முத்துராமலிங்க தேவர் பீடம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – வானதி கண்டனம்

Published On:

| By Pandeeswari Gurusamy

நெல்லை தச்சநல்லூர் அருகே உள்ள ஊருடையான்குடியிருப்பு நயினார்குளம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த முத்துராமலிங்க தேவர் படம் வைக்கப்பட்டிருக்கும் பீடத்தின் அருகே, இரவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை தச்சநல்லூர் அருகே உள்ளது ஊருடையான்குடியிருப்பு நயினார்குளம் பகுதி. அங்கு முத்துராமலிங்க தேவர் புகைப்படம் வைக்கப்பட்ட பீடம் உள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு மர்ம நபர்கள் இந்த பீடத்தின் அருகே பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். இதில் அந்த குண்டு பீடத்தின் சுவர் மீது விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், இப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இரு வாலிபர்கள் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதும், அவர்கள் பெட்ரோல் குண்டு வீசியதும் தெரியவந்தது. சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து அவர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த ஆகாஷ், சந்தனகுமார் என்பதும் தெரியவந்தது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து, பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்ட இரண்டு பேரையும் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், கோவில் சம்பந்தமான ஊர்ப் பிரச்சினை காரணமாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தப் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து, பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பதிவில், “திருநெல்வேலி தச்சநல்லூர் ஊருடையான்குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத்தேவர் பீடத்தின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாகக் கூறப்படும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. மக்களிடையே பிரிவினைவாதத்தைத் தூண்டும் தேச விரோத சக்திகளின் இச்செயல் கடும் கண்டனத்திற்குரியது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட காவல்துறையைக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share