முதல்வர் விஜய் அரசின் ”பிற்படுத்தப்பட்டோர் மானிய கோரிக்கை-கொள்கை குறிப்பேட்டில்” இடம்பெற்ற இட ஒதுக்கீடு வரலாற்று குறிப்பில் தந்தை பெரியார் , புரட்சியாளர் அம்பேத்கர், பண்டித ஜவகர்லால் நேரு பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதற்கு தவெக ஆட்சிக்கு ஆதரவு தரும் விசிக-ன் பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சிந்தனை செல்வன் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: சட்டப்பேரவையில் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, ஒவ்வொரு துறையும் தமது மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்காக அந்தத்த துறையின் கொள்கை விளக்கக் குறிப்பை வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் மானியக் கோரிக்கைக்கான கொள்கை விளக்கக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தக் கொள்கை விளக்கக் குறிப்பில் இடம்பெறும் “இடஒதுக்கீட்டின் வரலாறு” என்ற பகுதியில், கடந்த ஆண்டுகளில் தமிழ்நாட்டின் சமூகநீதி மற்றும் இடஒதுக்கீட்டு வரலாற்றை விளக்கும்போது, தந்தை பெரியார், புரட்சியாளர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மற்றும் பண்டித ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பங்களிப்புகள் சுருக்கமாகப் பதிவு செய்யப்பட்டிருப்பது வழக்கம்.

ஆனால், இந்த ஆண்டு வெளியிடப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் அந்த வரலாற்றுப் பகுதியில் தந்தை பெரியார், புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் மற்றும் பண்டித ஜவஹர்லால் நேரு ஆகிய மூவரின் பெயர்களும் இடம்பெறவில்லை என்பது பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்துகிறது.
கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசின் கொள்கைக்குறிப்பேட்டில் ….பக்கம் 9
”1951-இல் இட ஒதுக்கீடு தொடர்பாக வெளியிடப்பட்டிருந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணை உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. இதனை எதிர்த்து தந்தை பெரியார் அவர்கள் தமிழ்நாட்டில் வழி நடத்திய எதிர்ப்பு ஊர்வலங்கள் மற்றும் கண்டனக் கூட்டங்களின் விளைவாக அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தத்தில் பிரிவு 15(4) சேர்க்கப்பட காரணமாக அமைந்தது. பாரதப்பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு மற்றும் சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோர் முன்னெடுத்து இந்த முதல் அரசமைப்புச் சட்டத் திருத்தத்திற்கு வழி வகுத்தனர். இந்த திருத்தம் சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்திற்கான விதிகளையும் இயற்ற வழிவகுத்தது” இதுதான் அந்த சுருக்கமான பத்தி.
ஆனால் புதிய அரசின் (விஜய் அரசின்) பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானிய கோரிக்கையை ஆசை ஆசையாய் வாசித்த போது அதிர்ந்து போனேன்.
அதில் இடம்பெற்ற இட ஒதுக்கீடு வரலாற்று குறிப்பில் தந்தைப்பெரியார் , புரட்சியாளர் அம்பேத்கர், பண்டித ஜவகர்லால் நேரு ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. நீதிகட்சியின் பெயரும் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த இருட்டடிப்பை கண்டு பெரும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளேன்.
கடந்த ஆண்டுகளில் இடம்பெற்றிருந்த வரலாற்றுச் செய்திகளை இந்த ஆண்டு அடியோடு மறைக்க அல்லது நீக்க காரணம் என்ன?
இதை மாண்புமிகு அமைச்சர் பெருமக்களின் குற்றமாக என்னால் கருத முடியவில்லை. அவர்கள் புதிதாக பொறுப்பேற்றவர்கள். துறையின் அரசு செயலாளரும் அவரை வழிநடத்தும் அரசு தலைமை செயலாளருமே இதற்கு பொறுப்பாவார்கள் என்பதை நான் நன்கறிவேன்.
கொள்கை குறிப்பில் பெரும்பாலும் திருத்தங்களை புதிய அரசுகள் மேற் கொள்வதில்லை. அது அப்படியே தொடரும். நலத்திட்டங்கள்தான் திருத்தப்படும் அல்லது சில தருணங்களில் நீக்கப்பட்டு புதியன சேர்க்கப்படும்.
ஆனால் கொள்கை குறிப்பேட்டை அரசு தலைமைச் செயலாளரின் வழிகாட்டல் இன்றி மாற்றி இருக்க முடியாது.
சில அதிகாரிகளின் அடாவடிதனம் கடந்த திமுக ஆட்சிக்கு பல நேர்வுகளில் கெட்ட பெயரை வாங்கி கொடுத்ததை தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தோழர் வேல்முருகன் சட்டமன்றத்தில் பலமுறை எச்சரிக்கையாக பேசியிருப்பதை நினைவூட்டிட கடமை பட்டுள்ளேன்.
வரலாற்றை அரசியல் வசதிக்கேற்ப எழுதவோ, அழிக்கவோ முடியாது.
சமூகநீதி பயணம் என்பது ஒரு அரசின் அல்லது ஒரு கட்சியின் சாதனைப் பட்டியல் அல்ல. அது பல தலைமுறைகளின் போராட்டத்தின் வரலாறு. அந்த வரலாற்றை முழுமையாகவும் உண்மையாகவும் பதிவு செய்வது அரசின் கடமை.
தமிழக முதல்வர் விஜய், உடனே இதை சரி செய்திட வேண்டும். இந்த வரலாற்று இருட்டடிப்பிற்கு காரணமானவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென நம்பிக்கையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
அரசு தலைமை செயலாளரும் தொடர்புடைய துறையின் அரசு செயலாளரும் சுய விளக்கத்துடன் மன்னிப்பு கோர வேண்டும். வரலாற்றை இருட்டடிப்பு செய்வதை விட பெரிய வன்கொடுமை வேறெதும் இருக்க முடியாது. இவ்வாறு சிந்தனை செல்வன் கூறியுள்ளார்.
