சட்டமன்றதில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று திமுக எம்எல்ஏ மார்கண்டேயன் தேர்தல் வாக்குறுதி படி விவசாயிகளின் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படவில்லை; மீனவ சமுதாயத்திற்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட 20,000 ரூபாய் நிவாரணத்தொகையும் கொடுக்கப்படவில்லை. ‘நான் வந்தால் அடுத்த நிமிடமே மீனவ சமுதாய மக்களின் பிரதிநிதியாக எனது முதல் கையெழுத்து அதுவாகத்தான் இருக்கும்’ என்று சொன்னார்கள், ஆனால் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்கப்படும் என்ற அறிவித்துள்ளார்.” என்று பேசினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “எப்படி இந்த அவையில் கார் குறித்தான அறிவிப்பு வெளியானது என்பது எல்லோருக்கும் தெரியும். விசிக உறுப்பினர் விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து, முதல்வர் கனிவாகப் பரிசீலித்தே காரை அறிவித்தார். நாங்கள் எல்லா தொகுதிக்கும் செல்கிறோம். பல உறுப்பினர்கள் ‘நாங்கள் ஐந்து கார் வைத்திருக்கிறோம், பத்து கார் வைத்திருக்கிறோம்’ என்றனர். அது பிரச்சனை இல்லை; தொகுதியில் சென்று சுற்றிப் பார்க்க வேண்டும். கடந்த வாரம் நான் ஒரு கிராமத்திற்குச் சென்றபோது, ‘இதுவரை சட்டமன்ற உறுப்பினரே எங்கள் கிராமத்திற்கு வந்ததில்லை’ என்கிறார்கள். நீங்கள் ஐந்து கார், பத்து கார் வைத்திருப்பது பிரச்சனை இல்லை; சட்டமன்ற உறுப்பினர் மக்கள் பணியைச் செய்ய ஒரு வாகனம் தேவை. தாசில்தார் லெவலில் இருந்து எல்லோருக்கும் வாகனம் இருக்கும்போது, சட்டமன்ற உறுப்பினர்களின் தேவையை அறிந்து, சட்டபூர்வமாக மக்களின் குறைகளைக் கேட்டு அவையில் வந்து தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே முதல்வர் வாகனத்தை வழங்கி உள்ளார். நீங்கள் இது குறித்து மீண்டும் மீண்டும் விவாதத்தை கொண்டு வருகிறீர்கள். நீங்கள் உங்கள் தொகுதிகளில் விரிவாகச் சென்று பாருங்கள், நான் செல்லும் கிராமங்களில் யாரும் எம்.எல்.ஏ வந்ததே இல்லை என்கிறார்கள். ஐந்து, ஆறு கார்கள் வைத்திருந்து என்ன பிரயோஜனம்? இது போன்ற தேவையற்ற விஷயங்களை மீண்டும் மீண்டும் விவாதப் பொருளாக்குகிறார்கள்” என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் அருண் ராஜ், “இந்த விவாதம் ஆரோக்கியமான முறையில் நடக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இதற்கு முன்பு பேசிய உறுப்பினர், ‘வாயில் வடை சுடுகிறோம்’ என்றார். யார் வாயில் வடை சுடுகிறார்கள் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும்; மக்கள் யாருக்கு தீர்ப்பு வழங்கினார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும். நாம் ஆட்சிக்கு வந்து வெறும் 100 நாட்கள்தான் ஆகிறது. தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த திட்டங்களை நிறைவேற்ற முடியுமா என்று கேட்பவர்களுக்கு எல்லாம் 110 விதியின் கீழ் முதல்வர் ஒவ்வொரு திட்டமாக அறிவித்து வருகிறார். பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம் திட்டமாக இருக்கட்டும், கேஸ் சிலிண்டர் மானியமாக இருக்கட்டும், அனைத்தையும் செய்து கொண்டுதான் இருக்கிறோம். ‘கொள்கை விளக்க அறிக்கையைப் படித்துப் பார்த்தேன், எதுவும் புதிதாக இல்லை’ என்கிறீர்கள். ஆட்சி அதிகாரம் என்பது நீதிக்கட்சி காலத்திலும் காமராஜர் காலத்திலும் கொண்டு வந்த திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு தொடர்வதுதான். என்ன மாற்றம் என்கிறார்கள்? ஆட்சிக்கு வந்த பிறகு வீடு கட்டும் உரிமையாக இருக்கட்டும், கட்டிடம் கட்டும் உரிமையாக இருக்கட்டும், நேர்மையான முறையில் அனுமதி கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். இதுதான் மாற்றம். இந்த மாற்றங்களை நாங்கள் செய்து கொண்டுதான் இருக்கிறோம். நீங்கள் மாற்றம் இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள்?” என்றார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய திமுக எம்.எல்.ஏ கே.என். நேரு, “வாயில் வடை சுடுகிறோம் என்று நாங்கள் சொல்லவில்லை, நீங்கள்தான் சொன்னீர்கள்; நீங்கள் சொன்னதைத்தான் அவர் சொன்னார். சட்டத்துறை அமைச்சர், திமுக உறுப்பினர்களை கிராமங்களுக்குப் போகவில்லை என்று சொல்லாதீர்கள். ஒரே தொகுதியில் மூன்று முறை வெற்றி பெற்றவர் மக்கள் நன்மதிப்பைப் பெற்றுள்ளார், அதுதான் முக்கியம்” என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பணிகளை ஆற்ற அரசின் சார்பில் வாகனம் வழங்கும்போது அதற்கு தனி மரியாதை உள்ளது. நீங்கள் எத்தனை கோடியில் கார் வைத்திருந்தாலும், அரசின் வாகனங்களில் செல்லும்போது அதற்கு தனி மரியாதை உண்டு. ஆனால், எங்களைப் பற்றி சொல்லும்போது, கார் பந்தயத்திற்கே 24 கோடி ரூபாய் செலவு செய்தீர்களே, அதெல்லாம் யார் அப்பா காசு?” என்றார்.
இதற்குப் பதிலளித்த கே.என். நேரு, “நீங்கள் கூடத்தான் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தீர்கள்; 10 கோடி ரூபாயை வாங்கி ஒன்றுமே செய்யாமல் நிறுத்திவிட்டீர்கள், யாருக்கும் பதக்கம் கொடுக்கவில்லை, நீங்கள் செய்யவே இல்லை. அதற்காக உங்களைப் போலவே நாங்கள் இருக்க வேண்டுமா?” என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள். கார் பந்தயத்திற்கு நீங்கள் செலவு செய்தீர்களா இல்லையா என்று சொல்லுங்கள்” என்றார்.
இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது பேசிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், “இந்த கார் பிரச்சனை பற்றி தயவுசெய்து ஒரு முடிவுக்கு வாருங்கள். சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தனது இயலாமை மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து, மற்றவர்களுக்கும் அதே சிரமம் இருக்குமோ என்று கருதி ஒரு கோரிக்கை வைத்தார். முதல்வர் உடனடியாக எல்லோருக்கும் உதவ வேண்டும் என்ற அடிப்படையில் கார் திட்டத்தை அறிவித்தார். திமுகவைப் பொறுத்தவரை, எங்களுக்கு வசதி வாய்ப்புகள் இருக்கிறது, மற்ற பிரச்சனைகளில் கவனம் செலுத்துங்கள், இது தேவையில்லை என்று சொன்னால் அதில் தடை ஏதும் இல்லை. ‘அந்த வாய்ப்பு எங்களுக்கு ஏற்கனவே இருக்கிறது’ என்று சொன்னால், கார் தேவையில்லை என்று சொல்லலாம். ஆனால், இந்த கார் பிரச்சனையைப் பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒரு உறுப்பினரின் உள்ளடக்கத்தைப் புரிந்து கொண்டு, பல்வேறு சிரமங்களில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் உறுதியாக அதனைப் பயன்படுத்திக் கொள்ளட்டும். ‘எனக்கு பத்து கார் இருக்கிறது, எனக்குத் தேவையில்லை’ என்பதெல்லாம் இங்கு வந்து பதிவு செய்ய வேண்டிய செய்தி அல்ல. அரசு கார் அறிவிப்பு என்பதற்காக அந்த மானியத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எது தேவையோ அது உரிய நேரத்தில் அளிக்கப்படுகிறது. விரைவாக தொகுதிகளுக்குச் சென்று தங்கள் பணிகளை ஆற்றுவதற்கு ஏதுவாக இந்த வாகனம் இருக்கும் என்ற முதல்வரின் அறிவிப்பை வரவேற்று, அத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இதை ஒரு பிரச்சனையாக்கி ஏன் கொடுக்கவில்லை என்று கேட்பதில் எனக்கு உடன்பாடு இல்லை” என்றார்.
