பேராசிரியர் கலையரசன் விவகாரம்: விஜய் ‘சர்க்கார்’ போலீஸை விளாசிய உயர்நீதிமன்றம்.. சொன்னது என்ன?

By Mathi

|

Published on 3 Nov 2026, 5:55 AM

Kalaiyarasan-High Court

பொருளாதார வல்லுநரான பேராசிரியர் கலையரசனை போலீசார் அதிகாலையில் வீட்டிலிருந்து அழைத்துச் சென்று விசாரணை நடத்திய விவகாரத்தில் முதல்வர் விஜய் நேரில் வருத்தம் தெரிவித்திருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் பேராசிரியர் கலையரசன் விவகாரத்தை சுட்டிக்காட்டி , “எவ்வளவு உயர்ந்த இடத்திலிருந்து மன்னிப்பு வந்தாலும் அது தவறுக்குப் பொறுப்பேற்றதாகாது” என்று சென்னை உயர்நீதிமன்றம் காட்டமாகத் தெரிவித்துள்ளது.

தமிழக முதல்வர் விஜய்யை அவதூறாகப் பேசியதாக திமுக கவுன்சிலர் சுதா மீது தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு முன்ஜாமீன் வழங்கிய நீதிபதி என். ரமேஷ், நேற்று (நவம்பர் 2) பிறப்பித்த 16 பக்க உத்தரவில் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

சென்னை மாநகராட்சியின் 95-வது வார்டு திமுக கவுன்சிலர் சுதா, அக்டோபர் 7-ந் தேதி சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்யை அவதூறாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அக்டோபர் 19-ந் தேதி தவெக நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில், எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் சுதா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். ரமேஷ், சுதாவுக்கு முன்ஜாமீன் வழங்கியதுடன், அரசியல் பேச்சுரிமை, காவல்துறையின் நடுநிலைமை, கைது நடவடிக்கைகள் ஆகியவை குறித்து முக்கியமான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

தீர்ப்பின் முழு விவரம்

அரசியல் பேச்சுகள் தொடர்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்யும் நடைமுறையை ஆய்வு செய்த நீதிபதி, பேராசிரியர் கலையரசன் பெயரைக் குறிப்பிடாமல் அவரை போலீசார் நடத்திய விதம் குறித்து விவரித்துள்ளார்.

ADVERTISEMENT

நீதிபதி தனது உத்தரவின் 21-வது பத்தியில், “மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு அமைப்புகளில் பணியாற்றியுள்ள சென்னையைச் சேர்ந்த புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர் ஒருவர், அதிகாலை சுமார் 5 மணிக்கு சாதாரண உடையில் வந்த போலீசாரால் வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவரிடம் புகார், உரிய அனுமதி ஆவணம் அல்லது முதல் தகவல் அறிக்கை எதுவும் காட்டப்படவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார் (A reputed economist of this city—a scholar who has served bodies of the Union and of this State—was taken from his home at about five in the morning by policemen in plain clothes, no complaint, authorisation or first information report being shown to him).

ஆளுங்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவரைப் பற்றி சமூக வலைதளத்தில் அவதூறான கருத்து வெளியிடப்பட்டதாக எழுந்த புகாரே இதற்குக் காரணம். ஆனால், அந்தப் பொருளாதார வல்லுநரின் புகைப்படத்தைத் தவறாகப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலிக் கணக்கிலிருந்து அந்தக் கருத்து வெளியிடப்பட்டது சில மணி நேரங்களிலேயே தெரியவந்தது. இதையடுத்து அவர் அதே நாளில் விடுவிக்கப்பட்டார். பின்னர் முதல்வர் அவரைத் தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். அமைச்சர் ஒருவர் காவல்துறையின் தவறை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார் என்பதையும் நீதிபதி பதிவு செய்துள்ளார் (Over an abusive social-media comment about a legislator of the ruling party which, it transpired within hours, had been posted from a fake account misusing his photograph. He was released the same day; the Hon’ble Chief Minister received him at the Secretariat, and a Minister publicly acknowledged the lapse).

ADVERTISEMENT

மேலும், “சமூக வலைதளக் கருத்து ஒன்றுக்காக அதிகாலையில் ஒருவரது வீட்டுக்குச் சாதாரண உடையில் போலீசாரை அனுப்புவதற்கு முன்பு என்ன சரிபார்ப்பு நடத்தப்பட்டது? அப்படிச் செயல்பட்ட போலீசார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?” என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார் (The grace shown at the end does not answer the questions the beginning raised: on what verification were plainclothes officers sent to a citizen’s doorstep at dawn over a social-media comment, and what action has followed against those who so acted?).

உயர்ந்த இடத்தில் இருந்து மன்னிப்பு வந்தாலும்

அத்துடன், பேராசிரியர் கலையரசனை முதல்வர் விஜய் சந்தித்து வருத்தம் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் நீதிபதி என். ரமேஷ், “எவ்வளவு உயர்ந்த இடத்திலிருந்து மன்னிப்பு வந்தாலும் அது தவறுக்குப் பொறுப்பேற்றதாகாது. முதல்வரின் தனிப்பட்ட தலையீட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்றால், அது உண்மையான தீர்வே அல்ல” என்றும் தெரிவித்துள்ளார் (An apology, however high its source, is not accountability, and a remedy that depends on the Chief Minister’s personal intervention is not a remedy at all).

இதனைத் தொடர்ந்து, “அதிகாரத்தில் இருப்பவர்களை அணுக முடியாத ஒரு சாதாரண குடிமகனை, இதேபோன்ற தவறான புகாரின் அடிப்படையில் அதிகாலையில் அழைத்துச் சென்றிருந்தால், அவர் காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டு, நீண்ட காலம் வழக்கை எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்கும். அதன் பிறகுதான் அந்தச் சமூக வலைதளக் கணக்கு உண்மையில் அவருடையதுதானா என்ற கேள்வியே எழுந்திருக்கும்” என்றும் நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார் (A common citizen with no access to power, taken at dawn on the same mistaken complaint, would have tasted the lock-up, the remand and the long road of a trial before anyone asked whether the account was even his).

“ஊடகங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போது பிரபலமானவர்களை போலீசார் எப்படி நடத்துகிறார்கள் என்பது முக்கியமல்ல. யாரும் கவனிக்காதபோது சாதாரண மனிதர்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதுதான் காவல்துறையின் உண்மையான அளவுகோல்” என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார் (The measure of a police force is not how it treats the eminent when the press is watching, but how it treats the unknown when nobody is).

ஆளுங்கட்சிக்காக அல்ல, அரசுக்காக காவல்துறை

அதேபோல, “தமிழ்நாட்டிலும் நாடு முழுவதும் அரசியல் விவாதங்கள் பெருமளவில் சமூக வலைதளங்களில் நடைபெறுகின்றன. ஆளுங்கட்சி உட்பட முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் சமூக வலைதள அணிகளை வைத்துள்ளன. எதிர்க்கட்சியினரை அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் விமர்சிப்பதும் கேலி செய்வதும் அவற்றின் அன்றாட நடவடிக்கைகளில் ஒன்றாக உள்ளது. இத்தகைய பதிவுகள் குறித்து அனைத்துத் தரப்பினரும் புகார் அளிக்கின்றனர். ஆனால், எதிர்க்கட்சியினர் மீது புகார் வந்தால் சில மணி நேரங்களிலேயே நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில், ஆளுங்கட்சியினருக்கு எதிரான புகார்கள் பதிவு செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் எழுகிறது” என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார் (Political discourse in this State, as in the country, is now conducted in substantial measure on social media. It is a matter of common knowledge that the major political parties—the party in office included—maintain organised social-media establishments, popularly called IT wings, whose daily output includes trolling and abuse of opponents, ideological, political and personal. Complaints about such content are made on all sides; and the accusation that recurs under every government, whichever party holds office, is that the police move within hours when the speaker belongs to the opposition, while complaints against those aligned with the establishment are not even brought on file).

இந்த வழக்கில் ஆளுங்கட்சியின் தூண்டுதலால் போலீசார் செயல்பட்டதாகத் தாம் முடிவு செய்யவில்லை என்பதையும் நீதிபதி தெளிவுபடுத்தியுள்ளார். அதே நேரத்தில், சம்பவம் நடந்த 12 நாட்களுக்குப் பிறகு ஆளுங்கட்சி நிர்வாகி புகார் அளித்ததும், ஒரு மணி நேரத்துக்குள் வழக்குப் பதிவு செய்யப்பட்டதும் பொதுமக்களுக்கு எப்படித் தோன்றும் என்பதை போலீசார் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் (I do not find, and on this record I need not find, that the respondent acted at any party’s instance here. But the police should ask themselves how the chronology set out in paragraph 4 appears to the citizen who watches it).

ஆளுங்கட்சியினரையும் எதிர்க்கட்சியினரையும் காவல்துறை சமமாக நடத்துவது ஏதோ சலுகை அல்ல. அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் காவல்துறை செயல்படுவதற்கான அடிப்படை நிபந்தனை அது. காவல்துறை நிலைத்திருக்கும் அரசுக்காகப் பணியாற்ற வேண்டுமே தவிர, மாறிக்கொண்டிருக்கும் ஆளுங்கட்சிக்காக அல்ல என்று நீதிபதி தெரிவித்துள்ளார் (An even hand between the ruling party and its opponents is not a courtesy the police extend; it is a condition of their constitutional legitimacy. The police serve the State, which endures, and not the party in government, which changes).

அரசியல் விமர்சனத்துக்காக கைது செய்யலாமா?

முதல்வர் விஜய்யைப் பற்றி திமுக கவுன்சிலர் சுதா பயன்படுத்திய வார்த்தைகள் கண்டிக்கத்தக்கவை என்பதில் சந்தேகமில்லை. அவரும் தனது பேச்சுக்காக வருத்தம் தெரிவித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

ஆனால், அரசியல் பேச்சுரிமைக்கு அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள பாதுகாப்பு, நாகரிகமாகப் பேசுபவர்களுக்கு மட்டுமானது அல்ல. நாகரிகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தும்போதுதான் அந்தப் பாதுகாப்பு சோதனைக்கு உள்ளாகிறது. ஏனெனில், அதிகாரத்தில் இருப்பவர்கள் கைது செய்ய நினைப்பது நாகரிகமாக விமர்சிப்பவர்களை அல்ல என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார் (The constitutional protection of speech is tested when speech is ugly, not when it is polite; it is never the decorous critic whom power is tempted to arrest).

ஜனநாயக நாட்டில் உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் விமர்சனங்களையும் கேலிகளையும் சில நேரங்களில் அவதூறான பேச்சுகளையும்கூட எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஒரு வார்டு கவுன்சிலர் கட்சிக் கூட்டத்தில் பேசிய வார்த்தைகளால் முதல்வர் பதவி பாதிக்கப்படும் அளவுக்கு அது பலவீனமானது அல்ல. அத்தகைய பேச்சுகளுக்குக் கைது நடவடிக்கை மூலம் பதிலளிக்கும்போது, பாதுகாப்பதாகக் கூறும் பதவியின் மதிப்பையே அரசு குறைக்கிறது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார் (Those who hold high office in a republic hold it on the term that they will be criticised, lampooned and, not rarely, abused. The office is not so fragile that a ward councillor’s invective at a party meeting can shake it, and the State diminishes the office it claims to protect when it answers words of that kind with the machinery of arrest).

தன்னம்பிக்கையுள்ள ஓர் அரசு விமர்சனத்துக்கு வாதத்தாலும், கேலிக்குச் செயல்பாட்டாலும் பதிலளிக்க வேண்டும். அவதூறு சட்டத்தின் வரம்பை மீறினால் அதற்குரிய சட்ட வழியைப் பயன்படுத்த வேண்டும். அரசியல் பேச்சுகளைப் பெருந்தன்மையுடன் அணுகுவது அரசு விரும்பினால் வழங்கக்கூடிய சலுகை அல்ல; அதிகாரத்தில் இருப்பவர்களிடம் அரசியலமைப்புச் சட்டம் எதிர்பார்ப்பது அதுதான் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார் (A government confident of itself meets criticism with argument, mockery with performance, and abuse—where it truly crosses the line—with the remedy the law of defamation provides. Magnanimity towards political speech is not a grace the State may extend or withhold; it is what the Constitution exacts of those who hold power over their critics).

சுதாவின் பேச்சு முதல்வர் என்ற தனிநபரை நோக்கியதாகவே இருந்தது. எந்தச் சமூகத்தினரையோ மக்கள் பிரிவினரையோ குறிவைக்கவில்லை. வன்முறையில் ஈடுபடுமாறு யாரையும் தூண்டவில்லை. எனவே, அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு இடையே பகைமையை உருவாக்கியதாகக் கூறி, இரு சமூகங்களுக்கு இடையே குற்றங்களைத் தூண்டும் பேச்சுகளுக்கான சட்டப் பிரிவைப் பயன்படுத்துவது பொருத்தமானதாகத் தெரியவில்லை என்று நீதிபதி விளக்கியுள்ளார்.

மேலும், சுதாவின் பேச்சு ஏற்கெனவே வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு, அதன் எழுத்து வடிவமும் போலீசாரிடம் உள்ளது. சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தப்பட்டு, புகார்தாரர் மற்றும் சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சுதாவிடமிருந்து கைப்பற்ற வேண்டிய பொருள் எதுவும் இல்லை. அவரைக் காவலில் எடுத்து விசாரிப்பதால் என்ன பயன் கிடைக்கும் என்பதையும் காவல்துறை விளக்கவில்லை.

கைது என்பது அரசின் அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கான ஆயுதம் அல்ல. குற்றவியல் சட்டத்தையும் அதன் நடைமுறைகளையும் ஒருவரைத் துன்புறுத்துவதற்கான கருவியாகப் பயன்படுத்தக் கூடாது. பேச்சுக்காக ஒருவரைக் கைது செய்வதாக அச்சுறுத்துவதே மற்றவர்களையும் பேசவிடாமல் தடுக்கும் விளைவை ஏற்படுத்தும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார் (Arrest, in this scheme, is not an instrument for the expression of official displeasure).

பேச்சுக்குத் தடை விதிக்க மறுப்பு

சுதாவுக்கு முன்ஜாமீன் வழங்கினால், இனிமேல் முதல்வருக்கு எதிராக அவதூறாகப் பேசுவதைத் தடுக்க வேண்டும் என்ற காவல்துறையின் கோரிக்கையையும் நீதிபதி ஏற்கவில்லை.

ஜாமீன் வழங்குவதற்காக ஒரு அரசியல்வாதியின் பேச்சுரிமைக்குத் தடை விதிப்பது, அரசியலமைப்புச் சட்டத்தின் 19-வது பிரிவு அரசுக்கு நேரடியாகச் செய்ய அனுமதிக்காத ஒன்றை நீதிமன்றம் மறைமுகமாகச் செய்வதற்குச் சமம் என்று தெரிவித்துள்ளார் (A court that gags a politician as the price of liberty does indirectly what Article 19 forbids the State to do directly).

எதிர்காலத்தில் தனது பேச்சில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பதாக சுதா தாமாக அளித்த உறுதிமொழியை மட்டும் பதிவு செய்த நீதிபதி, அது சுதா அளித்த வாக்குறுதியே தவிர நீதிமன்றம் விதித்த நிபந்தனை அல்ல என்றும் தெளிவுபடுத்தியுள்ளார் (The petitioner’s volunteered undertaking to exercise restraint is recorded; it is her promise, not my condition).

இதையடுத்து சுதாவுக்கு ரூ.25,000 பிணைத்தொகை மற்றும் தலா அதே தொகைக்கான 2 நபர் ஜாமீனுடன் முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சென்னை ஜார்ஜ் டவுன் 7-வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும், மறு உத்தரவு வரும் வரை தினமும் காலை 10.30 மணிக்கு எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தீர்ப்பு முழு விவரம்

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel