110 மாவட்டங்கள்.. ஸ்டாலின் அறிவிப்பு.. திண்டுக்கல் திமுகவில் குமுறல்?

Published On:

| By Minnambalam Desk

MK Stalin’s 110 Districts Announcement Sparks Discontent in Dindigul DMK

திமுகவின் 77 மாவட்டங்களை 110 மாவட்டங்களாக பிரித்து அக்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் (MK Stalin) நேற்று அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டது திமுகவினரிடையே அனல் பறக்க பல்வேறு விவாதங்களை கிளப்பிவிட்டிருக்கிறது.

சென்னையில் ஆகஸ்ட் 22-ந் தேதி நடைபெற்ற திமுக செயற்குழுவில், “திராவிட முன்னேற்றக் கழகம் எனும் நம் பேரியக்கத்தின் இரத்தநாளங்களாக விளங்குபவை மாவட்டக் கழகங்கள். தற்போதுள்ள மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கை இதுவரை 77 ஆக வைத்துள்ளோம்.

ADVERTISEMENT

வருவாய் மாவட்டங்களை அடிப்படை அலகாகக் கொண்டு இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற வகையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு பிரித்த பிறகு, ஒரு வருவாய் மாவட்டத்தில் ஒரு சட்டமன்றத் தொகுதி மட்டும் எஞ்சும் நிலை ஏற்பட்டால், அந்தத் தொகுதி அதே வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட பொருத்தமான கழக மாவட்டத்துடன் மூன்றாவது தொகுதியாக இணைக்கப்பட வேண்டும்.

கழகத்தின் நிர்வாகத்தில் வாய்ப்புகளை விரிவுபடுத்த மாவட்டக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 70 என நிர்ணயிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

அதேபோல், மாவட்டக் கழகச் செயலாளராகும் ஒருவர் அதிகபட்சமாக மூன்று முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும்.

இதனடிப்படையில், தற்போதுள்ள 77 மாவட்டக் கழகங்கள், 110-ஆக அதிகம் ஆகும். மாவட்டக் கழகங்கள் அதிகரிக்கின்ற காரணத்தால் மாநகரச் செயலாளர்கள் எனும் பொறுப்பின் தேவை எழவில்லை என்பதை இக்கூட்டம் கருத்தில் கொள்கிறது. அமையவுள்ள இந்த 110 மாவட்டக் கழகங்களில் இடம்பெறவுள்ள தொகுதிகளைக் கழகத் தலைவர் அவர்களே முடிவெடுத்து அறிவிக்க இந்தத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT

இந்த தீர்மானத்தின் அடிப்படையில் தற்போதைய 77 மா.செ.க்களில், 3 முறை மா.செ.க்களாக இருந்தவர்கள், 70 வயதைக் கடந்தவர்கள் என 25-க்கும் மேற்பட்டோர் இனி மா.செ.வாக முடியாத நிலை உருவாகி உள்ளது.

இந்நிலையில் நேற்று ஆகஸ்ட் 28-ந் தேதி திமுகவின் 110 மாவட்டங்களை அதிகாரப்பூர்வமாக மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 2 தொகுதிகளுக்கு 1 மாவட்ட செயலாளர் என 94 மாவட்டங்களும் 3 தொகுதிகளுக்கு 1 மாவட்ட செயலாளர் என 15 மாவட்டங்களும் அறிவிக்கப்பட்டன. சோழிங்கநல்லூர் மட்டும் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரான ஐ.பி. செந்தில்குமார் எம்.எல்.ஏ. தமது எக்ஸ் பக்கத்தில், “திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுவிற்குட்பட்ட திண்டுக்கல்,ஆத்தூர்,நிலக்கோட்டை,பழனி சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட மாவட்ட,மாநகர,ஒன்றிய,பகுதி,பேரூர் கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் இதுவரை உங்கள் உடன்பிறந்தவனாக எண்ணி எல்லாவகையிலும் ஒத்துழைப்பு வழங்கியமைக்கு என்றும் நன்றியுள்ளவனாய்” என பதிவிட்டார்.

திண்டுக்கல் எம்.எல்.ஏ. ஐ.பி.செந்தில்குமாரின் இந்த பதிவின் பின்னணி குறித்து அவருக்கு நெருக்கமானவர்களிடம் பேசிய போது, “திண்டுக்கல் மாவட்டத்தின் 7 தொகுதிகளில் திண்டுக்கல், பழனி, ஆத்தூர், நிலக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளுக்கு மா.செ.வாக 2014-ம் ஆண்டு முதல் ஐ.பி.செந்தில்குமார் இருந்து வருகிறார். 2014-15 மற்றும் 2022-23-ல் நடந்த உட்கட்சித் தேர்தல்களில் மா.செ.வாக செந்தில்குமார் தேர்வு பெற்றார். திமுக தலைமை தற்போது அறிவித்துள்ள 3 முறை மா.செ.வாக இருக்க வேண்டும் என்ற கேட்டகிரி ஐ.பி.செந்தில்குமாருக்கு பொருந்தாது.

அதேநேரத்தில் தமது மாவட்டத்தின் பழனி தொகுதி, திண்டுக்கல் மேற்கு மாவட்டத்துக்கு போயிருச்சு.. திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்துல இப்போதைக்கு நத்தம், திண்டுக்கல்னு 2 தொகுதிகள் மட்டும்தான் இருக்கு. எஞ்சிய ஆத்தூர், நிலக்கோட்டை தொகுதிகளை பிரிச்சு திண்டுக்கல் மத்திய மாவட்டம் உருவாக்கப்பட்டிருக்கு.

12 வருஷமாக 2 முறை மா.செ.வாக 4 தொகுதிகளை தம் வசம் வைத்திருந்த ஐ.பி.செந்தில்குமாருக்கு இனி 2 தொகுதிதான்னு அறிவிச்சாச்சு.. ஆனா திண்டுக்கல் மேற்கு மாவட்டத்துல எந்த ஒரு தொகுதியும் குறைக்காமல் 3 தொகுதிகள் இருக்கிற மாதிரியே அறிவிப்பு வந்திருக்கு.. அப்படிங்கும் போது வருத்தம் இருக்கத்தானே செய்யும்.. இருந்தாலும் ஒரு மா.செ.வாக பழனி, ஆத்தூர், நிலக்கோட்டை தொகுதிகளைச் சேர்ந்த கட்சியினருக்கு நன்றி தெரிவிச்சுதான் அந்த பதிவு போட்டுள்ளார் ஐபி செந்தில்குமார்” என்கின்றனர்.

திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் முன்னாள் அமைச்சரும் சிட்டிங் எம்.எல்.ஏ.வுமான சக்கரபாணி. அவரது ஆதரவாளர்களிடம் 110 மாவட்ட அறிவிப்பு பற்றி கேட்ட போது, “1998-ல் திண்டுக்கல் மாவட்டம் முதல் முறையாக கிழக்கு, மேற்கு என பிரிச்சாங்க.. அப்ப மேற்கு மாவட்ட செயலாளராக முதல் முறையாக சக்கரபாணி இருந்தாரு.. 2006-2007-ல் திண்டுக்கல் மாவட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுச்சு.. அப்ப ஐ.பெரியசாமி ஒருங்கிணைந்த மா.செ.வா இருந்தார்.

ஆனால் 2014-15-ல் திண்டுக்கல் மாவட்டம் மீண்டும் 2 ஆக பிரிக்கப்பட மீண்டும் திண்டுக்கல் மேற்கு மா.செ.வானார் சக்கரபாணி. 2022-23ல் நடந்த உட்கட்சித் தேர்தலில் மீண்டும் மா.செ.வானார் சக்கரபாணி. மொத்தம் 3 முறை மா.செ.வா சக்கரபாணி இருந்துட்டாரு.. தற்போதைய கட்சி விதிகளின்படி இனி மா.செ.வாக சக்கரபாணி இருக்க முடியாது.. அவருக்கு பதிலாக புதியவரைத்தான் தேர்ந்தெடுப்பாங்க..

அதேநேரத்துல திண்டுக்கல் மேற்கு மாவட்டத்துல இப்பவும் 3 தொகுதிகள்னு அறிவிக்கப்பட்டிருக்கு.. இதுல வேடசந்தூர் தொகுதியை தொடர்ந்து மேற்கு மாவட்டத்துல சேர்த்ததுல கொஞ்சம் குமுறல் வருது.. திண்டுக்கல், வேடசந்தூர், நத்தம் தொகுதிகள்னு திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் அமையும்னு எதிர்பார்த்தாங்க.. ஆனா மறுபடியும் மேற்கு மாவட்டத்திலேயே வேடசந்தூர் சேர்க்கப்பட்டதால அவங்க இந்த குமுறலை வெளிப்படுத்துறாங்க” என்றனர்.

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share