எந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கிறார்களோ, அந்த இடத்திற்கு முதல்வர் விஜய் செல்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
முதல்வர் விஜய் நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.68.31 கோடி செலவிலான 44 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, ரூ.11.72 கோடி மதிப்பீட்டிலான 70 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 13,676 பயனாளிகளுக்கு ரூ.62.73 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இன்று, ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழாவில் 26,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குத் தொழில் முனைவோருக்கான ரூ.3,000 கோடி வங்கி நிதி இணைப்புகளைத் தொடங்கி வைத்து, பல்வேறு வகையான வாழ்வாதார நிதியுதவிகள் மற்றும் அனுமதி ஆணைகளையும் வழங்கினார்.
முதல்வரின் இந்த சுற்றுப்பயணத்தை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. விரைவில் திருச்சி கிழக்கு, பெருந்துறை சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் தேர்தல் காரணமாகத்தான் இந்த மாவட்டங்களுக்கு முதல்வர் சென்றுள்ளார் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக இன்று (நவம்பர் 3) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ”முதல்வர் என்பவர் எல்லா தொகுதிகளுக்கும் செல்ல வேண்டும். அங்குள்ள மக்களை சந்தித்து பிரச்சினையை தீர்க்க வேண்டும்.
எந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கிறார்களோ, அந்த இடத்திற்குச் சென்று மட்டும் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது. நிர்வாகக் கோளாறு காரணமாக ஜிஎஸ்டி வருவாய் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆறு மாத காலத்தில் அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய், புளி மற்றும் மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
தீபாவளி போன்ற பண்டிகைக் காலத்தில் விலையேற்றத்தால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விலைவாசியைக் கட்டுப்படுத்தத் திறனற்ற அரசாக இது செயல்படுகிறது” என்று விமர்சித்தார்.









