முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு பாதுகாப்பு குறைப்பு!

Published On:

| By Kavi

முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. 

ADVERTISEMENT

இது மத்திய அரசு வழங்கும் மிக உயர்ந்த பாதுகாப்பு வகைகளில் ஒன்று. நாட்டின் குடியரசு தலைவர், பிரதமர், உச்சநீதிமன்ற நீதிபதி, மாநில முதல்வர்கள் மற்றும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுக்கு இந்த பாதுகாப்பு வழங்கப்படும். 

அதன்படி 36 பேர் கொண்ட பாதுகாப்பு குழு சுழற்சி முறையில் பாதுகாப்பில் இருக்கும். நவீன துப்பாக்கிகள், தகவல் தொழில்நுட்ப சாதனங்கள், குண்டு துளைக்காத வாகனங்கள் வழங்கப்படும். 

ADVERTISEMENT

இந்த நிலையில் ஆட்சி மாறியதும் முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிளஸ் பாதுகாப்பு இசட் பிரிவு பாதுகாப்பாக குறைக்கப்பட்டது. 

இந்த சூழலில் இசட்பிரிவு பாதுகாப்பும் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இனி அவருக்கு ஒரு எஸ்ஐ தலைமையில் தமிழக போலீசார் 4 பேர் மட்டுமே பாதுகாப்பு கொடுப்பார்கள். 

ADVERTISEMENT

இந்திய அரசியலில் முக்கிய தலைவராக இருக்கக்கூடிய திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாதுகாப்பு குறைக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகி இருக்கிறது. 

திமுக தலைவருக்கு பாதுகாப்பு குறைக்கப்பட்டது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள எஸ்டிபிஐ கட்சித் தலைவர் நெல்லை முபாரக் தனது எக்ஸ் பக்கத்தில், ”திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான. மு.க.ஸ்டாலினுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை குறைத்திருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது.

​ஒரு மாநிலத்தின் மிக முக்கிய அரசியல் தலைவராகவும், பிரதான எதிர்க்கட்சித் தலைவராகவும் மக்கள் பணியில் தொடர்ந்து தீவிரமாக இயங்கி வருபவர் மு.க.ஸ்டாலின். பொதுவெளியில் தினமும் ஆயிரக்கணக்கான மக்களைச் சந்திக்கும் இத்தகைய மக்கள் தலைவர்களின் பாதுகாப்பு என்பது சமரசத்திற்கு அப்பாற்பட்டது.

​சமகால அரசியல் சூழலில் தலைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது இன்றியமையாத தேவையாக உள்ள நிலையில், திடீரென பாதுகாப்பைக் குறைத்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதோ என்ற நியாயமான சந்தேகத்தை எழச் செய்கிறது.

​மக்கள் தலைவர்களின் பாதுகாப்பில் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளோ, உள்நோக்கங்களோ துளியும் தலைதூக்கக் கூடாது. மாற்றுக் கருத்துகள், அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பாற்பட்டு, மு.க.ஸ்டாலின் மக்கள் தொடர்பையும் முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு, அவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த அதே முழுமையான ‘Z+’ பாதுகாப்பைத் தாமதமின்றி மீண்டும் வழங்கிட வேண்டும்” என ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share