சென்னை உட்பட 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. ஆட்சியர்களுக்கு அவசர அறிவுறுத்தல்!

By Mathi

|

Published on 1 Nov 2026, 7:58 PM

Cyclone Murasu-Rain Alert-Govt

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று (நவம்பர் 1) முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையரகம் அறிவுறுத்தியுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘முரசு’ புயல் தற்போது சென்னைக்குக் கிழக்கு-தென்கிழக்கே 480 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்தப் புயல் நாளை (நவம்பர் 2) தீவிர புயலாக வலுப்பெற்று, நவம்பர் 2-ந் தேதி நள்ளிரவு முதல் 3-ந் தேதி அதிகாலைக்குள் ஆந்திர கடற்கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில், சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில், வடதமிழக மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

எந்தெந்த மாவட்டங்களில் மிகக் கனமழை?

இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

நாளை (நவம்பர் 2) சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே நாளில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

நவம்பர் 3-ந் தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஆட்சியர்களுக்கு என்ன அறிவுறுத்தல்?

வானிலை மையத்தின் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, மாநில நிவாரண ஆணையர் அலுவலகம் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், நீலகிரி ஆகிய 7 மாவட்ட ஆட்சியர்களுக்கும் அவசரக் கடிதம் அனுப்பியுள்ளது.

அதில், பேரிடர்களைக் கையாள்வதற்கான நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றுவதுடன், மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து அமைப்புகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கனமழையால் ஏற்படக்கூடிய அவசரச் சூழல்களை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், உடனடியாக மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ஏ. சிவஞானம் அறிவுறுத்தியுள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel