எம்.எல்.ஏ.க்கள் பெயருக்கு பக்கத்தில் ‘தனித் தொகுதி’ என குறிப்பிடுவதை ரத்து செய்து முதல்வர் விஜய் உத்தரவிட வேண்டும் என்று விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று பேசிய தவெக எம்.எல்.ஏ, சிந்து, “ எனக்கு வருகிற கடிதங்களில் கூட பிராக்கெட்டில் ‘தனித் தொகுதி’ என வருகிறது.. தனி என்பது டிஸ்கிரிமினேஷன், பனிஷ்மெண்ட் மாதிரி ஏதோ ஒரு வகையில் குறிக்கிறது. ரிசர்வேசனுக்கு நேரடியான அர்த்தம் தனி கிடையாது. தனி என்ற சொல்லை நீக்கி, சிறப்பு அல்லது உரிமை என மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
இது தொடர்பாக விசிக எம்.பி. ரவிக்குமார், “இந்தப் பிரச்சினையை எழுப்பிய மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினருக்குப் பாராட்டுகள். நாடாளுமன்றத்தில் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடும் முறை இருந்தபோது அதில் ப்ராக்கெட்டில் ரிசர்வ்டு எனக் குறிக்கப்பட்டிருந்தது. அதை நீக்க வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தேன் அதன் பின்னர் அது நீக்கப்பட்டது.
எம்.பியோ எம்.எல்.ஏ வோ ரிசர்வ்டு தொகுதி என்பது தேர்தல் நேரத்தில் மட்டுமே குறிக்கப்பட வேண்டியுள்ளது. மற்ற நேரங்களில் அதைக் குறிக்க வேண்டிய தேவை இல்லை. எனவே எல்லா தொகுதிகளையும்போல அதையும் பெயரை மட்டும் குறிப்பிட வேண்டும். எல்லா நேரத்திலும் அந்தத் தொகுதியின் பெயரோடு ப்ராக்கெட்டில் எதையும் குறிக்க வேண்டிய அவசியமில்லை. தேர்தல் அல்லாத நேரங்களில் ஒருவர் பொதுத் தொகுதியின் பிரதிநிதியா அல்லது தனித் தொகுதியின் பிரதிநிதியா என்பதை அடையாளப்படுத்த வேண்டும் என்ற தேவை கிடையாது. எனவே ப்ராக்கெட்டில் எதையும் குறிப்பிடாமல் இருப்பதே சரி. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், இதைப் பரிசீலித்து தொகுதியின் பெயரை மட்டுமே குறிப்பிட வேண்டும் ப்ராக்கெட்டில் வேறு எதையும் குறிப்பிட வேண்டாம் என உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
