ஜெம் வீரமணி வழக்கு: மேலும் ஒருவர் கைது- பிரகாஷை இந்தியா கொண்டு வர நடவடிக்கை!

By Mathi

|

Published on 1 Nov 2026, 9:53 PM

Jem Veeramani Case-One More Arrest

சிறுமிகளை சீரழித்த ஜெம் வீரமணி வழக்கில் அவரது வீட்டு காவலாளி சீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற பிரகாஷை இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை இன்று (நவம்பர் 1) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

ADVERTISEMENT

சென்னை பெருநகர காவல்துறையின் விபச்சாரத் தடுப்புப் பிரிவில் சிறுமிகளிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டது தொடர்பான வழக்குகளில் ஜெம் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன், லாசர், கணேசன், பாபு, பார்த்திபன் மற்றும் சக்திவேல் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறுமிகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட 8 வழக்குகளில், 3 வழக்குகளில் ஜெம் வீரமணியும், மேலும் ஒரு வழக்கில் சாந்தி, மகேந்திர சிம்ஹன், லாசர் ஆகியோரும் அக்டோபர் 28-ந் தேதி முறையாகக் கைது (Formal Arrest) செய்யப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

ஏற்கெனவே ஜெம் வீரமணி மீது 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் குற்ற வழக்கு எண் 11/2026 தொடர்பாக, பாதிக்கப்பட்ட சிறுமி மூலம் குற்றம்சாட்டப்பட்ட நபரை அடையாளம் காண்பதற்கான அடையாள அணிவகுப்பு புழல் மத்திய சிறையில் நடைபெற்றது.

மேலும், இந்த வழக்குகள் தொடர்பாகக் கணேசனின் சென்னை கொளத்தூரில் உள்ள வீட்டிலும், நீலாங்கரையில் சாந்தி நடத்தி வந்த நாட்டியப் பள்ளியிலும் சோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது வழக்குகள் தொடர்பான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

ஜெம் வீரமணி மீதான வழக்குகளில் தொடர்புடையவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக லுக் அவுட் சுற்றறிக்கை (Look Out Circular – LOC) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜெம் வீரமணி தனது குற்றங்களை மறைக்க முயன்றபோது அவருக்கு உதவிய பிரகாஷ் என்பவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ளார். இதனால் அவரது பாஸ்போர்ட்டை முடக்கி, வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் விரைவாகப் புலன் விசாரணையை முடித்து நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சென்னை பெருநகர காவல்துறையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவலாளி கைது

இதனிடையே, ஜெம் வீரமணியின் வீட்டுக்குச் சிறுமிகளை அழைத்து வருவது தெரிந்தும் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்காமல் இருந்ததாக அவரது வீட்டு காவலாளி சீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் ஜெம் வீரமணி தொடர்பான பாலியல் வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel