அமைச்சர் நிர்மல்குமார் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு வர விரும்புபவர் நான் என பேசியிருப்பது நகைச்சுவையாக உள்ளது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அவரது இருப்பை காட்டிக்கொள்வதற்கான தினமும் ஏதோ போசுகிறார். இன்னும் 6 மாதம் கழித்து எடப்பாடியே தேவை இல்லை. பொதுச்செயலாளர் பதவி வேண்டும் என்று கேட்பார் என அமைச்சர் நிர்மல் குமார் விமர்சித்திருந்தார்.
இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில், “அமைச்சர் நிர்மல்குமார் என்னை அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு வர விரும்புபவர் என பேசியிருப்பது மிகப்பெரிய நகைச்சுவையாக உள்ளது. அரசியல் முட்டாள் தனம் அவருக்கு அறிவு மழுங்கிப் போய்விட்டது.
சோதனையான நேரங்களில் எடப்பாடியாரின் வழியில் நிற்கிறோம் நீங்கள் ஆஃபர் கொடுத்தாலும் அதற்கு எந்த சலனமும் என்னிடம் இல்லை. இன்றைக்கு பல்வேறு சவால்களை தகர்த்தெறிந்து இயக்கத்திற்காக பல்வேறு தியாகம் செய்த எடப்பாடியாரை நாங்கள் கோவில் கட்டி கும்பிடுவோம்
அமைச்சர் நிர்மல்குமார் அவதூறு பிரச்சாரங்களை அள்ளி தெளிக்க வேண்டாம் இன்றைக்கு நீங்கள் தென் மாவட்டத்தில் அறிவிக்கப்படாத முதலமைச்சராக உள்ளீர்கள்
முதலமைச்சர் விஜய்யை வீட்டுக்கு அனுப்பிவிட்டு முதலமைச்சராக வருவாரா என்று நிர்மல்குமாரை கேட்டால் அது எப்படி நகைச்சுவையாக இருக்குமோ, அதுபோலத்தான் என்னை அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு வர விரும்புகிறார் என்று அவர் கூறுவது.
ஐந்து கட்சிகளை தாண்டி இன்றைக்கு விஜய் கட்சியில் சேர்ந்து உள்ளீர்கள், விஜய் கட்சி ஆட்சியிலிருந்து போய்விட்டால் நீங்கள் எந்த கட்சிக்கு போவீர்கள் . அதிகாரம் உள்ள கட்சியில் தான் நீங்கள் சேர்ந்தீர்கள் என்பது கடந்த கால வரலாறு.
நான் கிளைச் செயலாளர் மகன் அதிமுக மாணவர் அணி முதல் இளைஞரணி, அம்மா பேரவை நிர்வாகி, அமைச்சர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என படிப்படியாக வளர்ந்தேன். ஒரே கொள்கை, ஒரே லட்சியம், ஒரே கட்சி. எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரின் மறுவடிவமாக எடப்பாடியாரை கருதி தான் கட்சிப் பணியாற்றி வருகிறேன். “என தெரிவித்துள்ளார்.
