விசாரணைக்கு ஆஜராக முடியாதா? – துரை தயாநிதிக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள உத்தரவு!

Published On:

| By Kavi

துரை தயாநிதிக்கு மீண்டும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்ய மதுரை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மதுரை மாவட்டம் கீழவளவு பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் எடுத்து 259 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி மகன் துரை தயாநிதி உள்ளிட்டோர் மீது 2012 ஆம் ஆண்டு கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

ADVERTISEMENT

இந்த வழக்கின் படி துரை தயாநிதி மீது சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. 

இதற்கிடையே கடந்த 2023 ஆம் ஆண்டு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். 

ADVERTISEMENT

இந்த நிலையில் பண மோசடி வழக்கில் மூன்றாவது குற்றம் சாட்டப்பட்ட நபராக சேர்க்கப்பட்ட துரை தயாநிதி சார்பில், பக்கவாதம், ஞாபக மறதியால் விசாரணையை எதிர்கொள்ளும் நிலையில் இல்லை என்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. 

இந்த சூழலில் துரை தயாநிதி சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் பார்த்த வீடியோவும், தேர்தலில் வாக்களித்த வீடியோவும் வெளியானதாக சுட்டிக்காட்டி அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று அமலாக்கத் துறை தரப்பில் இன்று (ஆகஸ்ட் 29) மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 

ADVERTISEMENT

துரை தயாநிதி சார்பில், சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை வைத்து மீண்டும் மருத்துவ பரிசோதனைக்கு உத்தரவிட முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மதுரை சிபிஐ நீதிமன்ற நீதிபதி சண்முகவேல், கிரிக்கெட் போட்டியை நேரில் சென்று பார்ப்பதும் தேர்தலில் வாக்களிப்பதும் சாத்தியப்படும் போது விசாரணையை எதிர்கொள்வதில் என்ன தடை இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். 

தொடர்ந்து துரை தயாநிதிக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யவும் உத்தரவு பிறப்பித்தார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share