தமிழகத்தில் விஜய் அரசின் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தில் செய்யப்பட்ட புதிய மாற்றங்களுக்கு எதிராக இன்று (நவம்பர் 1) டாஸ்மாக் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது டாஸ்மாக் நிர்வாகம்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. இதன்படி மதுபாட்டிலின் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் ரூ.10 வசூலிக்கப்பட்டு, காலி பாட்டிலைத் திரும்ப ஒப்படைக்கும்போது அந்தத் தொகை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.
தற்போது இந்த ரூ.10 தொகையை மதுபாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையிலேயே (MRP) சேர்த்து, நவம்பர் 1-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்த விஜய் அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ரூ.140 விலையுள்ள மதுபாட்டிலின் புதிய MRP ரூ.150 ஆகிறது. இந்த ரூ.150-க்கு மேல் காலி பாட்டிலுக்காகத் தனியாக ரூ.10 வசூலிக்கக் கூடாது. அதேநேரத்தில் காலி பாட்டிலைத் திரும்ப ஒப்படைத்தால் வாடிக்கையாளருக்கு ரூ.10 திருப்பி வழங்கப்படும்.
இந்தப் புதிய நடைமுறை ஏற்கெனவே காலி பாட்டில் திட்டம் செயல்படுத்தப்படாத சென்னை உள்ளிட்ட 8 டாஸ்மாக் மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காலி பாட்டில்களை வாங்கி வைக்க கடைகளில் போதுமான இடம் இல்லை; பாட்டில்களைச் சரிபார்க்க ஸ்கேனர் உள்ளிட்ட வசதிகளும் இல்லை; காலி பாட்டில்களை எண்ணி, பாதுகாத்து, ஒப்படைக்கும் பணிகளால் கூடுதல் பணிச்சுமை ஏற்படும் என்பது ஊழியர்களின் தரப்பு கருத்து.

460 கடைகள் திடீர் மூடல்
இந்த நிலையில், இன்று நவம்பர் 1-ந் தேதி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் கடைகளைத் திறக்காமல் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, திருவள்ளூர், மதுரை, ஈரோடு, கரூர், வேலூர், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் மொத்தம் 4,040 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் 460 டாஸ்மாக் மதுபானக் கடைகள் இன்று திறக்கப்படவில்லை. ஞாயிற்றுக்கிழமை என்பதால் மதுபான விற்பனை அதிகமாக இருக்கும் நிலையில், கடைகள் மூடப்பட்டதால் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

‘டிஸ்மிஸ்’ மெமோ
இதனையடுத்து டாஸ்மாக் ஊழியர்கள் கடைகளைத் திறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கையில் இறங்கியுள்ளது. டாஸ்மாக் கடைகளை மூடி போராட்டம் நடத்திய 3 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், டாஸ்மாக் கடைகளை முன் அனுமதியோ, முன்னறிவிப்போ இல்லாமல் தன்னிச்சையாக மூடியது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட கடைகளின் மேற்பார்வையாளர்களுக்கு விளக்கம் கேட்டு மெமோ அனுப்பப்பட்டுள்ளது.
அதில், கடைகளைத் திறக்காமல் பணியில் கடமை தவறியதற்காகத் தங்களை ஏன் பணியில் இருந்து விடுவிக்கக் கூடாது என்பதற்கு விளக்கம் அளிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் உத்தரவை மீறி கடைகளை மூடிய ஊழியர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும், இல்லையெனில் அவர்கள் மீது நிர்வாக ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் விக்னேஷ் எச்சரித்துள்ளார்.
அமைச்சர் விக்னேஷ் விளக்கம் என்ன?
இதனிடையே சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அமைச்சர் விக்னேஷ் கூறுகையில், “காலி பாட்டிலுக்கான ரூ.10 திட்டம் என்ன என்பது பற்றி மூத்த பத்திரிகையாளர்களுக்குப் புரிந்துவிட்டது. சிலருக்குப் புரியவில்லை. சிலர் புரிந்தும் புரியாதது போல நடிக்கிறார்கள்.
முன்பு ரூ.140-க்கு விற்கப்பட்ட பாட்டிலுக்கு, காலி பாட்டிலுக்காகக் கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்பட்டது. அந்தப் பாட்டிலைத் திரும்பக் கொடுக்கும்போது ரூ.10 திருப்பிக் கொடுக்கப்பட்டது. இந்த ரூ.150 போக, இன்னொரு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்பட்டது. அதுதான் ‘கட்சி நிதி’ (Party Fund) என்று தலைவர் கரூர் பொதுக்கூட்டத்தில் பேசியிருப்பார். அதாவது ரூ.140 பாட்டிலை ரூ.160-க்கு விற்றுக் கொண்டிருந்தார்கள்.
நாங்கள் என்ன செய்தோம் என்றால், MRP விலைக்கு மேல் காலி பாட்டிலுக்காகத் தனியாக ரூ.10 வசூலிக்கும் நடைமுறையை மாற்றியுள்ளோம். அந்தத் தொகை அரசு கணக்கிற்கு வர வேண்டும் என்பதற்காக மதுபாட்டிலின் MRP விலையுடனேயே இணைத்துள்ளோம்.
இதனால் ரூ.140 பாட்டிலின் புதிய MRP ரூ.150 ஆகிறது. இந்த விலைக்கு மேல் கூடுதலாகப் பணம் வாங்கக் கூடாது. காலி பாட்டிலைத் திரும்ப ஒப்படைத்தால் வாடிக்கையாளருக்கு ரூ.10 வழங்கப்படும்.
அரசு இந்தத் துறையிலிருந்து எப்படியெல்லாம் முறைகேடாகப் பணம் எடுக்கப்பட்டதோ, அந்த வழிகள் அனைத்தையும் அடைத்து, அந்தப் பணம் அனைத்தும் அரசு கஜானாவிற்கு வர வேண்டும் என்று முயற்சி செய்து ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது. அந்தப் புரிதலின்மையில்தான் இந்தக் குழப்பம் நீடிக்கிறது” என்றார்.
மேலும், டாஸ்மாக் கடைகளின் மின்சாரக் கட்டணம், பராமரிப்புச் செலவு உள்ளிட்டவற்றை நிர்வாகமே ஏற்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மதுபானப் பெட்டிகளை ஏற்றி இறக்கும் பணிகளுக்காகக் கடை ஊழியர்களிடம் பணம் கேட்கக் கூடாது என ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.
அலைமோதிய கூட்டம்
டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பகுதிகளில் திறக்கப்பட்டிருந்த கடைகளில் பெரும் எண்ணிக்கையில் குடிமகன்கள் குவிந்தனர். இதனால் அலைமோதிய குடிமகன்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.









