தமிழக முதல்வர் விஜய் இன்று (ஆகஸ்ட் 28) புழல் மத்திய சிறைச்சாலைக்கு நேரில் சென்று சிறைவாசிகளுக்கான அடிப்படை வசதிகளை ஆய்வுசெய்து, சிறைவாசிகளிடம் தேவைகள் குறித்துக் கேட்டறிந்தனர்.

புழல் மத்திய சிறைச்சாலையானது இந்தியாவின் மிகப்பெரிய சிறை வளாகங்களில் ஒன்று. இந்த சிறைக்கு சென்ற முதல்வர் ஜோசப் விஜய் சிறைவாசிகளுக்கான அடிப்படை வசதிகள், அவர்களுக்கு வழங்கப்படும் உணவு, மருத்துவ வசதிகள், சிறைவாசிகளுக்கான தொழிற்கூடம் ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அத்துடன் சிறைவாசிகளிடம் அவர்களது தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
புழல் மத்திய சிறை-1ல் அமைந்துள்ள தொற்றுத் தடை காப்புப் பகுதி, பார்வையாளர்கள் அறை, மருத்துவமனை, போதை ஒழிப்பு மறுவாழ்வு மையம், மகாத்மா காந்தி சமுதாயக் கல்லூரியிலுள்ள வகுப்பறை, நூலகம் மற்றும் மேம்பட்ட கணினி பயிற்சி மையம், உயர் பாதுகாப்பு தொகுதி, தூக்கு மேடைப் பகுதி ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சிறைவாசிகளுக்கான தொழிற்கூடத்திற்கு நேரில் சென்று, அங்கு தயாரிக்கப்படும் காய்கறி வைப்பதற்கான இரும்பு அடுக்குச் சட்டங்கள், காகித உறைகள், அலுவலகக் கோப்பு அட்டைகள் போன்றவற்றையும், விசைத்தறிக் கூடத்தில் தயாரிக்கப்பட்ட போர்வை போன்ற பல்வேறு பொருட்கள் மற்றும் தையற்பிரிவு ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வுசெய்ததோடும், சிறைவாசிகளுக்கு வழங்கப்பட்ட உணவின் தரத்தை ஆய்வுசெய்து, சிறைவாசிகளிடம் அவர்களின் தேவைகள் குறித்துக் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து, M-3 புழல் காவல் நிலையத்திற்கு முதல்வர் விஜய் நேரில் சென்று, காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து காவல் ஆய்வாளரிடம் கேட்டறிந்து, பதிவேடுகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காவல் உதவி ஆய்வாளர் அறை, கணினி அறை, கைதி அறை ஆகியவற்றையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை இயக்குநர் / காவல்துறை இயக்குநர் டாக்டர் சந்தீப் ராய் ராத்தோர், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் துறையின் சென்னை சரகத் துணைத் தலைவர் முனைவர் த.பழனி, கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
