ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது என அமைச்சர் வெங்கட்ரமணம் தெரிவித்துள்ளார்.
விலைவாசி உயர்வு குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 28) பேசினார். அப்போது, “அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே இருக்கிறது. அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை என எந்தப் பொருளை எடுத்தாலும் கடந்த ஆறு மாதங்களில் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். இந்த அரசு அமைந்ததிலிருந்து அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது.
மே மாதம் ஒரு கிலோ அரிசி 55 ரூபாயாக இருந்த நிலையில் இன்றைக்கு 75 ரூபாயாகவும், மே மாதம் ஒரு கிலோ வெங்காயம் 40 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 80 ரூபாயாகவும், மே மாதம் ஒரு கிலோ துவரம் பருப்பு 150 ரூபாய்க்கு இருந்த நிலையில் இன்றைக்கு 180 ரூபாயாகவும், மே மாதம் ஒரு கிலோ சர்க்கரை 40 ரூபாய்க்கு இருந்த நிலையில் இன்று 80 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. பொதுமக்கள் இதனால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்; இதனால் மளிகை கடைக்குப் பக்கம் செல்வதையே குறைத்து வருகின்றனர் என்ற செய்திகள் வெளியாகி உள்ளன. ஆளும் கட்சியின் கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் இயக்கங்கள் இதைக் கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளன. விலைவாசி உயர்வைக்கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உதாரணமாக, 2007 ஆம் ஆண்டு தேசிய அளவில் கடுமையான விலை உயர்வு ஏற்பட்டது. அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர், தமிழ்நாடு மக்கள் பாதிக்கப்படாமல் இருக்கப் பொது விநியோகத் திட்டத்தை அறிவித்தார். அதன் மூலம் பருப்பு, எண்ணெய், ரவை உள்ளிட்ட பொருட்களைச் சந்தை விலையை விட மிகக் குறைந்த விலையில் வழங்கினர். கடுகு, சீரகம், வெந்தயம் உள்ளிட்ட 10 மளிகை பொருட்களை 50 ரூபாய்க்கு வழங்கினார். கலைஞர் தொடங்கி வைத்த அந்தத் திட்டம் தற்போது வரை நடந்து வருகிறது. மேலும் ரேஷன் கடைகளில் சர்க்கரை மற்றும் அத்தியாவசிய பொருட்களை தற்போது வழங்கும் அளவை விட கூடுதலாக வழங்க வேண்டும்; அதற்கு இந்த அரசு ஆவணம் செய்ய வேண்டும். முதலமைச்சர் தலைமையில் நிதி, உணவு, கூட்டுறவு அமைச்சர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் பங்கேற்கும் வகையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தி, விலைவாசி உயர்வு பிரச்சனைக்கு இந்த அரசு உடனடியாக நல்ல தீர்வை காண வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “அரிசி விலை கிலோவுக்கு உயர்ந்துள்ளது. சர்க்கரை கிலோ 48 ரூபாயிலிருந்து 72 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. மஞ்சள்தூள் விலை கிலோ 200 ரூபாயில் இருந்து 250 ரூபாயாக உயர்ந்துள்ளது. மிளகாய் 200 ரூபாயில் இருந்து 300 ரூபாய்க்குத் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. வெல்லம் 58 ரூபாயிலிருந்து தற்போது 85 ரூபாயாக உயர்ந்துள்ளது. புளி, பருப்பு விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன. எண்ணெய் விலை 40 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வறட்சி நிலவுவதால் ஆந்திராவில் இருந்து வரும் அரிசி வரத்தும் குறைந்துள்ளது. அதிமுக அரசு இருந்தபோது விலை ஏற்றத்தின் போது எந்தப் பொருள் விலை ஏறுகிறதோ, அந்தப் பொருள் எந்த மாநிலத்தில் எங்கு குறைவாக இருக்குமோ அங்கிருந்து இறக்குமதி செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்து விற்கப்பட்டது. இதனால் விலைவாசியைக் கட்டுக்குள் வைத்திருந்தோம். எனவே, இந்த அரசும் விலைவாசியைக் கட்டுப்படுத்த முயற்சி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் பேசிய தமிழக உணவு வழங்கல் துறை அமைச்சர் வெங்கட்ரமணன், ” ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மற்ற பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக, சர்க்கரை நமது மாநிலத்தில் மட்டுமல்ல; அதிகமாக உற்பத்தி செய்யும் மகாராஷ்டிராவிலும் விலை உயர்ந்துள்ளது. எல்லா இடங்களிலும் விலை ஏறத்தான் செய்திருக்கிறது. தமிழக முதலமைச்சர் தலைமையிலான கமிட்டியில் வாரந்தோறும் 41 பொருட்களுக்கு உண்டான விலையைத் தினமும் கண்காணிக்கிறோம். வெங்காயம், உருளைக்கிழங்கு, அரிசி எல்லா பொருட்களையும் கண்காணிக்கிறோம். விலை உயர்வு அதிகம் உள்ளவற்றைக் கண்டறிந்து, கடந்த காலங்களில் என்ன நடைமுறைப்படுத்தினோமோ அதைக் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தி, மக்களுக்குப் பாதிப்பு இல்லாத வண்ணம் விலையைக் குறைக்க முயன்று வருகிறோம். ரேஷன் கடைகள் மூலம் மட்டுமல்லாமல், பசுமை கடைகள் மூலமாகவும் விநியோகம் செய்ய சென்ற ஆட்சிக் காலங்களைப் போல் இப்போதும் மக்களுக்கான ஆட்சி செய்யும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்” என்று பதிலளித்தார்.
