தென் மாவட்டங்களில் இந்த நவம்பர் மாதத்தில் ரயில் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளவர்கள், தாங்கள் பயணிக்கும் ரயில்களின் சேவை மாற்றங்களை முன்கூட்டியே தெரிந்து கொள்வது அவசியம்.
தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்தில் தண்டவாளப் பராமரிப்பு மற்றும் புதுப்பிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நவம்பர் மாதத்தில் குறிப்பிட்ட தேதிகளில் 3 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன. 6 ரயில் சேவைகள் குறிப்பிட்ட வழித்தடங்களில் பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன. மேலும் 2 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ள விவரங்கள்:
மதுரை, திண்டுக்கல் வழியாகச் செல்லாத குருவாயூர் எக்ஸ்பிரஸ்
குருவாயூரில் இருந்து தாம்பரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16128), நவம்பர் 1, 3, 10, 12, 15, 17, 19, 22, 24, 26, 29 மற்றும் டிசம்பர் 1, 3, 6 ஆகிய தேதிகளில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
இந்த ரயில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். இதனால் மதுரை சந்திப்பு, சோழவந்தான், கொடைரோடு, திண்டுக்கல், மணப்பாறை ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது.
அதேநேரத்தில் அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும்.
நாகர்கோவில்- கோவை எக்ஸ்பிரஸ் மாற்றுப்பாதையில் இயக்கம்
நாகர்கோவிலில் இருந்து காலை 8 மணிக்குப் புறப்படும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் (16321), நவம்பர் 2, 4, 11, 13, 16, 18, 20, 23 மற்றும் டிசம்பர் 4, 7 ஆகிய தேதிகளில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இந்த ரயில் விருதுநகர், காரைக்குடி, திருச்சி, கரூர் வழியாக கோவைக்குச் செல்லும்.
இதனால் திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை சந்திப்பு, சோழவந்தான், கொடைரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், எரியோடு, பாளையம் ஆகிய நிலையங்களில் நிற்காது.
அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும்.

செங்கோட்டை- மதுரை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்
செங்கோட்டையில் இருந்து பிற்பகல் 12.20 மணிக்குப் புறப்படும் மதுரை பயணிகள் ரயில் (56772), நவம்பர் 2, 4, 11, 13, 16, 18, 20, 23 மற்றும் டிசம்பர் 4, 7 ஆகிய தேதிகளில் விருதுநகர், மானாமதுரை வழியாக மதுரை சந்திப்பை வந்தடையும்.
இந்த ரயில் கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய நிலையங்களில் நிற்காது. மானாமதுரை, மதுரை கிழக்கு ஆகிய நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும்.
மதுரை-ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்
மதுரையில் இருந்து காலை 7 மணிக்குப் புறப்படும் ராமேஸ்வரம் பயணிகள் ரயில் (56711), நவம்பர் 5, 12 ஆகிய தேதிகளில் ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்படும். ராமநாதபுரம்–ராமேஸ்வரம் இடையே சேவை ரத்து செய்யப்படுகிறது.
நவம்பர் 19, 20, 21, 25, 26, 27, 28 ஆகிய தேதிகளில் இந்த ரயில் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்படும். மண்டபம்–ராமேஸ்வரம் இடையே சேவை ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல ராமேஸ்வரத்தில் இருந்து காலை 11.30 மணிக்குப் புறப்படும் மதுரை பயணிகள் ரயில் (56714), நவம்பர் 5, 12 ஆகிய தேதிகளில் ராமநாதபுரத்தில் இருந்து புறப்படும்.
நவம்பர் 19, 20, 21, 25, 26, 27, 28 ஆகிய தேதிகளில் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு மதுரை செல்லும்.
செங்கோட்டை- திருநெல்வேலி ரயில் சேவையில் மாற்றம்
செங்கோட்டையில் இருந்து காலை 10 மணிக்குப் புறப்படும் திருநெல்வேலி பயணிகள் ரயில் (56742), நவம்பர் 26, 27, 28, 29, 30 ஆகிய 5 நாட்களில் சேரன்மகாதேவி வரை மட்டுமே இயக்கப்படும். சேரன்மகாதேவி–திருநெல்வேலி இடையே சேவை ரத்து செய்யப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து பிற்பகல் 2.40 மணிக்குப் புறப்படும் செங்கோட்டை பயணிகள் ரயில் (56743), இதே 5 நாட்களில் சேரன்மகாதேவியில் இருந்து புறப்படும். திருநெல்வேலி–சேரன்மகாதேவி இடையே சேவை ரத்து செய்யப்படுகிறது.

திருச்செந்தூர்-திருநெல்வேலி ரயில்கள் 5 நாட்களுக்கு முழு ரத்து
திருச்செந்தூரில் இருந்து காலை 10.10 மணிக்குப் புறப்படும் திருநெல்வேலி பயணிகள் ரயில் (56004), நவம்பர் 26 முதல் 30-ந் தேதி வரை 5 நாட்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல திருநெல்வேலியில் இருந்து மாலை 4.30 மணிக்குப் புறப்படும் திருச்செந்தூர் பயணிகள் ரயில் (56003), நவம்பர் 26 முதல் 30-ந் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
எனவே தென் மாவட்டங்களில் இருந்து சென்னை, கோவை, மதுரை, ராமேஸ்வரம், திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு ரயிலில் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளவர்கள், மேற்கண்ட தேதிகளில் தங்களது ரயில்களின் இயக்க விவரங்களை முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக மதுரை, திண்டுக்கல் வழியாகப் பயணம் செய்யும் குருவாயூர்–தாம்பரம், நாகர்கோவில்- கோவை எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் மாற்றுப்பாதை அறிவிப்பைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.









