தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி. அர்லேகரை, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (நவம்பர் 3) காலை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இச்சந்திப்பைத் தொடர்ந்து டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “அமைச்சர் ராஜ்மோகன் தனக்கு லஞ்சம் கொடுக்க வந்தனர் என்று பேசியது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் அமைச்சரின் பேச்சு சின்னபிள்ளை தனமாக உள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். எல்லாவற்றையும் ரீல்ஸ் போடுவது போல கையாளுகிறார்கள். வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருந்த தமிழ் நாட்டை மேலும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கு பதிலாக தமிழ்நாடு தற்போது கடுமையான வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதை முதல்வர் உணர வேண்டும். அகம்பாவம் ஆணவம் எல்லாம் உறுதியாக வீழ்த்தப்படும் மாநிலம் முழுவதும் போதைப்பொருட்கள் விற்பனையை தவெகவினரே செய்து வரும் நிலை உள்ளது. காவல்துறையினர் நடுநிலையோடு செயல்படாமல், ஆளும்கட்சியினரின் ஏவல் துறையாக மாறி அவர்களின் பேச்சைக் கேட்டுச் செயல்படுகிறார்கள். இத்தகைய செயல்பாடுகளால் அவர்கள் நீதிமன்ற விசாரணையில் மாட்டிக்கொள்ளும் நிலை ஏற்படும்.
மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் அரிசியின் விலை மிக அதிகமாக உள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. உண்மையை பேசுபவர்களைத் திரைப்படங்களில் வருவதைப் போல மிரட்டிப் பார்க்க முடியாது. மாநிலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முதலீடுகள் அனைத்தும் வெளிமாநிலங்களுக்குச் சென்று கொண்டிருக்கின்றன.
முதலமைச்சர் தமிழகத்தையே தனியார்மயமாக்க திட்டமிடுகிறார். ‘ஜனநாயகன்‘ படத்தின் தயாரிப்பாளர் போன்ற ஒருவரிடம் ஆட்சியைக் கொடுத்துவிட்டு, தாம் ஓய்வெடுக்க வேண்டும் என்று அவர் நினைக்கிறாரோ எனத் தோன்றுகிறது. பேராசிரியர் கலையரசனை சட்டமன்றத்திற்குப் புறம்பாகக் கைது செய்தது கடும் கண்டனத்திற்குரியது. மேலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சிறுமிகள் காணாமல் போகும் சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்துகின்றன. சட்டம் ஒழுங்கைச் சீரமைக்க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சினிமாவிலிருந்து நேரடியாக எவ்வித அரசியல் அனுபவமும் இன்றி சிலர் அரசியலுக்கு வந்துள்ளனர். வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்த தமிழ்நாடு தற்போது வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது. ஜோதிடர் சொல்வதைக் கேட்டுப் பட்டு வேஷ்டி, சட்டை அணிந்து முதலமைச்சர் வலம் வருகிறார். ஆனால், அவருக்கு வாக்களித்த மக்கள் தற்போது உண்மையை உணர்ந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர். 23-ஆம் புலிகேசி திரைப்படத்தில் பார்த்தது போலத் தமிழ்நாடு மாறிக்கொண்டிருக்கிறது.
குதிரை பேரம் குறித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் உறுதியளித்துள்ளார். மேலும், ஊழல் செய்யும் அமைச்சர்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து எங்களுக்கு வந்து கொண்டிருக்கின்றன. அவை அனைத்தையும் தொகுத்து விரைவில் ஆளுநரிடம் புகாராக அளிக்க உள்ளோம்,” என்று தெரிவித்தார்.









