திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த பெண் தொழிலாளி ஒருவருக்கு, ரூபாய் 4.75 கோடி ஜி.எஸ்.டி. வரி நிலுவை இருப்பதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த சையத் காதர் என்பவர் ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி யாஸ்மின், வீட்டு வேலை செய்து வருகிறார். இந்நிலையில், யாஸ்மினுக்குச் சென்னை பூந்தமல்லியில் உள்ள ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அதில், சென்னை முகப்பேர் கிழக்குப் பகுதியில் ‘டி.வி.எஸ். யாஸ் டிரேடர்ஸ்’ என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருவதாகவும், கடந்த 2024 – 2025-ஆம் நிதியாண்டிற்கான ஜி.எஸ்.டி. வரியாக ரூ.4,75,12,662 நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலுவைத் தொகையை உடனடியாகச் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் யாஸ்மினின் வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸைப் பார்த்த யாஸ்மின் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். தனது ஆதார் மற்றும் பேன் எண்ணை பயன்படுத்தி வரி ஏய்ப்பில் ஈடுபட்ட நபர்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவ்வப்போது இதுபோன்று அப்பாவி மக்களின் அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வரி ஏய்ப்பு செய்யும் சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.









