தமிழகம் முழுவதும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் நடைமுறையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இப்புதிய நடைமுறையைச் செயல்படுத்துவது டாஸ்மாக் ஊழியர்களுக்குக் கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புதிய நடைமுறையின்படி, மது பாட்டில்களின் விலையில் கூடுதலாக 10 ரூபாய் ‘சுற்றுச்சூழல் வைப்புத் தொகையாக’ சேர்க்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் காலி மது பாட்டில்களைத் திரும்ப ஒப்படைக்கும் போது, அந்த 10 ரூபாய் அவர்களுக்குத் திரும்ப வழங்கப்படும். மேலும், பாட்டில்களில் உள்ள ‘கியூ ஆர்’ (QR Code) குறியீடுகளை ஸ்கேன் செய்து சரிபார்க்கும் பணிகளையும் ஊழியர்களே மேற்கொள்ள வேண்டியுள்ளது.
ஏற்கெனவே டாஸ்மாக் கடைகளில் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவிவரும் நிலையில், காலி பாட்டில்களைப் பெற்றுக்கொள்வது, அவற்றை பாதுகாப்பாகச் சேமித்து வைப்பது, ஸ்கேன் செய்வது மற்றும் வாடிக்கையாளர்களுக்குப் பணத்தைத் திரும்ப வழங்குவது உள்ளிட்ட கூடுதல் பணிகளை மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதாக ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, இந்த புதிய நடைமுறையைச் செயல்படுத்த உரிய கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும், காலி மது பாட்டில்களைச் சேகரிப்பதற்குத் தனி ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி நேற்று டாஸ்மாக் ஊழியர்கள் திடீரென வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டதால், மதுபானம் வாங்க வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு பகுதியில் செயல்பட்டு வரும் மதுபானக் கடையில் மது வாங்கக் குடிமகன்களின் கூட்டம் அலைமோதியது.
மது வாங்கப் பல பகுதிகளில் இருந்து வந்த குடிமகன்கள் நீண்ட வரிசையில் காத்து நின்ற நிலையில், மது வாங்க வந்த திங்கள்நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நீண்ட வரிசையைக் கண்டவுடன் முதல்வர் விஜய்யின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில், “இந்தக் குருந்தன்கோடு பாரில் பயங்கரக் கூட்டம் அண்ணா. நாங்க உங்களுக்காக ஓட்டு போட்டுருக்கோம் இல்லையா அண்ணா? எங்களுக்குக் குடிக்க மாத்திரம் கொஞ்சம் கிளியரா பண்ணி தாங்க அண்ணா. லைன்ல நிக்காம எங்களுக்கு டேபிள்ல இருந்தாச்சுன்னா நம்ம என்ன கேட்கிறோமோ வெளிநாட்டுல தருவது மாதிரி இது ஒன்றை மட்டும் கிளியர் பண்ணித் தா அண்ணா. நீ லண்டனுக்கெல்லாம் போற ஆளுதானே அண்ணா?
உனக்கு தெரியலையா விஜய் அண்ணா? உனக்கெல்லாம் நாங்க ஓட்டு போட்டுருக்கோம். இந்தக் குடிக்கிறது மாத்திரம் எங்களுக்கு கொஞ்சம் கிளியராட்டுப் பண்ணித் தா அண்ணா. இவ்வளவு கூட்டம் இருந்தா எப்படி குடிச்சிட்டு அடுத்தது வீட்டுல போய் சாப்பிடணும், மதியம் சாப்பிடணும் இல்லையா அண்ணா?
அதனால இந்த பிராந்தி கடையெல்லாம் கிளியர் பண்ணித் தா அண்ணா” என வினோத கோரிக்கை வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் திறக்க மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஊழியர்கள் போராட்டம் நடத்தினால் தற்காலிக பணியாளர்களை வைத்து டாஸ்மாக் கடைகளைத் திறக்க வேண்டும்; மதியம் 12 மணிக்குக் கடைகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.









