தமிழகத்தில் நடைபெற உள்ள 5 சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொள்வது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (நவம்பர் 1) சென்னையில் நடைபெற்றது.
சட்டசபைத் தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சிலர் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்ததால் அக்கட்சிக்குள் அதிருப்தி ஏற்பட்டது. இதையடுத்து மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பொறுப்புகளில் எடப்பாடி பழனிசாமி பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறார்.
இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றது. ஏற்கெனவே அதிமுக வசம் இருந்த இந்த 2 தொகுதிகளிலும் அக்கட்சி 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டது.

இந்தத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். இன்றைய கூட்டத்தில் அடுத்ததாக நடைபெற உள்ள அம்பாசமுத்திரம், திருச்சி கிழக்கு, பெருந்துறை, விராலிமலை, கரூர் ஆகிய 5 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் கட்சியின் களப்பணிகளைத் தீவிரப்படுத்துவது, வாக்குச்சாவடி அளவில் நிர்வாகிகளை ஒருங்கிணைப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்களை டிசம்பர் மாதத்துக்குள் நடத்த வேண்டிய நிலையில், அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் இன்றைய மா.செ.க்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.









