டிஜிட்டல் திண்ணை: சிறுமிகளை சீரழித்த ‘ஜெம் வீரமணி’ சிக்கியது எப்படி? தலையிட்ட ‘தலைகள்’.. தப்ப விட்ட ‘கறுப்பு ஆடுகள்’? பரபர தகவல்கள்!

Published On:

| By Minnambalam Desk

Shocking Details of the Gem Veeramani POCSO Case

வைஃபை ஆன் செய்ததும், “ஆடிய ஆட்டம் என்ன.. தேடிய செல்வம் என்ன?”ன்னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னங்க ப்ரோ.. இவ்வளவு பழைய பாட்டு எல்லாம்..

ப்ரோ.. பழைய பாடலா? புதிய பாடலா? பட்டிமன்றம் எதுக்கு? சொல்லில் இருக்கும் விஷயம் ரொம்ப முக்கியம் இல்லையா? சொல்லப் போற விஷயமும் ரொம்ப முக்கியம்..

ADVERTISEMENT

”ஜெம்” வீரமணி.. இந்த பேருதான் நேத்தும் இன்னைக்கும் பரபரப்பாக பேசப்பட்டு வருது.. சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் ”ஜெம்” வீரமணி கைது செய்யப்பட்டிருக்கிறார்..

ஜெம் வீரமணி.. சாமானியர் அல்ல.. இந்தியாவிலேயே முதன் முதலாக கிரானைட் தொழிலை தொடங்கி கொடிகட்டிப் பறந்தவர். தமிழ்நாட்டின் மூத்த தொழிலதிபர்களில் ஒருவர்.. இப்ப 83 வயது.. ரூ2,000 கோடி சொத்துகளை வெச்சிருக்கிறவர்.

ADVERTISEMENT

முதலில் சட்டம் படிச்சுட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீலாக வாழ்க்கையை தொடங்கினார்.. 1971-லேயே கிரானைட் தொழிலை தொடங்கினார். அந்த கிரானைட் தொழில்தான் பின்னாளில் ‘ஜெம் கிரானைட்ஸ்’-ன்னு இந்தியா முழுவதும் பேசப்பட்டது. 1991-ல் இந்தியாவின் முன்னணி கிரானைட் ஏற்றுமதி நிறுவனமாக விஸ்வரூபம் எடுத்தது வீரமணியின் ஜெம் கிரானைட்ஸ். அதனால பெடரேசன் ஆப் இந்தியன் கிரானைட் மற்றும் ஸ்டோன் தொழிற்சாலைகள் அமைப்பின் நிறுவனர் தலைவர்- இந்தோ-அமெரிக்க வர்த்தக சபையின் தேசிய தலைவர்- இந்தோ-ஜப்பான் வர்த்தக சபையின் தலைவர்னு ஏகப்பட்ட பதவிகள் வகித்தவர். அவரது நிறுவனங்களில் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றிய காலமும் இருந்தது.

கடந்த 50 வருஷமாக கிரானைட் தொழிலில் உச்சம் தொட்ட ‘ஜெம்’ வீரமணி இப்ப போக்சோ வழக்கில் சிக்கி ஜெயிலுக்கு போயிருப்பது எல்லாருக்குமே அதிர்ச்சிதான்.

ADVERTISEMENT

இதை பத்தி போலீசார் வெளியிட்ட அறிக்கையில, “சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் கடந்த 06.10.2025 அன்று சென்னை பெருநகர காவல், விபச்சார தடுப்பு பிரிவு ஆய்வாளரை தொடர்பு கொண்டார். அந்த நபர், Pendrive ஒன்றை கொடுத்து அதில் பிரபல தொழிலதிபர் வீரமணி தனது கூட்டாளி சாந்தி என்பவரின் வீட்டில் உள்ள படுக்கையறையில் சிறுமி ஒருவருடன் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ள காட்சி பதிவாகியுள்ளதாக கூறிச் சென்றார்.

அந்த Pendrive-ல் பதிவாகியிருந்த வீடியோவை பார்த்த போது, வயதான ஒரு நபர் சிறுமி ஒருவருடன் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இப்புகாரின் அடிப்படையில் சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, விபச்சார தடுப்பு பிரிவில் 07.10.2025 அன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கின் புலன் விசாரணையில் அந்த Pendrive வீடியோவில் இருந்த நபர் பிரபல கிரணைட் தொழிலதிபர் வீரமணி என்பது தெரியவந்தது. இவர் தேனாம்பேட்டையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதை சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோரிடம் கொடுத்துள்ளார். அந்த வீட்டின் படுக்கை அறையில் பல சிறுமிகளை வரவழைத்து பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வீடுகள் மற்றும் அலுவலகங்களை சோதனையிட்ட போது, இச்சம்பவம் தொடர்புடைய மற்றும் வேறு சில சிறுமிகள் மற்றும் பெண்களின் புகைப்படங்கள் உள்ளிட்ட பல முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த குற்றங்களுக்கு உதவியாகவும், குற்றங்களை மூடி மறைக்க உதவியும் செய்த சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கன் மற்றும் முக்கிய குற்றவாளியான தொழிலதிபர் வீரமணி ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவல்துறைக்கு அனுப்பப்பட்டனர்”ன்னு சொல்லப்பட்டு இருந்தது.

பின்னணியில் அதிர்ச்சி தகவல்கள்

”ஜெம் வீரமணி”யின் இந்த மறுபக்கம் பற்றி நாம் அவருக்கு நெருக்கமான தொழிலதிபர்களிடம் விசாரித்த போது ஏகப்பட்ட அதிர்ச்சி தகவல்கள் கிடைச்சதுங்க ப்ரோ.. அதாவது, “கடந்த 2 ஆண்டுகளாக ஜெம் வீரமணி பற்றிய இந்த செய்தி பேசப்பட்டு வந்தது. அவர் அரெஸ்ட் ஆன உடனேதான் ஓஹோ.. கேள்விபட்ட செய்திகள் எல்லாம் உண்மைதான்னு பலருக்குமே தெரியுது.. அவரை பத்தி தெரிஞ்சவங்களுக்கும் தொழிலதிபர் வட்டாரங்களிலும் ரொம்பவே அதிர்ச்சியைதான் இது ஏற்படுத்தி இருக்கிறது.

போலீஸ் சொல்ற மாதிரிதான் பழைய சபையர் தியேட்டர் பக்கத்துல ஆயிரம் விளக்குல ஒரு ப்ளாட்டை எடுத்து சாந்தி, அவரோட கணவர் மகேந்திர சிம்கன்கிட்ட கொடுத்திருந்தார் ஜெம் வீரமணி. இந்த சாந்திதான், ஜெம் வீரமணிக்காக 13,14, 15 வயசு சின்ன பிள்ளைகளை ஏற்பாடு செஞ்சிருந்தது. அதுவும் தன்னோட ஒடுக்கப்பட்ட சமூகத்து சின்ன பிள்ளைகளைதான் இந்த கொடூரத்துக்கு சாந்தி ஏற்பாடு செஞ்சிருந்தார்.

ஒரு கட்டத்துல சாந்தியும் மகேந்திர சிம்கனும் வீரமணிகிட்ட பெரும் தொகை பணம் கேட்டிருக்காங்க.. அதை வீரமணி தர மறுத்துட்டாரு..

அந்த கோபத்துல, வீரமணி வந்து போற அந்த ப்ளாட்ல ஹாலிலும் பெட்ரூமிலும் சாந்தி தம்பதி கேமராவை செட் பண்ணிட்டாங்க.. அந்த கேமராவிலதான், வீரமணி சில மருந்துகளை தேய்ச்சுக்கிறதும்; சின்ன பிள்ளைகளை சீரழிக்கிறதுமான வீடியோ காட்சிகள் பதிவு செய்யப்பட்டு சிக்கி இருக்கு..

ரூ.50 கோடி பேரமும் கட்ட பஞ்சாயத்தும்

இதுக்கு அப்புறமா, இந்த வீடியோவை காண்பிச்சு, வீரமணிகிட்ட சாந்தி தம்பதி ரூ50 கோடி கேட்டு மிரட்டுனாங்க.. இதுக்கு ஜெம் வீரமணி மறுத்துட்டாரு.. இதுல பிரச்சனையாகிடுது..

இங்கிருந்து பிரச்சனை வேறமாதிரி டைவர்சனாகுது.. சாந்தி தம்பதி இந்த விவகாரத்தை காங்கிரஸுல இருந்த ரஞ்சன்கிட்ட கொண்டு போறாங்க.. இவர் காங்கிரஸ் நிர்வாகி.

சாந்தி தரப்புல ஜெம் வீரமணிகிட்ட ரஞ்சன் பேச்சுவார்த்தை நடத்தினாரு.. அந்த பேச்சுவார்த்தையில ரூ.5 கோடிதான் தர முடியும்னு ஜெம் வீரமணி சொன்னார்.. ஆனா சாந்தி தம்பதி இதை ஏத்துக்கலை..

இந்த நிலைமையில இந்த வீடியோவை ஒரு ஜேர்னலிஸ்ட் பார்க்க, அது அப்படியே வெளியே பரவலா பேசப்பட ஆரம்பிச்சது.. திடீர்னு இந்த பேச்சும் நின்னு போச்சு.

இதுக்கு இடையில ஜெம் வீரமணி, தென் மாவட்ட ஜாதி கட்சித் தலைவர்கிட்ட போய், “இந்த மாதிரி பிரச்சனை.. இவ்வளவு பணம் கேட்கிறாங்க.. இதுல நீங்க தலையிட்டு முடிச்சு கொடுங்க”ன்னு கேட்டார். அந்த தலைவரும் ரஞ்சன் கிட்ட பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தார்.. மிரட்டியும் கூட பார்த்தார்..

ஆனால் சாந்தி- மகேந்திர சிம்கன் தம்பதி ரூ.50 கோடி டிமாண்ட்ல இருந்து இறங்கி வரவே இல்லை.. அந்த ஜாதி கட்சித் தலைவரின் மிரட்டலுக்கும் அவங்க பயப்படலை..

போன திமுக கவர்மெண்ட்ல, இந்த விவகாரம் போலீசுக்கும் போயிருச்சு.. அதைத்தான் இப்ப போலீசும் ஸ்டேட்மெண்ட்ல சொல்லி இருக்காங்க.. போன திமுக ஆட்சியில நடவடிக்கை எடுக்கலை.. இந்த நிலைமையிலதான் இந்த கேஸை கையில் எடுத்த கமிஷனர் அமல்ராஜ், ‘ஜெம் வீரமணி’யை அரெஸ்ட் செய்ய சொல்லிட்டாரு.. நடக்க முடியாத நிலைமையில இருக்கிற ஜெம் வீரமணி, சாந்தி- அவரோட கணவர் மகேந்திர சிம்கன் மூணு பேரையுமே போலீஸ் இப்ப தூக்கி ஜெயில்ல போட்டிருக்கு”ன்னு சொல்றாங்க..

விடை தெரியாத கேள்விகள்

இதோட இந்த பிரச்சனை முடிஞ்சிருச்சான்னா, இல்லைன்னு சொல்றாங்க ப்ரோ.. போன திமுக ஆட்சியில எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு ஏன் ஜெம் வீரமணி மீது ஆக்‌ஷன் எடுக்கலை? அப்ப சென்னை போலீசில் விபச்சார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டரா இருந்தவங்க ராஜலட்சுமி.. அவங்க மூலமாக கமிஷனரா இருந்த அருண் ஐபிஎஸ்க்கு தகவல் தெரிஞ்சும் ஜெம் வீரமணி மேல நடவடிக்கை எடுக்காம இருந்தது ஏன்? அந்த டைம்ல இந்த கேஸில என்னதான் நடந்தது? உளவுத்துறை இந்த விவகாரத்தை சிஎம்மா இருந்த மு.க. ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு போச்சா? அப்படின்னு பல விடைதெரியாத கேள்விகள் வரிசையா நிக்குதுங்க ப்ரோ..

அமெரிக்காவின் தொழிலதிபரான எப்ஸ்டீன், சிறுமிகளை பலாத்காரம் செஞ்ச வழக்கு உலகம் முழுவதும் பேசப்பட்டது இல்லையா.. அதுமாதிரிதான் இப்ப இந்தியாவின் முன்னணி தொழிலதிபதிர் ஜெம் வீரமணி கேஸும் பேசப்படுதுங்க ப்ரோன்னு டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share