிகள். எப்படி ஊதியம் இல்லாமல் வேலை செய்ய முடியும்? அரசு ஊழியர் சங்கமோ, துறைவாரிச் சங்கமோ போராடினால்தான் ஊதியமே கிடைக்கிறது.
மரபுப் படி உடை அணிய வேண்டுமா?
இந்தச் சூழ்நிலையில் மதிப்பிற்குரிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், நீங்கள் மரபுப்படி பாரம்பரிய உடையோடு வர வேண்டும் என்று சொல்கிறார். நடைமுறையில் அதெல்லாம் சரியாக இருக்குமா? ஒரு பெண் தோழருக்குச் சுடிதார் பிடிக்கும். சுடிதாரில் வருவது வசதியாக இருக்கும். இன்னொரு பெண் தோழருக்கு வேறு உடை பிடிக்கும். உடையில் ஏன் நீங்கள் ஒரு கலாச்சாரத்தைத் திணிக்க விரும்புகிறீர்கள்? அரசு அதிகாரிகள் எப்படி உடை அணிந்து வருகிறார்களோ, அரசு ஊழியர்களாக இருக்கக்கூடிய பெண் தோழர்கள் தங்களுக்குப் பிடித்த உடையில் வருவதுதானே சரியாக இருக்கும்? ஆனால் இந்த ஆட்சியாளர்கள் நினைத்ததை அறிவிக்கிறார்கள். நினைத்ததைக் கொள்கையாகச் சொல்கிறார்கள். இதை எப்படித் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஏற்றுக்கொள்ள முடியும்? மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அந்த அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும்.
லைசன்ஸ்டு சர்வேயர் முறை
இன்றைக்கு ஏராளமான துறைகளில் இதுபோன்ற பிரச்சினைகள் இருக்கின்றன. இன்னொரு விஷயம். நில அளவைத்துறையில் லைசென்ஸ்டு சர்வேயர் முறை கொண்டுவரப்படுகிறது. நில அளவைத்துறையில் நிரந்தர ஊழியர்களாகப் பணிபுரியத் தேர்வு எழுதி, துறைத் தேர்விலும் தேர்ச்சி பெற்றுத் தகுதியான நபர்கள் இருக்கிறார்கள். அவர்களை நிரந்தர ஊழியர்களாக நியமிப்பதற்குப் பதிலாக லைசென்ஸ்டு சர்வேயர்களாக நியமிக்கிறார்கள். லைசென்ஸ்டு சர்வேயர்களும் நம்முடைய இளைஞர்கள்தான். நம்முடைய தோழர்கள்தான். அதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால் அவர்களையே ஏன் காலமுறை ஊதியத்தில் நில அளவர்களாக நியமிக்கக்கூடாது? அவர்களை ஏன் லைசென்ஸ்டு சர்வேயர்களாக நியமிக்க வேண்டும்? அத்தக்கூலிக்கு, தொகுப்பூதியத்திற்கு, மதிப்பூதியத்திற்கு, தினக்கூலிக்கு, அமர்த்து, துரத்து என்ற அடிப்படையில் அரசுப் பணியிடங்களையே தாரைவார்ப்பதற்குத் தமிழ்நாடு தவெக அரசு துணிந்திருக்கிறது என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
இன்று போராட்டம்
இன்றைக்கு இருக்கிற எல்லா அம்சங்களையும் ஒட்டி நாங்கள் அடுத்தகட்டப் போராட்டத்தை நடத்த இருக்கிறோம். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், இந்த 45 அம்சத் தீர்மானங்கள், கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் போராட்டத்திற்கு ஆதரவு, பொதுப்பணித்துறை ஊழியர்களின் ஊதியப் பிரச்சினை உள்ளிட்ட அனைத்தையும் முன்வைத்து நவம்பர் 4-ந் தேதி போராட இருக்கிறது.
தேர்தல் பணி மதிப்பூதியம் தரலை..
இன்றைக்குத் தேர்தல் பணியில் இருந்த தேர்தல் அலுவலர்களுக்கு மதிப்பூதியம், கௌரவ ஊதியம் வழங்கப்படவில்லை. தேர்தல் நடந்து ஆறு மாத காலமாகிறது. தேர்தல் முடிந்துவிட்டது. ஜீப் ஓட்டியிருக்கிறோம். ஜீப்புக்கான வாடகை கொடுக்கவில்லை. டீசலுக்கான பணம் கொடுக்கவில்லை. மதிப்பூதியம் கொடுக்கவில்லை. கௌரவ ஊதியம் கொடுக்கவில்லை. தேர்தல் பணிபுரிந்த அத்தனை பேருக்கும் மதிப்பூதியம் கொடுக்கவில்லை. அங்கே இருக்கிற தேர்தல் அலுவலர்கள் என்ன செய்வார்கள்? நிதி ஒதுக்கவில்லை.
தினக் கூலி முறையை கொண்டு வருவதா?
நில அளவைத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, புள்ளியியல் துறை, வணிகவரித்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் இருக்கிற அரசு ஊழியர்களுக்கு, காலமுறை ஊதியத்தைத் தவிர்த்து, தொகுப்பூதியம், மதிப்பூதியம், தினக்கூலி என்ற முறையைக் கொண்டுவருவதைத் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகளை அழைத்துப் பேசி, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.
மாவட்டங்களில் போராட்டம்
நவம்பர் 4-ந் தேதி மாவட்டத் தலைநகரங்களில், இன்றைக்குத் தமிழ்நாட்டில் இந்த ஆட்சியாளர்களால் அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எதிராக, விரோதமாக இருக்கிற கொள்கைகளையும் கோட்பாடுகளையும் எதிர்த்து, மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் எங்களை அழைத்துப் பேசி, எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
பத்திரப் பதிவுத் துறையில் தனியார் மயம்
இன்றைக்குப் பதிவுத்துறையில் தனியார்மயம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் செலவில் ஒரு நிறுவனத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இப்போது ரயிலில் பிரீமியம் தட்கல், தட்கல் என்று முன்பதிவு செய்கிறோம் அல்லவா?
அதேபோல இங்கேயும் தட்கல் முறை வந்துவிட்டது. உடனடியாக இந்தத் தொகையைக் கட்டினால் பட்டா மாற்றம், உடனடியாகப் பதிவு செய்ய வேண்டும் என்றால் இவ்வளவு கட்டணம் என்று கொண்டுவருகிறார்கள்.
இன்றைக்குப் பதிவுத்துறை முழுமையாகத் தனியார் மயமாக்கப்பட்டிருக்கிறது. அங்கே கட்டணத்தின் அடிப்படையில்தான் பத்திரப்பதிவு செய்யப்பட இருக்கிறது.
அதிகாரிகளால் நடத்தப்படும் தவெக அரசு
எங்களுக்கு ஒரு சந்தேகம் இருந்தது. தவெக அரசு, அரசின் உயர் அதிகாரிகளால் நடத்தப்படுகிறதோ என்ற ஐயம் எங்களுக்கு இருந்தது. ஆனால் அந்த ஐயம் இன்றைக்கு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அரசு ஊழியர்களுக்கு எதிராக, அரசு அலுவலகங்களுக்கு எதிராக, இளைஞர்களுக்கு எதிராக, மாணவர்களுக்கு எதிராக, விவசாயிகளுக்கு எதிராக, விவசாயத் தொழிலாளர்களுக்கு எதிராக வரக்கூடிய அரசாணைகளும் சுற்றறிக்கைகளும் ஒட்டுமொத்தமாக அரசின் அதிகாரிகளால் வெளியிடப்படுகின்றன என்பதைத் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் இந்த நேரத்தில் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறது.
பேச்சுவார்த்தை நடத்துங்க..
அந்த வகையில் தமிழ்நாடு அரசு உடனடியாக எங்களை அழைத்துப் பேச வேண்டும். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தோடு இணைந்திருக்கிற 64 துறைவாரிச் சங்க நிர்வாகிகளையும் அழைத்துப் பேசி, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும். இன்றைக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளருடைய நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
அதேபோல பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கு ஊதியம் இல்லை. இதுபோல நிறையச் சொல்லலாம். அந்த வகையில் இதை உங்கள் கைகளில், உங்கள் பொறுப்பில் விடுகிறோம். நீங்கள்தான் அமைச்சர்கள் மத்தியிலும் முதலமைச்சருடைய கவனத்திற்கும் இதைக் கொண்டுபோக வேண்டும். உயர் அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டுபோய், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 45 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு வி. சோமசுந்தரம் தெரிவித்தார்.

தவெக அரசுக்கு எதிர்ப்பு ஏன்?
அரசு ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் அண்ணா குபேரன் கூறியதாவது: முந்தைய அரசு தனியார்மயத்தை வெவ்வேறு வழிகளில் அமல்படுத்தியது. ஆனால் இப்போது அந்தத் தனியார்மயமாக்கல் முறைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, தமிழ்நாடு வெளிநாட்டு மனிதவளக் கழகம் (Overseas Manpower Corporation Limited – OMCL) போன்ற ஓர் அமைப்பின் மூலம் பணியாளர்களை நியமிக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
அரசாணை எண் 115-ல் திருத்தம் செய்யப்பட்ட பிறகு, அனைத்து அரசுப் பணிகள் மற்றும் பொதுத்துறைப் பணிகளுக்கும் இந்த அமைப்பின் மூலமாகவே ஆட்களைத் தேர்வு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு இது மிகவும் ஆபத்தானது. எனவே, இந்த அரசாணைக்கும் பணி நியமன முறைக்கும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்கிறது.
தற்போதைய முதலமைச்சர் தேர்தல் பிரச்சாரத்தின்போது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் பரிசீலித்து நடைமுறைப்படுத்த முயற்சிப்போம் என்று கூறியிருந்தார். அதேபோல அங்கன்வாடி ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள், கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட மதிப்பூதியத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களையும் காலமுறை ஊதியத்தில் கொண்டுவர வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை. ஆனால் இந்தக் கோரிக்கைகள் எதுவும் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. அதனால்தான் எங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 4-ஆம் தேதி முதலமைச்சரைச் சந்திக்க இருக்கிறோம்.
எல்லாப் பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் சுமூகமான தீர்வு கிடைத்துவிட்டால், அடுத்தகட்டப் போராட்டத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. இல்லையென்றால் களத்தில் இறங்குவதுதான் எங்களுடைய கடமை. நிச்சயமாக ஆட்சியாளர்களைக் களத்தில் எதிர்கொள்வோம்.
திண்டுக்கல்லில் கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி எங்களுடைய மாநிலப் பிரதிநிதிகள் கூட்டத்தை நடத்தினோம். இது வழக்கமாக நடைபெறும் கூட்டம்தான். அந்தக் கூட்டத்தில் 45 அம்சக் கோரிக்கைகளை வகுத்தோம். அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மனுக்கள் கொடுப்பது, ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது எனப் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறோம். அதன்படி, அக்டோபர் 13-ஆம் தேதி அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதைத் தொடர்ந்து அக்டோபர் 28-ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஒருநாள் தர்ணா போராட்டம் நடத்தினோம். இந்தப் போராட்டங்களில் அதிகபட்சமாக 1,000 பேர் வரை கலந்துகொண்டனர்.
அடுத்ததாக நவம்பர் 16-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை ஒவ்வொரு அலுவலகத்திற்கும் நேரில் சென்று அரசு ஊழியர்களைச் சந்தித்துப் பிரச்சாரம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அதன் பிறகு டிசம்பர் 4-ஆம் தேதி முதலமைச்சரை நேரில் சந்தித்து எங்களுடைய 45 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்த இருக்கிறோம். இவ்வாறு அண்ணா குபேரன் கூறினார்.








