முந்தைய திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகத் துறையில் அரசு பணியிட நியமன முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று (நவ.2) டிஸ்மிஸ் செய்தது.
திமுக ஆட்சிக்காலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு, பணி நியமனத்தில் ஊழல் நடந்திருப்பதாகத் தமிழக டிஜிபிக்கு 2025-ம் ஆண்டு அக்டோபரில் அமலாக்கத்துறை கடிதங்களை அனுப்பியது. இந்த கடிதங்களின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக ராஜ்யசபா எம்.பி. இன்பதுரை மற்றும் ஆதி நாராயணன் ஆகியோர் தனித் தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், அமலாக்கத்துறை கடிதத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய கடந்த பிப்ரவரி 20-ந் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி முந்தைய தமிழக அரசும் மனுத் தாக்கல் செய்திருந்தது. ஆனால் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அந்த மனு திரும்பப் பெறப்பட்டது.
இதனிடையே, தனது தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் கூறி கே.என்.நேரு தனியாக மறுஆய்வு மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த அக்டோபர் 26-ந் தேதி தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, உயர்நீதிமன்றத்தின் பிப்ரவரி 20-ந் தேதி உத்தரவையும், அக்டோபர் 26-ந் தேதி மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்ட உத்தரவையும் எதிர்த்து கே.என்.நேரு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார். தமிழக அரசும் இந்த வழக்கில் கேவியட் மனுத் தாக்கல் செய்திருந்தது.
உச்சநீதிமன்றத்தில் என்ன நடந்தது?
இந்த மனு நீதிபதிகள் தீபங்கர் தத்தா, ஷீல் நாகு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. கே.என்.நேரு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், “ கே.என்.நேருவின் தரப்பு விளக்கத்தைக் கேட்காமலேயே அவருக்கு எதிரான கருத்துகளைப் பதிவு செய்துள்ளது. இது அடிப்படையிலேயே தவறானது” என்று வாதிட்டார். இதற்குப் பதிலளித்த நீதிபதிகள், ”கே.என்.நேருவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தும் அவர் விசாரணையில் பங்கேற்கவில்லை” என்றனர்.
அதற்கு ஷியாம் திவான், “வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நாளில்தான் நோட்டீஸ் கிடைத்தது. எனவே பதில் மனுத் தாக்கல் செய்யவோ, எங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்கவோ உரிய வாய்ப்பு கிடைக்கவில்லை” என்றார்.
ஆனால் இதை ஏற்காத நீதிபதி தீபங்கர் தத்தா, உயர்நீதிமன்றம் கே.என்.நேருவுக்கு எதிராக எந்த இறுதி முடிவையும் தெரிவிக்கவில்லை என்றும், ஏற்கெனவே பதிவுகளில் இருந்த விவரங்களைத்தான் குறிப்பிட்டுள்ளது என்றும் கூறினார்.
இந்த வழக்கில் தொடர்ந்து வாதிட்ட ஷியாம் திவான், “கே.என்.நேரு தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்திருந்த பணமோசடி வழக்கை, 2025-ம் ஆண்டு ஜூலையில் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. அந்த வழக்குக்கு அடிப்படையாக இருந்த குற்ற வழக்கு ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டதால்தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அப்படியிருக்கும்போது, ஏற்கெனவே ரத்து செய்யப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை சேகரித்த ஆவணங்களை வைத்து புதிதாக நடவடிக்கை எடுக்க முடியாது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் 66(2) பிரிவைப் பயன்படுத்தி அந்த ஆவணங்களை தமிழக காவல்துறைக்கு அனுப்பியதும் தவறு. அந்த ஆவணங்களின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதும் தவறு. அமலாக்கத்துறையின் வழக்கே ரத்து செய்யப்பட்டுவிட்ட நிலையில், அந்த வழக்கில் சேகரிக்கப்பட்டு சீலிடப்பட்ட உறையில் வைக்கப்பட்டிருந்த ஆவணங்களை உயர்நீதிமன்றம் பரிசீலித்திருக்கக் கூடாது” என்று ஷியாம் திவான் வாதிட்டார்.
மேலும், “கே.என்.நேருவின் அரசியல் எதிரி ஒருவர் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். இப்படிப்பட்ட வழக்குகளில் நீதிமன்றம் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். ஒருவருக்கு எதிராகப் பாதகமான உத்தரவு பிறப்பிக்கும்போது, அவரது தரப்பு விளக்கத்தைக் கேட்க உரிய வாய்ப்பு அளிக்க வேண்டும். நீதி வழங்கப்படுவது மட்டுமல்ல, அது நியாயமான முறையில் வழங்கப்படுகிறது என்ற நம்பிக்கையும் ஏற்பட வேண்டும். ஆனால் கே.என்.நேருவுக்கு அத்தகைய வாய்ப்பு வழங்கப்படவில்லை” என்று ஷியாம் திவான் வாதிட்டார்.
ஆனால் இந்த வாதங்களை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்றம் பிப்ரவரி 20-ந் தேதி பிறப்பித்த உத்தரவிலும், அக்டோபர் 26-ந் தேதி மறுஆய்வு மனுவைத் தள்ளுபடி செய்த உத்தரவிலும் தலையிடுவதற்கான காரணங்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்து கே.என்.நேருவின் மேல்முறையீட்டு மனுவை டிஸ்மிஸ் செய்தனர்.
அத்துடன், கே.என்.நேரு குறித்து உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகளை, அவர் குற்றம் செய்துவிட்டதாக அளிக்கப்பட்ட இறுதி முடிவாகக் கருதக் கூடாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெளிவுபடுத்தினர். இந்த வழக்கின் அடுத்தடுத்த கட்டங்களில் கே.என்.நேரு தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வாதிடலாம். அதற்கு உயர்நீதிமன்றத்தின் முந்தைய கருத்துகள் தடையாக இருக்கக் கூடாது என்றும் தெரிவித்தனர்.









