சென்னை – புதுச்சேரிக்கு பயணிகள் படகு சேவை!

By Kavi

|

Published on 2 Nov 2026, 3:06 PM

சென்னையில் இருந்து மாமல்லபுரம் வழியாக புதுச்சேரிக்கு படகு சேவையை தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 

சென்னை, மாமல்லபுரம், புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு பெரும்பாலும் சாலை வழியாகவே சுற்றுலாப் பயணிகள் செல்கின்றனர். இந்தநிலையில் தமிழ்நாடு சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு இம்முடிவை எடுத்துள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து  தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் துணைத் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் வெளியிட்ட அறிவிப்பில்,  “தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் தமிழ்நாடு கடல்சார் வாரியம், சென்னை, மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு இடையே கடல் வழித்தடம் மூலம் பயணிகள் படகு போக்குவரத்து சேவையை இயக்க விருப்பமுள்ள அனுபவம் வாய்ந்த மற்றும் நிதி வலிமை கொண்ட படகு போக்குவரத்து நிறுவனங்கள், கப்பல் உரிமையாளர்கள், முகவர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விருப்பக் கோரிக்கைகளை வரவேற்கிறது.

இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் சென்னை, மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரி இடையே பயணிகள் படகு போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்துவதாகும். இதன் மூலம் கடலோர சுற்றுலாவை மேம்படுத்துதல், பயணிகளுக்கு மாற்றுப் போக்குவரத்து வசதியை வழங்குதல் மற்றும் ஒருங்கிணைந்த கடலோர சுற்றுலா வழித்தடத்தை உருவாக்குதல் ஆகும்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக, சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்கான பயணிகள் படகு போக்குவரத்து சேவையை இயக்குவதில் உரிய அனுபவம் கொண்ட தகுதியான படகு உரிமையாளர்கள் மற்றும் இயக்குநர்களிடமிருந்து தமிழ்நாடு கடல்சார் வாரியம் விருப்பக் கோரிக்கைகளை வரவேற்கிறது.

இதற்கான விருப்பக் கோரிக்கை ஆவணத்தை https://tntenders.gov.in/nicgep/app என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ADVERTISEMENT

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள், தங்களது விருப்பக் கோரிக்கையை 01.12.2026 அன்று காலை 11 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel