திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு Z பிரிவு பாதுகாப்பு தொடர வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி உள்ளது.
பாஜக நிர்வாகி ஆசீர்வாதம் ஆச்சாரி, “முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த Z பிரிவு பாதுகாப்பு தற்போது நீக்கப்பட்டு விட்டது என்று தகவல் கிடைக்கப்பெற்றேன். மத்திய அரசின் VIP செக்யூரிட்டி விதிகளின் படி நாட்டில் உள்ள அனைத்து முதல்வர்களுக்கும் Z+ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
அதிலும் குறிப்பாக பாதுகாப்பு அச்சுறுத்தல் கூடுதலாக உள்ள ஒரு சில முதல்வர்களுக்கு Z+ பிரிவுக்கும் கூடுதலாக சிறப்பு பாதுகாப்பும் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.
அதே சமயம், இந்த முதல்வர்களில் சிலர் தங்களது முதல்வர் பதவியை இழக்க நேரிடும் போதோ அல்லது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் போதோ, அவர்களது பாதுகாப்பு தொடர்பான security review செய்யப்பட்டு அதன் படி அவர்களுடைய Z+ பிரிவு குறைக்கப்பட்டு அந்தந்த மாநில காவல் துறையின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பு வழங்க ஆணை பிறப்பிக்கப்படுகிறது.
ஆனால், மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட Z+ பிரிவு பாதுகாப்பு அவர் 2021 ஆம் ஆண்டு முதலமைச்சர் பதவி ஏற்றபிறகு வழங்கப்படவில்லை. மாறாக, அவருக்கு 2006 ஆம் ஆண்டு முதல் Z பிரிவு பாதுகாப்பு மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் பின்னணி என்னவென்றால், 13.6.2006 அன்று மதுரை ரயில் நிலையத்தில் அவர் மீது ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்தார். அப்போது, அங்கே பணியில் இருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் காவலர் ஒருவர் சமயோசிதமாக செயல்பட்டதின் விளைவாக மு.க. ஸ்டாலின், இறைவன் அருளால் உயிர் தப்பினார். இந்த தகவல் அறிந்த உடனேயே, அப்பொழுது மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த திரு. ஆ. ராசா மூலம் அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், அப்போதைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டிலுக்கு கடிதம் எழுதப்பட்டு, மு.க. ஸ்டாலினுக்கு மத்திய ரிசர்வ் படையின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அந்தக் கடிதங்களை draft செய்தவன் நான் என்ற முறையில் இந்த தகவலை இங்கு பதிவிடுகிறேன்.
டாக்டர் கலைஞர் உத்தரவுப்படி, சம்பவம் நடந்த நாளுக்கு அடுத்த நாளே அமைச்சர் ஆ. ராசா, பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலை நேரில் சந்தித்து கடிதங்களை அளித்து, மு.க. ஸ்டாலினுக்கு மத்திய ரிசர்வ் படை பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங், இரண்டொரு நாட்களில் அதற்கான ஆணையை மத்திய உள்துறை அமைச்சர் மூலம் வெளியிட ஆவண செய்தார். அதன் படி மு.க. ஸ்டாலினுக்கு 2006 ஆம் வருடம் ஜூன் மாதத்தில் இருந்து மத்திய அரசால் Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, முதல்வர் பதவி என்பதற்கும் ஸ்டாலினுக்கு வழங்கப்படும் Z பிரிவு பாதுகாப்புக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. அவருடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி வழங்கப்பட்டு வந்த அதே Z பிரிவு பாதுகாப்பை இன்றும் தொடருவதற்கு தி.மு.க. தலைமை, மத்திய உள்துறை அமைச்சரை வலியுறுத்த வேண்டியது மிகவும் அவசியம்.
முன்னாள் அமைச்சர் திரு. ஆ. ராசாவால் எழுதப்பட்ட இந்த கடிதங்களின் நகல்கள் மற்றும் உள்துறையின் ஆணை அடங்கிய கோப்பினை, 31.10.2008 ஆம் தேதி நான் ஆ. ராசாவை விட்டு பிரிந்து எனது துறைக்கு திரும்ப சென்ற போது, அவரிடம் பத்திரமாக கொடுத்து விட்டே வந்தேன். இந்தக் கடிதங்களின் நகல்கள் அவரிடம் இன்று வரை பத்திரமாக இருக்கும் என்றே நம்புகிறேன்.
மு.க. ஸ்டாலின், தமிழகத்திற்கும், கழகத்திற்கும் ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் ஏராளம் இருக்கின்றன என்ற அடிப்படையில் அவர் நீண்ட ஆயுளுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும் என்பதே எனது அவா” என தெரிவித்துள்ளார்.
