என்னுடைய கணிப்பின் படி, தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் எழுதியிருக்க முடியாது என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
2021-2026 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் நிதித்துறை அமைச்சராக இருந்து பின்னர் தகவல் தொழில்நுட்ப துறைக்கு அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டவர் பழனிவேல் தியாகராஜன்.
தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு தற்காலிகமாக அரசியலில் இருந்து விலகி இருப்பதாக அறிவித்தார்.
இந்தசூழலில் இன்று (ஆகஸ்ட் 28) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளார்களைச் சந்தித்த அவர் 2026-27ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் குறித்து பேட்டியளித்தார்.
அவர் கூறுகையில், ”என்னுடைய கணிப்பின்படி, பட்ஜெட்டை இந்த நிதியமைச்சர் எழுதியிருக்க முடியாது.
இந்த மானிய கோரிக்கையில் என்ன செய்கிறார்கள் என்றால்,’நான் அவையில் படித்ததாக எடுத்துக்கொண்டு விவாதத்தை ஆரம்பியுங்கள் என்று சொல்கிறார்கள். பட்ஜெட் தாக்கலை பொறுத்தவரை அதற்கு இரண்டு, மூன்று மணி நேரம் ஆகும். உறுதியாக சொல்கிறேன் பல நிதியமைச்சர்கள் பட்ஜெட்டை அவர்களாக எழுதவில்லை. இதை தவறாக நினைத்துக்கொள்ளாதீர்கள்.
நான் ஆங்கிலத்தில் பட்ஜெட்டை எழுதுவேன். அதை யாராவது தமிழாக்கம் செய்து கொடுப்பார்கள். அதை இரண்டு, மூன்று முறை நான் படித்து பார்ப்பேன். இரண்டு, மூன்று மணி நேரம் ஒரு டாக்குமெண்ட்டை படிப்பதும் கஷ்டம் தான்.
ஆனால் நான் 99 சதவிகிதம் பேப்பர் இல்லாமல் தான் பேசுவேன். புள்ளி விவரம் கூட மனதில் இருக்கும். 2 மணி நேரம் பேச வேண்டுமென்றால், நம்பர்களை மட்டும் குறித்து வைத்துவிட்டு பேசலாம். அது இயற்கையாக மக்களுக்கு கேட்கும் வகையில் இருக்கும்.
எனவே 2 மணி நேரம் பிரிண்ட் செய்த பேப்பரை பார்த்து படித்தால், எந்த பயனும் கிடையாது. அதை இணையத்தில் போட்டுவிடலாம் .
இப்படி நீண்ட நேரம் படிப்பது தேவையா என்பதை யோசிக்க வேண்டும். என்னுடைய கணிப்பில் இந்த பட்ஜெட்டை இந்த நிதியமைச்சர் எழுதியிருக்க முடியாது. யாரோ எழுதி கொடுத்ததை அவர் படித்ததால் தான் கஷ்டம் வருகிறது. பட்ஜெட் வாசிக்கும் முறையை மாற்றலாமா என்பதை சிந்திக்க வேண்டும்” என்று கூறினார்.
