வாக்காளர்களின் உணர்வுகளை தூண்டியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர போதுமான காரணியாகாது என்று முதலமைச்சர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றார். திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் அவரது வெற்றியை எதிர்த்து பெரம்பூர் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் , திருச்சி கிழக்கு திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்..
கடந்த 25ஆம் தேதி இந்த வழக்கு நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்த போது, நிராகரிப்பு மனுவை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று விஜய் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதி ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்குள் நிராகரிப்பு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி தனக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மை என்று வைத்துக் கொண்டாலும், அந்த காரணத்துக்காக தனது தேர்தல் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க முடியாது.
குழந்தைகளை பிரச்சாரத்தில் பயன்படுத்தியதாக சொல்லப்படும் குற்றச்சாட்டின் படி, அது எவ்வளவு வாக்குகள் எனக்கு பெற்றுத் தந்தது அல்லது தேர்தல் முடிவை எந்த வகையில் பாதித்தது என்பதற்கான எந்த ஒரு அடிப்படைச் சான்றுகளையும் மனுதாரர்கள் தங்களது மனுவில் சுட்டிக்காட்ட தவறிவிட்டனர். வாக்காளர்கள் உணர்ச்சிபூர்வமாக தூண்டப்பட்டார்கள் என்றோ அதனால் மனுதாரரின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட்டது என்றோ வெறுமனே மொட்டையாக கூறுவது, தேர்தல் வெற்றியை ரத்து செய்வதற்கான போதுமான காரணி அல்ல.
தேர்தலை ரத்து செய்வதற்கான முதன்மையான காரணங்களை மனுவில் குறிப்பிடாமல் வெறுமனே தேர்தல் சட்ட பிரிவுகளை மேற்கோள் காட்டுவதும், ‘கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது’, ‘மறைக்கப்பட்டுள்ளது’, ‘ஊழல் நடவடிக்கை’ போன்ற வார்த்தைகளை திரும்பத் திரும்ப பயன்படுத்துவதும் இந்த வழக்கிற்கான தகுதியான காரணியாக அமையாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தேர்தல் செலவு கணக்கையும் வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெற்றதையும் மறைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதற்கும் எந்த ஒரு ஆதாரங்களும் இல்லை. வழிபாட்டு தலங்களில் பிரச்சாரம் செய்ததாக கூறிய குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் முதல்வர் விஜய்க்கு எதிரான தேர்தல் வழக்கை ஆகஸ்ட் 31ஆம் தேதி நீதிபதி லட்சுமி நாராயணன் விசாரணைக்கு எடுத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அதுபோன்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கும் வரும் திங்களன்று விசாரணைக்கு வரவுள்ளது.
