குண்டர் சட்டத்தில் ஒருவரை சிறையில் அடைக்க உத்தரவிட்ட விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தின் கடும் கண்டனத்துக்கு ஆளான ஐபிஎஸ் அதிகாரி அருண், உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார். அவரது மன்னிப்பை இன்று (நவம்பர் 2) ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், அருணுக்கு எதிராக உயர்நீதிமன்றம் தெரிவித்த கண்டனங்களை நீக்கியுள்ளது.
சென்னை கொளத்தூர் ராமதாஸ் நகரில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் சகோதரர் எல்.கே.சுதீஷின் மனைவி பூர்ணஜோதிக்கு சொந்தமாக 2 ஏக்கர் 10 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் 234 அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டி, அவற்றில் 78 வீடுகளை சுதீஷ் மற்றும் பூர்ணஜோதிக்கு ஒதுக்குவதாகத் தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் சர்மா ஒப்பந்தம் செய்திருந்தார். இதற்காக லோகா டெவலப்ஸ் நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், தங்களுக்கு ஒதுக்க வேண்டிய 78 வீடுகளில் 48 வீடுகளைப் போலி ஆவணங்கள் மூலம் மற்றவர்களுக்கு விற்று சுமார் ரூ.42 கோடி மோசடி செய்துவிட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் எல்.கே.சுதீஷ் மனைவி பூர்ணஜோதி புகார் அளித்தார்.
குண்டர் சட்டம்
இதனிடையே, லோகா டெவலப்பர்ஸ் நிறுவனத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்குவதற்காக ரூ.1.38 கோடி செலுத்திய ரவி என்பவரும், பணத்தைப் பெற்றுக்கொண்டு வீட்டை ஒப்படைக்காமல் ஏமாற்றியதாகப் புகார் அளித்திருந்தார். மேலும், அந்தக் குடியிருப்பை வேறு நபர்களுக்கு விற்பனை செய்ததுடன், போலி ஆவணங்கள் மூலம் அடமானமும் வைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. ரவி அளித்த புகாரின் அடிப்படையில் 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29-ந் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சந்தோஷ் சர்மாவும் அவரது மனைவி கல்பனா சர்மாவும் செப்டம்பர் 1-ந் தேதி கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை அடிப்படையாக வைத்து சந்தோஷ் சர்மாவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க அப்போதைய சென்னை காவல் ஆணையர் அருண், 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி உத்தரவிட்டார்.
உயர்நீதிமன்றம் ஏன் கண்டித்தது?
இந்த உத்தரவை எதிர்த்து சந்தோஷ் சர்மாவின் மகள் வர்ஷா சர்மா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 2019-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரையிலான சம்பவங்களுக்காக, பல ஆண்டுகள் கழித்து தனது தந்தையை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்திருப்பது சட்டவிரோதமானது என்று அவர் தெரிவித்திருந்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அருண் ஐபிஎஸ் நேரில் ஆஜரானார். அப்போது குண்டர் சட்ட உத்தரவு பிறப்பித்ததை அவர் நியாயப்படுத்தியதாக உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது. இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்த உயர்நீதிமன்றம், சந்தோஷ் சர்மா மீதான குண்டர் சட்ட உத்தரவை கடந்த மே 29-ந் தேதி ரத்து செய்தது.
அருணுக்கு கண்டனம்
ஒப்பந்தத்தை மீறி மோசடி செய்திருந்தால் அதற்காக வழக்குத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், இதுபோன்ற ஒரு வழக்கில் குண்டர் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் என்ன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், அருண் ஐபிஎஸ் இதுபோன்ற குண்டர் சட்ட உத்தரவுகளைத் தொடர்ந்து பிறப்பித்து வருவதாகவும், அவற்றில் பலவற்றை நீதிமன்றம் ஏற்கெனவே ரத்து செய்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
28 ஆண்டுகள் காவல்துறையில் பணியாற்றிய அனுபவமுள்ள அதிகாரி, இதுபோன்ற உத்தரவைத் தெரிந்தே பிறப்பித்திருப்பதாகக் கூறி அருணுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். அப்போது அவர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டிருந்தது குறித்தும் நீதிபதிகள் விமர்சித்திருந்தனர்.
உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு
சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்த இந்தக் கண்டனங்களை நீக்கக் கோரி அருண் ஐபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத், ஆர்.மகாதேவன், அபரேஷ் குமார் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (நவம்பர் 2) விசாரணைக்கு வந்தது.

அப்போது அருண் ஐபிஎஸ் நேரில் ஆஜரானார். அவர் சார்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா ஆஜராகி, குண்டர் சட்ட உத்தரவு பிறப்பித்ததில் அருண் தனது தவறை உணர்ந்திருப்பதாகவும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார் (The appellant had realised his error and was willing to tender an unconditional apology).
மேலும், உயர்நீதிமன்றம் தெரிவித்த கண்டனங்கள் தொடர்ந்து பதிவில் இருந்தால் அருணின் பணிக்கும் நற்பெயருக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் வாதிட்டார்.
இதையடுத்து அருண் ஐபிஎஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். அதில், 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி குண்டர் சட்ட உத்தரவு பிறப்பித்ததில் தவறு செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் உயர்நீதிமன்றம் தன்னை நேரில் ஆஜராக அழைத்தபோதே அந்தத் தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் என்றும், அப்போது அவ்வாறு செய்யாததற்காக வருந்துவதாகவும் தெரிவித்தார் (When summoned by the High Court, he ought to have accepted the error at that stage).
இதற்காக உயர்நீதிமன்றத்திடமும் உச்சநீதிமன்றத்திடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட அருண், இனிமேல் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தும்போது கூடுதல் கவனத்துடன் செயல்படுவதாகவும் உறுதியளித்தார்.
உச்சநீதிமன்ற உத்தரவு என்ன?
இதனைப் பரிசீலித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், உயர் பதவியில் இருக்கும் காவல்துறை அதிகாரிகள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் முக்கியத்துவத்தையும் பொறுப்பையும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
குறிப்பாக, ஒருவரது தனிமனித சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையில் அதிகாரத்தைப் பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சட்ட விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். குண்டர் சட்டம் போன்ற தடுப்புக் காவல் அதிகாரத்தை மிகவும் எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும் (Such power must, therefore, be exercised with utmost circumspection and in strict conformity with the requirements of law) என்று தெரிவித்தனர்.
ஒருவரது சுதந்திரத்தைப் பாதிக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் காட்ட வேண்டிய கவனத்திற்கு, பின்னர் மன்னிப்பு கேட்பது மாற்றாகிவிட முடியாது (The tendering of an apology cannot be regarded as a substitute for due care in the exercise of powers affecting the liberty of a person) என்றும் எச்சரித்தனர்.
இதையடுத்து அருண் ஐபிஎஸ் கேட்ட நிபந்தனையற்ற மன்னிப்பையும், எதிர்காலத்தில் கவனமாகச் செயல்படுவதாக அவர் அளித்த உறுதிமொழியையும், வழக்கின் சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு அவரது மன்னிப்பை ஏற்றுக்கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது (Having regard to the unconditional apology tendered by the appellant, the assurance furnished by him, and the circumstances of the present case, we accept the apology).
இதன்படி, அருணுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின் 6, 8, 10 மற்றும் 19 முதல் 23 வரையிலான பத்திகளில் இடம்பெற்றிருந்த கண்டனங்களை நீக்கி உத்தரவிட்டது (The adverse remarks made against the appellant in paragraph nos. 6, 8, 10 and 19 to 23 of the impugned judgment are directed to be expunged).
அதே நேரத்தில், சந்தோஷ் சர்மா மீதான குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் எந்த மாற்றமும் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது (Shall not affect the decision of the High Court setting aside the detention order).
காத்திருப்போர் பட்டியலில் அருண்
அருண் ஐபிஎஸ், தற்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். சென்னை பெருநகர காவல் ஆணையராக இருந்த அருண் ஐபிஎஸ், தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற பின்னர், கடந்த மே 25-ந் தேதி லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டார். ஆனால், அந்தப் பதவிக்கு வந்த 50 நாட்களிலேயே ஜூலை 13-ந் தேதி அந்த பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு தமிழ்நாடு காவல்துறை அகாடமி இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
இதனிடையே, கிரானைட் தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கு அருண் ஐபிஎஸுக்கு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது. சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஜெம் வீரமணி மீது 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதமே அப்போதைய சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையர் கண்ணனிடம் புகார் அளித்ததாக காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமார் தெரிவித்திருந்தார். ஆனால், இந்தப் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் ரஞ்சன்குமார் குற்றம்சாட்டினார்.
அப்போது சென்னை காவல் ஆணையராக இருந்த அருணுக்கும் இந்த விவகாரம் தெரிந்திருந்ததாகவும், அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்தச் சர்ச்சைக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 24-ந் தேதி அருண் ஐபிஎஸ், கண்ணன் ஐபிஎஸ் மற்றும் காவல் உதவி ஆணையர் யாஸ்மின் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். ஜெம் வீரமணி வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு, அருண் ஐபிஎஸ் மற்றும் கண்ணன் ஐபிஎஸ் ஆகியோரிடமும் விசாரணை நடத்தியது.
இதனிடையே, ஜெம் வீரமணி மீதான வழக்கை முடித்து வைப்பதற்காக லஞ்சமாகப் பெறப்பட்ட பணத்தில், அருண் ஐபிஎஸ் ரூ.24 கோடிக்குத் தங்கம் வாங்கியதாகத் தகவல் கிடைத்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வாராகி என்பவர் மனு தாக்கல் செய்தார். ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.147.87 கோடி மதிப்புள்ள சொத்துகள் கைமாறியிருப்பதாகவும், பிரகாஷ் கண்ணையன் என்பவர் மூலமாகப் பணப் பரிமாற்றம் நடைபெற்றதாகவும் அந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த தங்கம் வாங்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் நகைக்கடை ரசீதுகள், வங்கிப் பரிவர்த்தனைகள் உள்ளிட்டவற்றை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரியிருந்தார்.
இவ்வாறு ஜெம் வீரமணி வழக்கில் அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு காத்திருப்போர் பட்டியலில் உள்ள அருண் ஐபிஎஸ், தற்போது மற்றொரு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்த கண்டனங்களை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார்.









